ட்யூட் – விமர்சனம்!

லவ் டுடே, ட்ராகன் படங்களின் பிளாக்பஸ்டர் வெற்றிகளுக்குப் பிறகு பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அறிமுக இயக்குனர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் படம் “ட்யூட்”. பிரேமலு மமிதா பைஜூ நாயகியாக நடிக்க சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சாப் அபயங்கர் இசையில் தமிழில் வெளியாகும் முதல் படம். பிரதீப்புக்கு ஹாட்ரிக் பிளாக்பஸ்டராக அமைந்ததா? பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, பிரதீப் ரங்கநாதனும், மமிதா பைஜூவும் சிறு வயதிலிருந்தே நண்பர்களாக வழகி வருகிறார்கள். இருவரும் அத்தை மகன், மாமன் மகள் வேறு. நண்பர்களுடன் இணைந்து சர்ப்ரைஸ் ஈவென்ட் ப்ளானிங் நிறுவனம் நடத்தி வருகிறார்கள். ஒரு கட்டத்தில் மமிதா பைஜூ பிரதீப்புக்கு புரபோஸ் செய்கிறார். ஆனால் பிரதீப் ஏற்க மறுத்து விடுகிறார். மமிதா அதை மறக்க, வெளியூருக்கு படிக்க செல்கிறார். பின் சில மாதங்கள் கழித்து பிரதீப்புக்கு மமிதா மீது காதல் வருகிறது. அந்த நேரத்தில் அவரது மாமா சரத்குமார் இருவருக்கும் திருமணத்தையும் ஏற்பாடு செய்கிறார். அப்போது மமிதா ஹ்ருது ஹாரூனை காதலிக்கும் விஷயத்தை போட்டு உடைக்கிறார். இந்த சூழலில் பிரதீப் காதல் என்ன ஆனது? மமிதாவின் காதல் என்ன ஆனது? அவர்கள் திருமணம் என்ன ஆனது? என்பதே மீதிக்கதை.

பிரதீப் ரங்கநாதன், இன்றைய இளைஞர்களின் பல்சை மிகச்சரியாக பிடித்த ஒரு இயக்குனர் மற்றும் ஹீரோ என்பது அவரின் கதைத் தேர்விலேயே தெரிகிறது. முந்தைய இரண்டு படங்களிலுமே இளம் ரசிகர்கள் மட்டுமின்றி குடும்ப ரசிகர்களையும் கவர்ந்த, மகிழ்வித்த பிரதீப், இந்த படத்திலும் அவர்களை தன் நடிப்பாலும், மேனரிசங்களாலும் கவர்கிறார். ஜாக்கி சான் போல ஜாலியான சாகசங்களை செய்திருப்பது குழந்தைகள் முதல் அனைவரையும் ரசிக்க வைக்கிறது. வழக்கம் போல அவரின் பாடி லாங்குவேஜ் டயலாக் டெலிவரியிலும் ரசிக்க வைக்கிறார். இந்த மாதிரி ஜாலியான படங்களை செய்ய தமிழ் சினிமாவில் ஹீரோக்கள் பஞ்சம் இருப்பது உண்மை. அந்த பஞ்சத்தை ஓரளவு போக்குகிறார் பிரதீப். பிரதீப் மமிதாவின் கெமிஸ்ட்ரியும் அவ்வளவு அழகு. பிரேமலு படத்தில் பார்த்த மமிதா இந்த படத்தில் இன்னொரு பரிமாணத்தில் ரசிக்க வைக்கிறார். தமிழ் இளைஞர்களின் Heartthrob-ஆக இந்த படத்தின் மூலமும் தொடர்கிறார். இந்த ஜோடியின் ரகளை காமெடியிலும் கலக்கி எடுத்திருக்கிறது.

பிரதீப்பின் மாமாவாக, மமிதாவின் அப்பாவாக நல்லவரா, கெட்டவரா என குழப்பும்படியான ஒரு அமைச்சர் கதாபாத்திரத்தில் சரத்குமார். ஆரம்பத்தில் காமெடியன் போல என்ட்ரி ஆகி, பின் முரட்டு வில்லனாக மாறி பின் மனம் மாறும் கதாபாத்திரம். சாதாரண கதாபாத்திர போல துவங்கி இறுதியில் முழுமை அடைந்த கதாபாத்திரமாக மாறியிருக்கிறது. ஹ்ருது ஹாரூன் முக்கியமான காட்சியில் ரசிக்க வைக்கிறார். பிரதீப் மமிதாவுடன் அவர் வரும் காட்சிகள் எல்லாமே தியேட்டர் களைகட்டுகிறது. பிரதீப் அம்மாவாக சின்ன கதாபாத்திரம் என்றாலும் நிறைவாக செய்திருக்கிறார் ரோகிணி. நேஹா ஷெட்டி பிரதீப்பின் முன்னாள் காதலியாக வருகிறார். அவர் வரும் காட்சிகளும் அட்ராசிட்டி தான். அவரது கணவராக தெலுங்கு நடிகர் சத்யா சிரிக்க வைக்கிறார். டிராவிட் செல்வம் பிரதீப்பின் நண்பராக சில காட்சிகலே வந்தாலும் மனதில் நிற்கிறார். குறிப்பாக தூ தூ தூ என துப்பும் காட்சி தியேட்டரில் அதகளம்.

சாய் அபயங்கர் இசையில் வெளியாகி இருக்கும் முதல் தமிழ் படம். மிகச்சிறப்பான ஒரு அறிமுக படமாகவே அமைந்திருக்கிறது. ஊரும் ப்ளட் பாடல் திரையில் தெறிக்கிறது. மற்ற பாடல்களும் ரசிக்க வைக்கிறது. பின்னணி இசையிலும் காதலை அள்ளித் தெளிக்கிறது. காதல் உணர்வை நமக்குள்ளும் கடத்துகிறது. சூரரைப் போற்று ஒளிப்பதிவாளர் நிகேத் பொம்மியின் ஒளிப்பதிவு படத்தை மிக கலர்ஃபுல்லாகவும், ரிச்சாகவும் தந்திருக்கிறது.

இன்றைய மார்டன் இளைஞர்களின் வாழ்வியலை மிக யதார்த்தமாகவும் சில இடங்களில் சினிமாத்தனத்துடனும் காட்டி ஒரு காதல் படத்தை கொடுக்க முயன்றிருக்கிறார் அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன். இந்த ஜென் Z படத்திற்குள் ஆணவப்படுகொலை, இப்போதும் ஆழ வேறூன்றி இருக்கும் சாதி வெறி போன்றவற்றையும் பதிவு செய்திருக்கிறார். இதெல்லாம் ஒரு காரணமா என நாம் நினைக்கும் ஒவ்வொரு காட்சிக்கும் அடுத்த காட்சியில் அந்த சிக்கலுக்கான வலுவான காரணங்கள் சொல்லி நம்மை கன்வின்ஸ் செய்கிறார் இயக்குனர்.

ஆங்காங்கே பல வசனங்களும் கிளாப்ஸ் வாங்க வைக்கின்றன. வாழ்க்கைல சில விஷயங்கள லெஃப்ல டீல் பண்ணா, வாழ்க்கை நம்மள லெஃப்ல டீல் பண்ணும், தாலிக்கு மரியாதை இல்ல, அதுக்கு பின்னாடி இருக்குர பொண்ணோட ஃபீலிங்ஸூக்கு தான் மரியாதை என நன்றாகவே இருக்கிறது.

ஆனாலும் மமிதா பைஜூவின் காதலில் இருக்கும் குழப்பமும் நம்மால் அதை சீரியஸாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. அதே போல சில காட்சிகள் எமோஷனலா? காமெடியா என தெரியாத வண்ணம் இருப்பதும் படத்துடன் சில இடங்களில் ஒன்ற மறுக்கிறது. ஆனாலும் படம் முழுக்க இருக்கும் பொழுதுபோக்கு அம்சங்கள் நம்மை அதையெல்லாம் யோசிக்க விடாமல் ரசிக்க வைத்து ஒரு எண்டர்டெயினர் படமாக மனதில் பதிகிறது. கொஞ்சம் சென்சிட்டிவான கண்டெண்ட், அதை தைரியமான அணுகியிருக்கும் இயக்குனருக்கு வாழ்த்துக்கள். மொத்தத்தில் தீபாவளிக்கு ஒரு ஜாலியான எண்டர்டெயினராக குடும்பத்துடன் பார்க்கலாம். பிரதீப் கேரியரில் இந்த ட்யூட் இன்னுமொரு வெற்றிப்படம், ஆனால் ஹிட்டா? பிளாக்பஸ்டரா என்பது தான் நம் முன் இருக்கும் கேள்வியே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *