UV Creations தயாரிப்பில் அஷ்வின் சந்திரசேகர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் காதல் திரைப்படம் “Couple Friendly”. சந்தோஷ் ஷோபன், மானசா வாரணாசி ஜோடியாக நடித்திருக்கிறார்கள். காதலர்கள் கொண்டாட காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகும் இந்த படம் எப்படி இருக்கு? பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, சந்தோஷ் ஷோபன் இன்டீரியர் டிசைனிங்கில் தனியாக வெற்றி பெற போராடி வருபவர். தன் செலவுக்காக Bike Pooling செய்து வருகிறார். அப்படி ஒரு நாள் நாயகி மானசா வாரணாசியை சந்திக்கும் வாய்ப்பு அமைகிறது. ஐடி வேலைக்காக பல மாதங்களாக முயற்சித்து வருகிறார், ஆனால் வேலை கிடைக்காமல் ஹாஸ்டலில் தங்கி சிரமப்பட்டு வருகிறார். ஹாஸ்டலில் தங்க இடம் கிடைக்காமல் போக, தங்க இடம் தேடி நாயகனுடன் அலைகிறார். இறுதியில் நாயகனின் வீட்டிலேயே தங்குகிறார். பின் இருவரும் லிவிங் டுகெதர் ஆக மாறி, காதலர்களாகிறார்கள். அப்படிப்பட்ட சூழலில் அவர்களது காதலுக்கு அடுத்தடுத்து இரண்டு மிகப்பெரும் பிரச்சினைகள் வருகிறது. அந்த பிரச்சினைகள் என்ன? அவர்கள் காதல் நிறைவேறியதா? என்பதே காதல் உணர்வு மேலோங்க தந்திருக்கும் படமே “Couple friendly”.
நாயகன் சந்தோஷ் ஷோபன். லட்சியத்துக்கு பின்னால் ஓடும், இலக்கற்று ஓடும் இன்றைய இளைஞர்களை அப்படியே பிரதிபலித்திருக்கிறார். தாடியுடன் கொஞ்சம் ஒழுக்கமின்றி சுற்றும் ஆரம்ப காட்சிகளிலும் சரி, நாயகியுடன் பழகிய பின் கேரியர் நோக்கிய பயணத்தில் இருக்கும்போதும் சரி அந்த கதாபாத்திரத்தின் மாற்றங்களை தன் நடிப்பில் கொண்டு வந்திருக்கிறார். படத்தின் ஜீவனே இந்த படத்தின் நாயகி மானசா வாரணாசி தான். முதல் காட்சியில் இருந்தே நம் மனதில் நாற்காலி போட்டு அமர்ந்து விடுகிறார். தன் லட்சியத்துக்காக தன்னந்தனி பெண்ணாக மனம் தளராமல் நிற்கும் கதாபாத்திரத்தில் அத்தனை யதார்த்தமான ஒரு நடிப்பு. இளைஞர்கள் நிச்சயம் இவர் மேல் காதல் கொள்வார்கள் என்பது நிச்சயம். இரண்டாம் பாதியில் நம்மை கொஞ்சம் எமோஷனல் ஆக்குகிறார்.
இந்த மையக் கதாபாத்திரங்களுக்கு துணையாக பல நடிகர்கள் வந்து அவர்கள் பங்களிப்பை மிகச்சிறப்பாக செய்திருக்கிறார்கள். யோகி பாபு சில காட்சிகள் வந்தாலும் காமெடி கவுண்டர்கள் மூலம் நன்றாக சிரிக்க வைத்திருக்கிறார். லிவிங்ஸ்டன், ராஜீவ் கனகலா, கோபராஜூ ரமணா, சுனில், ஃபௌஸி என ஒவ்வொருவரும் கதையில் அடுத்தடுத்த தருணங்களுக்கு உதவுகிறார்கள்.
தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவும், கணேஷ் சிவாவின் படத்தொகுப்பும் படத்தின் தரத்தை தூக்கி நிறுத்துகிறது. காட்சிகளை படம் பிடித்த விதமும், அதை எடிட் செய்த கட்ஸூம் ஒத்திசைவில் ரசிக்கும் படி, கொஞ்சம் புத்துணர்வாய் அமைந்திருந்தது. சென்னையின் நெருக்கமான பகுதிகளிலும் புகுந்து செல்லும் கேமரா நம்மை இன்னும் படத்துடன் நெருக்கமாக்குகிறது. ஆதித்யா ரவீந்திரன் இசையில் பாடல்கள் கதையோட்டத்துக்கு பெரும் உதவி புரிந்திருக்கிறது. இருவரின் வாழ்க்கை பயணத்தை அந்த காட்ட அந்த பாடல்கள் பேறுதவி புரிந்திருக்கிறது. பின்னணி இசையும் காதல் உணர்வை நமக்குள் கடத்துகிறது. ஒலி வடிவமைப்புக்கும் பாராட்டுகள்.
இயக்குனர் அஷ்வின் சந்திரசேகர், எத்தனையோ காதல் படங்கள் வந்திருந்தாலும் அதில் பார்க்காத வகையில், இந்த படத்தில் தனது திரைக்கதை மற்றும் காட்சியமைப்புகள் மூலம் ஒரு புதுமையான அனுபவத்தை தந்திருக்கிறார். செல்வராகவன் படங்களில் எப்படி கதாபாத்திரங்கள் ஆழமாக வேரூன்றி நம் மனதுக்குள் சென்று தாக்கத்தை ஏற்படுத்துமோ, அப்படி இந்த காதலர்களையும் நம் மனதில் தங்க வைக்கிறார் இயக்குனர். முதல் பாதியில் வேறு ஒரு பாதையில் மிக நெருக்கமாக பயணிக்கும் திரைக்கதை, இரண்டாம் பாதியில் கொஞ்சம் சினிமேட்டிக்காக மாறுகிறது. ஆனாலும் முதல் பாதி தந்த அந்த உணர்வில் இருந்து விலகாமல் நம்மை எமோஷனலாக கனெட்க் செய்கிறது. மொத்தத்தில் ஆத்மார்த்தமான ஒரு காதல் கதையை தந்து வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குனர் அஷ்வின் சந்திரசேகர். காதலர்கள் கொண்டாடும் ஒரு தரமான படைப்பு.

