தெலுங்கு சினிமாவில் ஒவ்வொரு படத்திலும் ஏதாவது ஒரு புதுமையான விஷயத்துடன் படத்தை கொடுக்கும் ஒரு முன்னணி ஹீரோ நானி. தசரா, ஹை நானா, அண்டே சுந்தரானிகி, சூர்யா சாட்டர்டே படங்களை தொடர்ந்து நானி நடித்துள்ள படம் “ஹிட் 3”, அதாவது ஹிட் 3rd கேஸ். பெரும் வெற்றி பெற்ற ஹிட், ஹிட் 2 படங்களின் மூன்றாம் பாகம். படத்தில் அதீத வன்முறை இருக்கும், படத்துக்கு A சான்றிதழ், குடும்ப, குழந்தை ரசிகர்களே மன்னிச்சிருங்க என்று நானி சொல்லும் அளவுக்கு வன்முறை காட்சிகள் இருக்கும் படமாக வந்திருக்கும் இந்த ஹிட் 3 எப்படி இருக்கு? பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, ஒரே பாணியிலான சில கொலைகளை கவனிக்கும் ஹீரோ நானி, அந்த வழக்கு விசாரணைக்கு இடையே ஒரே பாணியில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பலர் அதே பாணியில் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருக்கும் தகவல் கிடைக்க, அந்த வழக்கை விசரிக்க எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருக்கும் நானி, அதன்பிறகு என்ன செய்கிறார்? அதன் பின்னணியில் இருக்கும் ஒரு டார்க் வேர்ல்ட், அதை இயக்குவது யார்?, அவர்களின் நோக்கம் என்ன? என்பதே மீதிக்கதை.
காவல்துறை அதிகாரியாக கம்பீரமாக, ஆக்ரோஷமான இளைஞராக, கோபக்கார இளைஞராக நடித்திருக்கும் நானி அந்த கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார். அவரின் மேனரிஸம், காதல் காட்சிகளிலும் ரஃபாக இருக்கும் அவரின் மேனரிஸம், இரண்டாம் பாதியில் சண்டைக்காட்சிகளிலும் அதகளம் செய்திருக்கிறார்.
நாயகியாக ஸ்ரீநிதி ஷெட்டி. சில காட்சிகளில் மட்டுமே வந்து போகிறார். இரண்டாம் பாதியில் சில காட்சிகளில் வந்தாலும் பெரிய அளவுக்கு அழுத்தம் இல்லாத கதாபாத்திரம். ஆனாலும் வந்த காட்சிகளில் தன் பங்கை செய்துள்ளார். வில்லனாக பிரதீக் பாபர். பெரிய அளவில் நடிப்பதற்கு ஸ்கோப் இல்லை. ராவ் ரமேஷ், சமுத்திரகனி, கோமளி பிரசாத், மகந்தி ஸ்ரீநாத், ரவீந்திரா விஜய், அமித் சர்மா என நடிகர்களும் தங்கள் பங்கை நன்றாகவே செய்திருக்கிறார்கள்.
சானு ஜான் வர்கீஸ் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. காஷ்மீர் காட்சிகளாகட்டும், சண்டைக்காட்சிகள் மற்றும் வன்முறை காட்சிகளையும் நன்றாகவே காட்சிப்படுத்தியுள்ளார். மிக்கி ஜே.மேயரின் பின்னணி இசை படத்தின் தன்மையை அடுத்த தளத்துக்கு எடுத்துச் செல்கிறது. குறிப்பாக இரண்டாம் பாதியில் பல இடங்களில் டெம்போவை எகிற வைத்திருக்கிறார்.
சைலேஷ் கோலானு ஹிட், ஹிட் 2 படங்களின் வெற்றிக்குப் பிறகு மூன்றாவது இன்ஸ்டால்மெண்டாக கொடுத்திருக்கும் இந்த படம், கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானரை தாண்டி வன்முறை கலந்த ஆக்ஷன் படமாகவே மாறியிருக்கிறது. அதற்கேற்ப படம் முழுக்க ஆக்ஷன் மற்றும் வன்முறை காட்சிகளே நிரம்பியிருக்கிறது. நான்காம் பாகத்துக்கு அவர் கொடுத்திருக்கும் லீட் சுவாரஸ்யமாக இருக்கிறது, குறிப்பாக தமிழ் ரசிகர்களுக்கு. ஆக்ஷன் வன்முறை படங்களை விரும்பி ரசிக்கும் ரசிகர்கள் நிச்சயமாக கொண்டாடுவார்கள்.