அஷோக் செல்வன், அவந்திகா மிஷ்ரா நடிப்பில் உருவாகி இருக்கும் ரொமாண்டிக் காமெடி திரைப்படம் எமக்கு தொழில் ரொமான்ஸ். பாலாஜி கேசவன் இயக்கியிருக்கும் இந்த படத்தை இயக்குனர் திருமலை டி கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்திருக்கிறார். கலகலப்பான ரொமாண்டிக் காமெடி படங்கள் என்றாலே ரசிகர்கள் திரையரங்குகளுக்கு படையெடுப்பார்கள். மீண்டும் மீண்டும் வந்து பார்த்து ரசிப்பார்கள். அந்த வகையில் இந்த படமும் அமைந்ததா? பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, சினிமாவில் உதவி இயக்குனராக இருக்கும் உமாசங்கர் (அஷோக் செல்வன்), அவர் உதவி இயக்குனராக வேலை பார்த்த படம் அட்டர் ஃப்ளாப் ஆகி விட, அந்த சோகத்தில் இருக்கும்போது லியோவை (அவந்திகா மிஷ்ரா) யதேச்சையாக பார்க்கிறார். பார்த்தவுடன் காதலில் விழ, படிப்படியாக பேசிப்பேசி காதலை சொல்லி நாயகியையும் காதல் வயப்படுத்துகிறார். இந்த நிலையில் அவரின் தோழி சரண்யாவை காதலன் பிரஷாந்த் கர்ப்பமாக்கி விட்டு, அமெரிக்க சென்று விடுகிறான். அந்த கருவை கலைக்க தன் நண்பன் உமாசங்கர் உதவியை நாட, அவனும் உதவி செய்யப்போக அதுவே அவன் காதலுக்கு வேட்டு வைக்கும் நிலை உருவாகிறது. நாயகிக்கு உண்மை நிலையை எப்படி விளக்கினார்? அதற்கிடையில் நடக்கும் குளறுபடிகள் என ரகளையோ ரகளையாக சொல்லியிருக்கும் ரொமாண்டிக் காமெடி படம் தான் இந்த “எமக்கு தொழில் ரொமான்ஸ்”.
நாயகன் அஷோக் செல்வன் தனக்கேயுரிய குறும்புத்தனத்துடன் ரகளை செய்கிறார். காதல் காட்சிகளில் இளமை துள்ளல். முதல் படத்தின் பெயரை சொல்லி அவமானப்படும் இடங்கள், காதலை காப்பாற்ற எடுக்கும் முயற்சிகளை சமாளிக்கும் தருணங்கள் என நம்மை சிரிக்க வைக்கிறார். நாயகி அவந்திகா மிஷ்ரா, நல்ல தேர்வு. உறுத்தல் இல்லாத நடிப்பு. பாடல் காட்சிகளில் அழகாக வந்து போகிறார். தான் ஏமாற்றப்பட்டு விட்டோமோ என சந்தேகப்படும் காட்சிகளில் நல்ல நடிப்பு.
அஷோக் செல்வனின் நண்பர்களாக வரும் விஜய் வரதராஜ், மதுமிளா நடிக்க வாய்ப்பு கேட்டு பின்னாலே அலையும் பகவதி பெருமாள், மாஸ் கமெர்சியல் இயக்குனராக பாலாஜி தரணீதரன் என காமெடியில் ரகளை செய்கிறார்கள். அவர்களோடு நாயகனின் குடும்பத்தினராக வரும் ஊர்வசி, படவா கோபி, அழகம் பெருமாள் ஆகியோரும் தங்கள் பங்கை சிறப்பாகவே செய்திருக்கிறார்கள். எம்.எஸ்.பாஸ்கர் ஒரு காட்சியில் வந்தாலும் ஸ்கோர் செய்கிறார்.
கணேஷ் சந்திரா ஒளிப்பதிவில் அந்த பீச் பாடல் கண்களுக்கு குளிர்ச்சி. மற்றபடி ஒரு ரொமான்டிக் காமெடி படத்துக்கு தேவையான நல்ல கலர்ஃபுல்லான ஒளிப்பதிவை செய்திருக்கிறார். நிவாஸ் கே.பிரசன்னா இசையில் பாடல் ரசிக்கும் விதம். பின்னணி இசை மட்டும் அவர் தான் இசையமைத்தாரா? என்று கேட்கும்படி உள்ளது. பாடலின் இசையை பின்னணியில் வரும் இடங்கள் ஓகே, மற்ற நேரங்களில் பின்னணி இசை சுமார் தான்.
பாலாஜி கேசவன் குடும்பத்துடன் ரசிக்கும் வகையில் ஒரு நல்ல பொழுதுபோக்கு திரைப்படத்தை கொடுக்க முயற்சி செய்து அதில் ஓரளவு வெற்றியையும் பெற்றிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். முதல் பாதியில் சில காட்சிகள் வழக்கமான தமிழ் சினிமா காமெடிகளாக நகர்ந்தாலும் சில இடங்களில் சுவாரஸ்யமின்மை தென்பட்டாலும், கதையை செட் செய்த பின் இரண்டாம் பாதியில் நடிகர்கள் காமெடியில் பின்னி எடுக்க களத்தை அமைத்து கொடுத்திருக்கிறார். காண்டாமிருகம் படத்தை பற்றிய காட்சிகள் ஆங்காங்கே ரசிக்க வைக்கிறது. இரண்டாம் பாதியில் பல காமெடி காட்சிகள் விழுந்து விழுந்து சிரிக்கும் ரகம். அதில் ஸ்கோர் செய்து நல்ல ஒரு திருப்தியான படத்துடன் நம்மை வெளியில் அனுப்புகிறார்.