ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர், ஃபர்ஹானா என தனித்துவமான படங்களை தந்து இயக்குனர்களில் தனக்கென தனி ஒரு முத்திரையை பதித்த நெல்சன் வெங்கடேசன் இயக்கியிருக்கும் அடுத்த படம் ‘டிஎன்ஏ’. ஒலிம்பியா மூவிஸ் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரித்துள்ள இந்த படத்தில் அதர்வா, நிமிஷா சஜயன், மானசா சௌத்ரி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். குழந்தைகள் கடத்தலை மையமாக வைத்து ஒரு திரில்லர் படமாக உருவாகியிருக்கும் இந்த படம், எப்படி இருக்கு? பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, தன் காதல் பிரிவால் குடித்து குடித்து குடிக்கு அடிமையாகி இருக்கும் அதர்வாவை போதை மறுவாழ்வுக்கு மையத்துக்கு அனுப்பி மீட்க முயற்சிக்கிறார்கள். பார்டர்லைன் பர்சனாலிட்டி டிஸார்டர் பாதிப்பில் இருக்கும் நிமிஷா சஜயனுக்கு அவர்கள் வீட்டில் திருமணம் செய்து வைக்க முயற்சிக்க எதுவும் கைகூடாமலே இருக்கிறது. இந்த நிலையில் அதர்வா, நிமிஷா சஜயனுக்கு திருமணம் நடக்க, பழைய விஷயங்கள் மறைந்து மகிழ்ச்சியுடன் வாழ்க்கையை நடத்துகிறார்கள். நிமிஷா சஜயனுக்கு குழந்தை பிறக்க, பிறந்த அடுத்து சில நிமிடங்களிலேயே அந்த குழந்தையை கையில் வாங்கிய நிமிஷா அது தன்னுடைய குழந்தை இல்லை என குண்டைப் போடுகிறார். அவர்கள் குடும்பமும், மருத்துவமனை நிர்வாகமும் அவருக்கு இருக்கும் BPD-யால் தான் இப்படி பேசுகிறார் என முடிவுக்கு வருகிறார்கள். ஒரு கட்டத்தில் நாயகன் அதர்வா, நிமிஷா சஜயனுக்கு ஆதரவாக குழந்தையை பற்றி அறிய முயற்சி எடுக்கிறார். உண்மையில் அந்த குழந்தை யாருடையது? இவர்கள் குழந்தை என்ன ஆனது? இதன் பின்னணி என்ன? என்பதை 2:19 மணி நேரம் திரில்லராக சொல்லியிருக்கும் படம் தான் டிஎன்ஏ.
நாயகன் அதர்வா. நீண்ட இடைவெளிக்கு பிறகு அதர்வாவுக்கு நல்ல ஒரு கம்பேக் படம் என்றே சொல்லலாம். நடிப்புக்கும் சரி, ஆக்ஷனுக்கு சரி அவருக்கு நல்ல ஒரு தீனி. குடிகாரனாக திரியும் காட்சிகள், ஒரு குழந்தைக்கு தந்தையாக பலவித உணர்ச்சிகளை தாங்கி நடிக்கும் காட்சிகள் என எல்லாவற்றிலும் ஸ்கோர் செய்கிறார். நிமிஷா சஜயன் உடனான காட்சிகளிலும் இருவருக்குமான அந்த கெமிஸ்ட்ரி கன கச்சிதம். நிமிஷா சஜயன் மீண்டும் ஒரு முறை தான் ஒரு சிறந்த நடிகை என்பதை நிரூபித்திருக்கும் படம் இது. இசை வெளியீட்டு விழாவில் அதர்வாவுடன் அவர் செய்த சேட்டைகள் கூட இந்த படத்தினுடைய கதாபாத்திரத்தின் தன்மை தான் என்பது படம் பார்த்த பின் புரிகிறது. ஒரு தாய்க்கு தெரியும் தன் பிள்ளை யார் என்று சொல்லக் கேட்டிருக்கிறோம். இவர் நடிப்பின் மூலம் அதை உணரவே வைத்திருக்கிறார.
மானசா சௌத்ரி சில நிமிடங்கள் வந்து போனாலும் அந்த காதல் காட்சிகளில் அழகு. நாயகனின் நண்பனாக வரும் ரமேஷ் திலக் ஆரம்ப காட்சிகளுக்கு பின் காணாமல் போகிறார். முக்கியமான காட்சியில் அறிமுகமாகும் பாலாஜி சக்திவேல் படம் முழுக்க பயணித்து நம் மனதில் ஆழமாக பதிகிறார். அதர்வா, பாலாஜி சக்திவேல் காட்சிகளை பார்க்கும்போது நமக்கு போர்த்தொழில் படம் நினைவுக்கு வந்து விட்டு போகிறது. ஒரு Buddy Cop film பார்த்த உணர்வும் கிடைக்கிறது. விஜி சந்திரசேகர், சேத்தன், ரித்விகா, சுப்பிரமணியம் சிவா, கருணாகரன், போஸ் வெங்கட், அந்த பாட்டி கதாபாத்திரத்தில் நடித்தவர், படத்தின் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் என எல்லோருமே தங்கள் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
பார்த்திபன் ஒளிப்பதிவு படத்துக்கு பெரும் பலமாக அமைந்துள்ளது. பல காட்சிகளில் அந்த டென்ஷனை நமக்கு தருகிறது. ஸ்ரீகாந்த் ஹரிஹரன், சகி சிவா, பிரவீண் சைவி, சத்ய பிரகாஷ், அனல் ஆகாஷ் என ஐந்து இசையமைப்பாளர்களும் தந்த பாடல்கள் எல்லாம் ஓகே ரகம் தான். ஜிப்ரான் வைபோதா பின்னணி இசை படத்தை தூக்கிப் பிடித்திருக்கிறது. முக்கியமாக பல காட்சிகளில் பதைபதைப்பை உண்டாக்குகிறது.
இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் மென்மையான படங்களையும், உறவுகளை பேசும் படங்களையும் தந்தவர். ஃபர்ஹானா படத்தை நல்ல ஒரு திரில்லராக தந்தவர் இந்த படத்தில் இன்னும் ஒரு படி மேலே போய் இதுவரை யாரும் தொடாத ஒரு விஷயத்தை சொல்லியிருக்கிறார். அதை விறுவிறுப்பான திரைக்கதை மூலம் இன்னும் சுவாரஸ்யப்படுத்தி இருக்கிறார். ஆரம்ப காட்சிகளில் இருந்து மையக்கதைக்க்ய் வர கொஞ்சம் நேரம் எடுத்துக் கொண்டாலும் அங்கிருந்து படம் ஜெட் வேகத்தில் பயணிக்கிறது. அடுத்து என்ன அடுத்து என்ன என மிக அழகாக நகர்த்திக் கொண்டு போகிறார். நடக்கும் சம்பவங்களை பதட்டத்துடனும், அதற்கான காரணங்களை அட போடும் விதமும் சொல்லி நம்மை சீட்டில் கட்டிப் போடுகிறார். நல்ல கதையும், களமும், நடிகர்களும் அமைந்தால் வெற்றி நிச்சயம். இந்த படமும் அதற்கு விதிவிலக்கல்ல.

