டியர் ரதி – விமர்சனம்!

விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பிக் பாஸ் புகழ் சரவண விக்ரம் நாயகனாக அறிமுகமாகி இருக்கும் திரைப்படம் “டியர் ரதி”. இளைஞர்களை ஈர்க்கும் ஒரு கதைக்களத்தை தேர்ந்தெடுத்திருக்கிறார். கொஞ்சம் டார்க் காமெடி ட்ரீட்மெண்டில் உருவாகியிருக்கும் இந்த படம் எப்படி இருக்கு? பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, நாயகன் சரவண விக்ரம் சிறு வயதில் இருந்தே பெண்களிடம் பேசுவதற்கு பயந்த நபர். அவருடைய காதலும் பிரேக் அப்பில் முடிந்து விட, பெண்களிடம் பேச தனக்கு இருக்கும் பயத்தை, கூச்சத்தை போக்க பாலியல் தொழில் நடக்கும் இடத்திற்கு நண்பருடன் செல்கிறார். பாலியல் தொழிலாளியான நாயகி ஹஸ்லி அமானை சந்திக்க, அவர் மீது ஈர்ப்பு உண்டாகிறது. உன்னோடு நாள் முழுக்க இருக்க வேண்டும், எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என சொல்லி அவரை அழைக்க அவரும் ஓகே சொல்கிறார். அவர்கள் ஒருநாள் பயணத்தில் நாயகியை ஒரு பெரும் குடும்பலே தேடுகிறது. அவர்களிடன் சிக்கினார்களா? அவர்கள் இவரை ஏன் தேடுகிறார்கள்? சரவண விக்ரம் காதல் என்னவானது? என்பதே மீதிக்கதை.

நாயகன் சரவண விக்ரம். விஜய் டிவியில் பார்த்த அதே அப்பாவியான முகம். பெண்களுடன் பேச தயங்கும் கதாபாத்திரத்தில் கச்சிதமாக இருக்கிறார். வசன உச்சரிப்பிலும் நன்றாகவே நடித்திருக்கிறார். விஜய் மேனரிசத்தில் நடிக்க முயற்சித்திருப்பது திரையில் தெரிகிறது. ஆனாலும் ஹீரோவாக இன்னும் கொஞ்சம் நடிப்பில் மெறுகேற வேண்டும். அடுத்தடுத்த படங்களில் அதை செய்வார் என்பது உறுதி.

டைட்டில் கதாபாத்திரமான ரதி என்ற பாலியல் தொழிலாளி கதாபாத்திரத்தில் ஹஸ்லி அமான் ஸ்கோர் செய்கிறார். கண்களாலேயே பல காட்சிகளில் பேசியிருக்கிறார். ஒட்டுமொத்த ஆண்கள் கும்பலையே அவரை தேடி ஓட வைக்கும் கதாபாத்திரத்தில் படத்தை தாங்கியிருக்கிறார். வரதன் என்ற கதாபாத்திரத்தில் வில்லனாக வரும் ராஜேஷ் பாலச்சந்திரன், கொஞ்சம் நெல்சன் பட வில்லன்கள் போல தனித்து தெரிகிறார். அவரது கூட்டாளிகளாக வருபவர்கள், சாய் தினேஷ் பத்ராம், யுவராஜ் சுப்பிரமணியம் என மற்ற நடிகர்களும் கவனம் ஈர்க்கிறார்கள்.

லோகேஷ் இளங்கோவனின் ஒளிப்பதிவு படத்தை கொஞ்சம் கூடுதலாக தூக்கி நிறுத்துகிறது. ஜோன்ஸ் ரூபர்ட் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசை கவனம் ஈர்க்கிறார். வில்லன் காட்சிகளில் கூடுதல் சிரத்தை எடுத்து உழைத்திருக்கிறார்.

இயக்குனர் பிரவீன் கே.மணி கொஞ்சம் வித்தியாசமான களத்தில் ஒரு காதல் படத்தை தர மெனக்கெட்டிருக்கிறார். திரைக்கதையிலும், படத்தின் ட்ரீட்மெண்டிலும் கவனம் ஈர்க்கிறார். ரசிகர்களை பார்த்து பேசும் காட்சிகளையும் கதையினூடே தந்து கொஞ்சம் வித்தியாசப்படுத்துகிறார். பாலியல் தொழிலையும், அதை பற்றிய விழிப்புணர்வையும் இந்த கதையினுள் வைத்து சொல்லியிருக்கிறார். நாயகியின் நோக்கம் என்ன? அவரது மனநிலை என்ன? அவர் என்ன திட்டமிடுகிறார்? ஏன் இதையெல்லாம் செய்கிறார்? வெளியே எங்கேயும் தப்பித்து செல்லாமல் ஏன் ஒரே இடத்தில் சுற்றி சுற்றி வருகிறார்? என பல குழப்பங்களுக்கான விடையை சொல்லாமல் விட்டு நம்மையும் கொஞ்சம் ஒட்ட விடாமல் செய்கிறார். சரவண விக்ரம் படமாக இருந்தாலும் நாயகிக்கு தான் இந்த படம் பெருமளவில் உதவியிருக்கிறது. மொத்தத்தில் ஒரு முறை பார்த்து ரசிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *