க்ராணி (Granny) – விமர்சனம்!

விஜயா மேரி யுனிவர்சல் மீடியா தயாரிப்பில் இயக்குனர் விஜயகுமாரன் இயக்கியுள்ள படம் ‘க்ராணி (Granny). நடிகை வடிவுக்கரசி முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தில் சிங்கம் புலி, திலீபன், அபர்ணா, கஜராஜ், ஆனந்த் நாக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஃபேண்டஸி ஹாரர் திரில்லர் படமாக உருவாகியுள்ள இந்த படம் எப்படி இருக்கு? பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, ஐடி வேலையை விட்டு விட்டு ஊருக்கு வந்து குடும்பத்துடன் பூர்வீக வீட்டில் தங்கி விவசாயம் செய்யும் முடிவோடு வந்து தங்குகிறார் அனந்த் நாக். அந்த நேரத்தில் அவர் வீட்டு வாசலில் தள்ளாத வயதில் தடி ஊன்றி நடந்து வந்து தடுமாறி விழுகிறார் வடிவுக்கரசி. அவரை தூக்கி வந்து வீட்டில் அடைக்கலம் தருகிறார். அதே நேரம் அந்த ஊரில் ஒரு சிறுமி கொலை செய்யப்பட்டு இதயத்தை மட்டும் யாரோ எடுத்துச் சென்றது தெரிய வருகிறது. அந்த கொலையை விசாரிக்கும் போலீஸ் அதிகாரி திலீபன் மற்றும் சிங்கம் புலிக்கு அடுத்தடுத்து அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரிய வருகிறது. அந்த பாட்டி வடிவுக்கரசியின் பின்னணியை கேட்டு அதிர்ச்சி அடைகிறார்கள். உண்மையில் வடிவுக்கரசி யார்? அந்த ஊரில் நடக்கும் குற்றச் செயல்களுக்கு காரணம் யார்? அந்த வீட்டில் நடக்கும் அமானுஷ்யம் என்ன? என்பதை திகிலூட்டும் விதத்தில் சொல்லியிருக்கிறார்கள்.

படத்தின் கதையின் மையக் கதாபாத்திரத்தில் வடிவுக்கரசி. கோரமான முகம், பார்வை என அவரது தோற்றத்திலேயே மிரட்டுகிறார். அருணாச்சலம் படத்திலேயே மிரட்டிய வடிவுக்கரசி இந்த படத்தில் அதை ஓவர்டேக் செய்திருக்கிறார். இரண்டாம் பாதி முழுக்க அவர் கட்டுப்பாட்டில் தான் எல்லாமே. என்ன கதாபாத்திரம், அவரது பின்னணி என்ன என்பதை திரையில் பார்த்தால் முழு அனுபவம் கிடைக்கும்.

போலீஸ் அதிகாரியாக திலீபன், அந்த கதாபாத்திரத்துக்கு கச்சிதமாக பொருந்துகிறார். அவரும் சிங்கம் புலியும் இணைந்து வழக்கை விசாரிக்கும் காட்சிகள் எல்லாம் நன்றாகவே ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. ஆரம்பத்தில் எதிரும் புதிருமாக மாறுவார்களோ என நினைக்கும்போது கதையின் போக்கில் இருவரும் ஒரே நோக்கத்தோடு செயல்படுவது ரசிக்க வைக்கிறது. அந்த ஊரின் பெரிய மனிதராக கஜ ராஜ், அந்த வீட்டில் குடும்பத்துடன் வந்து தங்கும் ஆனந்த் நாக், அபர்ணா, மாஸ்டர் கன்ஷ்யாம், தேவி சான்ட்ரியா மற்றும் மற்ற நடிகர்கள் எல்லோருமே சிறப்பான பங்களிப்பை கொடுத்திருக்கிறார்கள்.

ஏ.மணிகண்டன் ஒளிப்பதிவு இந்த படத்திற்கும் கதைக் களத்திற்கும் மிக மிக நியாயம் சேர்த்திருக்கிறது. இருட்டில் நடக்கும் காட்சிகள், அந்த வீட்டிற்குள் நடக்கும் காட்சிகள் என இயற்கை வெளிச்சம் மற்றும் குறைந்த வெளிச்சத்தில் மிக சிறப்பாகவே படமாக்கியிருக்கிறார். செல்லையா பாண்டியன் படத்தின் தன்மைக்கேற்ப மிகச் சிறப்பாக இசையமைத்திருக்கிறார். திகிலூட்டும் காட்சிகள் இடையே இவரது இசை அதை மேலும் திகிலை தருகிறது. எடிட்டிங் மற்றும் மேக்கப்புக்கும் பாராட்டுக்கள்.

இயக்குனர் விஜயகுமாரன், மிக வித்தியாசமான ஒரு ஃபேண்டஸி ஹாரர் படத்தை எந்த குழப்பமும் இல்லாமல் எழுதி அதை படமாகவும் திரையில் தந்திருக்கிறார். முதல் காட்சியிலேயே கதைக்குள் செல்கிறது படம். இரண்டு கோணங்களில் நகரும் கதை இணையும் அந்த புள்ளி படத்தை மேலும் சுவாரஸ்யமாக்குகிறது. பின்னணி கதையை சொன்ன விதமும், அந்த கதையில் சொன்ன விதமும் மிகப்பெரிய அதிர்ச்சியை தருகிறது. 80, 90களில் வந்த சில திகில் படங்களின் அனுபவங்களை இந்த படமும் நமக்கு தருகிறது. அந்த குழந்தைகள் மாட்டிக் கொள்ளும் காட்சிகள் பதைபதைக்க வைக்கிறது. கிளைமாக்ஸில் சிங்கம் புலி காட்சியை மறக்க முடியாது. இரண்டாம் பாகத்துக்கு லீடு வைத்து இயக்குனர் சிறப்பாகவே முடித்திருக்கிறார். இரண்டாம் பாகத்தில் என்ன கதை சொல்லுவார் என்ற ஆர்வத்தை தூண்டுகிறார். மொத்தத்தில் எல்லோரும் பார்த்து ரசிக்கக் கூடிய ஒரு ஹாரர் திரில்லர் படமாக வெற்றி பெற்றிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *