தேசிய தலைவர் – விமர்சனம்!

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து உருவாகியிருக்கும் படம் “தேசிய தலைவர்”. ஊமை விழிகள் இயக்குநர் அரவிந்த்ராஜ் இயக்க, ஜே.எம்.பஷீர் முத்துராமலிங்க தேவராக நடித்திருக்கிறார். இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாக தயாரிப்பில் இருந்த இந்த படம் மிகச் சரியாக தேவர் ஜெயந்தியை கொண்டாடும் அதே நாளில் முத்துராமலிங்க தேவர் பிறந்த நாளான அக்டோபர் 30ஆம் தேதியே வெளியாகி இருப்பதும் கூடுதல் சிறப்பம்சம். இந்த தலைமுறையில் தேவர் பற்றி அறிந்திராத இளம் தலைமுறைக்கும் இந்த படம் சென்று சேர வேண்டிய தேவை இருக்கிறது. படமாக எப்படி இருக்கிறது, அவரது வரலாறு முழுமையாக சொல்லப்பட்டிருக்கிறதா? என்பதை பார்க்கலாம்.

தேசியமும் தெய்வீகமும் எனது இரண்டு கண்கள் என்று முழங்கி அதற்கேற்ப தன் வாழ்க்கையையும் வாழ்ந்து காட்டியவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர். அவரது இளமைக் காலம் முதல் அவர் மறைந்தது வரை அவரது வாழ்வின் முக்கியமான விஷயங்களை நினைவு கூர்ந்திருக்கிறது இந்த படம். இளம் வயதிலேயே தாயை இழந்து முஸ்லீம் அன்னையின் அன்பில் வளர்ந்தது முதல் எந்த ஒரு பெண்ணையும் தொடாமல் பிரம்மச்சரிய வாழ்வை மேற்கொண்டது, ஒடுக்கப்பட்ட மக்களை அழைத்துக் கொண்டு கோவில் நுழைவு போராட்டம் மேற்கொண்டது, காமராஜரின் அரசியல் வாழ்வில் முக்கியமான ஒரு ஊக்கியாக செயல்பட்டது, சுதந்திர போராட்டத்திலும் தன்னை இணைத்துக் கொண்டது, சுபாஷ் சந்திர போஸின் வழியை பின்பற்றி அவரது போராட்ட வழிமுறையை கையில் எடுத்தது, ஆன்மீகத்தில் முழுக்க தன்னை அர்ப்பணித்துக் கொண்டது என அவரின் ஒவ்வொரு வாழ்க்கை பக்கமும் சுவாரஸ்யம் நிறைந்ததாகவும், அவர் மீதான மரியாதை பன்மடங்கு கூடும் அளவுக்கும் இருந்ததோடு பல இடங்களில் நம் மனதில் உயர்ந்து நிற்கிறார் முத்துராலிங்க தேவர்.

முத்துராமலிங்க தேவராக ஜே.எம்.பஷீர் தோற்றத்திலும் நடிப்பிலும் அப்படியே முத்துராமலிங்க தேவரை பிரதிபலிக்கிறார். அளவான நடிப்பு, அளவான கண் அசைவுகள் என நன்றாகவே நடித்திருக்கிறார். நெற்றி முழுக்க திருநீறு பூசி, வெள்ளுடையில் பவனி வரும்போது பார்வையாளர்களுக்கே பரவசம் வருகிறது. அவரின் பின்னணி குரலும் சரியாகவே பொருந்திப் போகிறது. ஒரு சில மேடைப் பேச்சு காட்சிகளில் முத்துராமலிங்க தேவர் பேசிய அந்த கால ஆடியோவை அப்படியே உபயோகித்திருப்பது சிறப்பு.

காந்தி, நேரு, சுபாஷ் சந்திர போஸ், காமராஜர், இம்மானுவேல் சேகரன், ராஜாஜி, வரதராஜூலு நாயுடு, சசிவர்ண தேவர், மூக்கையா தேவர் என பல வாழ்ந்து மறைந்த தலைவர்களையும் படத்தில் காட்டியிருக்கிறார்கள்.

இசைஞானி இளையராஜாவின் இசை அந்த காலத்துக்கே நாம் பயணித்த உணர்வை தருகிறது. தேவருக்கு காணிக்கையாக அமைந்திருக்கின்றன பாடல்கள்.

இயக்குனர் அரவிந்த் ராஜ் மிகச் சிறப்பாக அவரது வரலாற்றை தொகுத்து திரையில் நமக்கு தந்திருக்கிறார். குறிப்பிட்ட பட்ஜெட்டிலேயே அந்த காலத்தையும் நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறார். வசனங்கள் பல இடங்களில் நறுக்கு தெறித்தார்போல நச்சென்று இருக்கிறது.

இன்றும் பசும்பொன் முத்துராமலிங்க தேவரை ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்குள் வைத்து பார்க்கும் நிலை இருப்பதை பார்க்க முடிகிறது. ஆனாலும் அவரை தெய்வத்துக்கு நிகராக மதித்து கொண்டாடுகிறார்கள் தென் மாவட்ட மக்கள். அவரது பிறந்தநாள், இறந்தநாளில் பசும்பொன்னுக்கு படையெடுத்து அவரது நினைவிடத்துக்கு சென்று குறிப்பிட்ட சமுதாயத்தினர் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களும் மரியாதை செலுத்துவதை பார்க்க முடிகிறது. அப்படி இன்னும் பெரிய அளவில் தமிழ் மக்கள் மட்டுமின்றி இந்தியா முழுக்க அவரின் புகழை கொண்டு சேர்க்க வேண்டியது நம் கடமை. இந்த படம் அதற்கு ஒரு பிள்ளையார் சுழி போட்டிருக்கிறது என்றே சொல்லலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *