திட்டம் இரண்டு, ஹாட் ஸ்பாட், அடியே என தான் இயக்கும் ஒவ்வொரு படத்திலும் தன் முத்திரையை பதித்த இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள படம் ஹாட் ஸ்பாட் 2 much. ஏற்கனவே வெளியான முதல் பாகம் மிகப்பெரிய விவாதத்தை கிளப்பியிருந்தது. சமூகத்தில் பேசத் தயங்குகிற பல விஷயங்களையும் அலசியிருந்தது. ட்ரைலர் மட்டுமே சர்ச்சையை ஏற்படுத்தியது, ஆனால் படம் வெளியான பிறகு நல்ல விதமாகவே வரவேற்பை பெற்றிருந்தது. அந்த வரவேற்பைத் தொடர்ந்து இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளார் விக்னேஷ் கார்த்திக். படம் எப்படி இருக்கு? எந்த அளவுக்கு சர்ச்சையான அம்சங்கள் இருக்கிறது? என்பதை பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, ஹாட் ஸ்பாட் முதல் பாகத்தில் விக்னேஷ் கார்த்திக் தயாரிப்பாளரின் மகள் பிரிகிடா சகாவை திருமணம் செய்து கொள்வதாக முடிந்திருக்கும். அதன் தொடர்ச்சியாக நிகழும் கதை தன இந்த பாகம். பிரிகிடா தனக்கு பெண்களை தான் பிடிக்கும், தான் ஒரு லெஸ்பியன் என்பதை உணர்கிறார். அதோடு பிரியா பவானி சங்கரை தொடர்பு கொள்ள, பேசிப் பழகி இருவரும் காதலிக்கிறார்கள். அவர்கள் காதலை விக்னேஷுக்கு எடுத்து சொல்கிறார்கள். ஆனால் தயாரிப்பாளர் அப்பாவிடம் எப்படி சொல்லி சம்மதம் வாங்குவது என்ற சிந்தனையில் இருக்கும்போது முதல் பாகத்தில் எப்படி விக்னேஷ் கதை சொல்லி ஓகே செய்தாரோ, அப்படி பிரியா பவானி சங்கரை கதை சொல்ல அனுப்புகிறார்கள். அவர் சொல்லும் கதைகள் தான் மீதிக்கதை. அதைக் கேட்டு தயாரிப்பாளர் என்ன சொன்னார்? அவர் நிலை என்ன? என்பதை கலகலப்பாக சொல்லியிருக்கிறார்கள்.
முதல் கதையில் சினிமா கதாநாயகர்களுக்கு ரசிகனாக, இல்லை இல்லை பக்தனாக இருக்கும் இளைஞர்களை பற்றியும், அந்த ஹீரோக்களுக்காக வாழ்க்கையை தொலைக்கும் இளைஞர்கள் பற்றியும் சொல்கிறார். அதன் முடிவும் அடப்பாவி என சொல்லும்படி முடிந்திருக்கும். ஆனால் இன்றைய இளைஞர்களுக்கு தேவையான ஒரு செய்தியாகவே அமைந்திருக்கிறது. ரக்ஷன், ஆதித்யா பாஸ்கர் என இரண்டு பேருமே ஹீரோக்களின் ரசிகர்களாக அப்படியே இருக்கிறார்கள்.
அடுத்து வெளிநாட்டுக்கு போய் படித்தி விட்டு வரும் மகள், ஆடை சுதந்திரம், முடிவெடுக்கும் உரிமை போன்றவற்றை பற்றி தலைமுறை இடைவெளியில் இருக்கும் தன் பெற்றோரிடம் பேசும் ஒரு கதை. தம்பி ராமையா தந்தையாக வாழ்ந்திருக்கிறார். மாடர்ன் சிந்தனைகள் மற்றும் தோற்றத்தில் நன்றாகவே நடித்திருக்கிறார் சஞ்சனா திவாரி. தம்பி ராமையா, சஞ்சனா திவாரி இருவருக்குமே கைதட்டல் வாங்கும் அளவுக்கான மோனோலாக் காட்சி ஒன்று உண்டு. இந்த கதையின் சிறப்பான அம்சமாக அமைந்திருக்கிறது அந்த காட்சிகள்.
அடுத்த கதை, காலத்தை கடந்த காதலை பற்றி பேசுகிறது. இங்கு அதை விளக்கி சொன்னால் கதையின் சுவாரஸ்யம் குறைந்து விடும். திரையில் பார்த்துக் கொள்ளுங்கள். அஸ்வின் குமார், பவானி ஸ்ரீ என இருவருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
பிரியா பவானி சங்கர் ஒரே இடத்தில் ஆஃபீஸ் ரூமில் கதை சொல்வது போன்ற காட்சிகள் தான். ஆனாலும் அதிலும் பரிமாணங்கள் காட்டி ரசிக்க வைக்கிறார். அவரது அழகே பாதி வேலையை செய்து விடுகிறது. அஸ்வின் குமார், எம்.எஸ்.பாஸ்கர், தம்பி ராமையா, பிரியா பவானி சங்கர், ரக்ஷன், ஆதித்யா பாஸ்கர், சஞ்சனா திவாரி, பிரிகிடா சகா ஆகியோரை தவிர்த்து சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்தவர்கள் என அனைவருமே நல்ல நடிப்பை வழங்கியுள்ளனர். பாலமணிமார்பன் இந்த படத்திலும் அதே அப்பா கதாபாத்திரத்தில் ஸ்கோர் செய்கிறார்.
ஜெகதீஷ் ரவி, ஜோசப் பால் ஒளிப்பதிவு கூடுமான வரை படத்தை கொஞ்சம் மெருகேற்றி காட்டியிருக்கிறது. சதீஷ் ரகுநாதன் இசை படத்துக்கு தேவையான இசையை வழங்கியிருக்கிறது.
இயக்குனர் விக்னேஷ் கார்த்திக். முதல் படம் ஏண்டா தலைல எண்ணெய் வைக்கல படத்தில் இருந்தே வித்தியாசமான முயற்சிகளின் மூலமே தனித்து தெரிகிறார். ஒவ்வொரு படத்திலும் இப்படி இருக்குமோ என நினைக்கும்போது முற்றிலும் வேறாக ஒரு தளத்துக்கு படத்தை நகர்த்தும் திறன் படைத்தவர். இந்த படத்திலும் புரட்டிப் போடும் விஷயங்களை செய்ய முயற்சித்திருக்கிறார். ஆனால் முதல் பாகத்தின் வீச்சு இந்த பாகத்தை அந்த பாகத்தோடு ஒப்பீடு செய்ய வைக்கிறது. ஆனாலும் எடுத்துக் கொண்ட கதைகளுக்கு நியாயம் சேர்த்திருக்கிறார். தம்பி ராமையா கதை அனைத்து ரசிகர்களையும் ரசித்துப் பார்க்க வைக்கும். அந்த செய்தியும் எளிதாக சென்றடையும். மூன்றாவது கதை கொஞ்சம் ரசிகர்களை குழப்பவும் செய்யலாம், இந்த கதைக்கு என்ன சம்பந்தம் எனவும் எண்ண வைக்கலாம். மொத்தத்தில் ஹாட் ஸ்பாட் முதல் பாகத்தை மிஞ்சவில்லை என்றாலும் நிச்சயம் வித்தியாசங்களை விரும்பும் ரசிகர்கள் கொண்டாடுவர்.

