தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக அடியெடுத்து வைத்திருக்கும் டான் பிக்சர்ஸ் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்திருக்கும் முதல் படம் “இட்லி கடை”. தனுஷே எழுதி இயக்கி நாயகனாகவும் நடித்திருக்கும் இந்த படத்தில் நித்யா மேனன், அருண் விஜய், ஷாலினி பாண்டே, சத்யராஜ், ராஜ்கிரண், பார்த்திபன், சமுத்திரக்கனி, இளவரசு, நரேன், கீதா கைலாசம் என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்திருக்கிறது. ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளளார். ரெட் ஜெயண்ட் மூவீஸில் இன்பன் உதயநிதி பொறுப்பேற்ற பின் வெளியாகும் முதல் படம் எப்படி இருக்கு? பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, தேனி மாவட்டத்தில் சங்கராபுரம் கிராமத்தில் இட்லி கடை நடத்தி வருகிறார் ராஜ்கிரண். அவரை பார்த்தே அவர் சொல்லிக் கொடுத்த நல்ல குணங்களோடு வளரும் அவரின் மகன் தனுஷ் படிப்பை முடித்த பிறகு நாமும் வாழ்க்கையில் உயர வேண்டும், வசதியாக வாழ வேண்டும் என வெளியூர் செல்கிறார். பல ஆண்டு கடின உழைப்பில் பாங்காங்கில் AFC என்ற நிறுவனத்தில் உயர் பொறுப்பில் இருக்கிறார். அந்த நிறுவனத்தின் முதலாளி சத்யராஜ், அவரின் மகள் ஷாலினி பாண்டே தனுஷை காதலிக்க, தனுஷூடன் திருமணம் நிச்சயம் செய்கிறார். திருமணத்திற்கு சில நாட்களுக்கு முன்பு ராஜ்கிரண் இறந்து விட, ஊருக்கு கிளம்பி வருகிறார் தனுஷ். அடுத்த நாளே தாயும் இறந்து போகிறார். உடைந்து போகிறார் தனுஷ். அதே நேரம் அப்பாவின் இட்லி கடை மூடப்பட்டு கிடக்கிறது. அதை பார்க்கும் தனுஷுக்குள் ஏற்படும் மனமாற்றங்கள் என்ன? தனுஷ் திரும்பி பாங்காக் சென்று ஷாலினி பாண்டேவை கரம் பிடித்தாரா? அப்பாவின் இட்லி கடையை எடுத்து நடத்தினாரா? என்பதை எமோஷனலாக சொல்லியிருக்கும் படமே இந்த இட்லி கடை.
நாயகன் தனுஷ். ஆக்ஷன் ஹீரோவாக இல்லாமல் நடிப்புக்குரிய கதாபாத்திரத்தில் வழக்கம் போல ஸ்கோர் செய்கிறார். அன்பு, கோபம், ஆக்ரோஷம், வலி என அனைத்து உணர்வுகளை மிக இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். எமோஷனல் காட்சிகளில் நம்மை கலங்க வைக்கிறார்.
படம் முழுக்க நட்சத்திர பட்டாளமே நிரம்பி இருக்கிறது. ஈகோயிஸ்டிக் வில்லன் கதாபாத்திரத்தில் அருண் விஜய். தனக்கேயுரிய ஆட்டிட்யூட் மூலம் அந்த கதாபாத்திரத்தை அனாயசமாக செய்து முடித்திருக்கிறார். படம் முழுக்க ஒரு திமிரான கதாபாத்திரத்தில், ரொம்பவே ஸ்டைலிஷான வில்லனாக ஸ்கோர் செய்கிறார். நித்யா மேனன் திருச்சிற்றம்பலம் போலவே குடும்பங்கள் கொண்டாடும் ஒரு கதாபாத்திரத்தில் அழகாக பொருத்திக் கொண்டு நம்மை ரசிக்க வைக்கிறார்.
தனுஷின் அப்பாவாக ராஜ்கிரண். அவரின் முகமும், அந்த தெய்வீக பார்வையுமே கதாபாத்திரத்தை பன்மடங்கு உயர்த்தியிருக்கிறது. கோடீஸ்வர தொழிலதிவராக சத்யராஜ், அவரின் மேக்கப், தோற்றம், பாடி லாங்குவேஜிலேயே அசத்தியுள்ளார். ஷாலினி பான்டே அழகு பதுமையாக வந்திருக்கிறார், அவரது கதாபாத்திரத்தின் ட்ரான்ஸ்ஃபர்மேஷன் மிக அழகாக மனதுக்கு நெருக்கமாக அமைகிறது. பார்த்திபன், சமுத்திரக்கனி, இளவரசு, ஆடுகளம் நரேன், கீதா கைலாசம் என மற்ற அனைத்து நடிகர்களுமே மிக இயல்பாக பொருந்திப் போகிறார்கள்.
ஜிவி பிரகாஷின் இசையில் பாடல்கள் எல்லாமே நம்மை 80, 90-களின் இளையராஜா காலத்துக்கு கூட்டிச் செல்கிறது. அவ்வளவு இனிமை. எஞ்சாமி தந்தானே பாடல் காட்சி கண்களுக்கு விருந்து. பின்னணி இசையிலும் நம் மனதை வருடுகிறார். சில இடங்களில் இளையராஜவுக்கு Tribute கொடுத்த உணர்வு எழுகிறது. கிரண் கௌசிக் ஒளிப்பதிவு நகரம், கிராமம், கோடீஸ்வரர்கள், கிராமத்து மக்கள் என இருவேறு துருவங்களையும் மிக அழகாக blend செய்யும் அளவுக்கு சிறப்பாகவே அமைந்திருக்கிறது. சத்யராஜ் குடும்ப காட்சியின் ரிஸ்னஸை திரையில் கொண்டு வந்திருக்கிறார்.
இயக்குனர் தனுஷூக்கு எப்போதுமே அவர் வளர்ந்து வந்தபோது பார்த்த, அனுபவித்த விஷயங்களை மண் மணம் மாறாமல் கொடுக்க வேண்டும் என்ற முனைப்பு இருந்தே வந்திருக்கிறது. இந்த இட்லி கடையிலும் அப்படி தான் சிறுவயதில் பார்த்த சில விஷயங்களை வைத்து ஒரு கற்பனையாக இந்த படத்தை இயக்கியிருக்கிறார். பா பாண்டி, ராயன் , நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என படத்துக்கு படம் வெவ்வேரு ஜானார்களில், கதைக்களங்களில் படங்களை இயக்கி தன்னை நிரூபித்துக் கொண்டே வந்திருக்கிறார். தற்போது இட்லி கடை படத்திலும் ஒரு இயக்குனராக வெற்றியையே பெற்றுள்ளார் தனுஷ்.
எப்போதுமே எமோஷன்ஸ் தான் ஒரு படத்தின் ஆணிவேர் என்பதை உணர்ந்தவரான தனுஷ் இந்த படத்திலும் எமோஷன் காட்சிகளை மிகச் சிறப்பாக எழுதி எடுத்திருக்கிறார். ஹீரோ வில்லன் மோதல் என்பதை எல்லாம் எமோஷன் தான் படத்தை தூக்கி நிறுத்துகிறது. படத்தின் இறுதியில் வரும் “Poetic Justice” அருமை. சொந்த ஊரை மறந்து பொருள் தேடி வெளியூருக்கு சென்ற ஒவ்வொருவருக்கும் இந்த படம் இதயத்தில் ஏதோ ஒரு ரணத்தை ஏற்படுத்தும், குற்ற உணர்வை ஏற்படுத்தும் என்பது நிச்சயம்.
தயாரிப்பாளராக முதல் படத்திலேயே முத்திரை பதித்திருக்கிறார் டான் பிக்சர்ஸ் ஆகாஷ் பாஸ்கரன். அடுத்தடுத்து நல்ல படங்களையே லைன் அப்பில் வைத்திருக்கும் டான் பிக்சர்ஸ் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நிறுவனமாக வளர்ந்து நிற்கும் என்பது இந்த இட்லி கடை படத்தின் மூலம் நிரூபணம் ஆகியிருக்கிறது.
SK CINEMAS RATING: 4.25 / 5

