ஸ்ரீலட்சுமி ட்ரீம் ஃபேக்டரி தயாரிப்பில் இயக்குநர் SJN அலெக்ஸ் பாண்டியன் இயக்கத்தில் கௌஷிக் ஸ்ரீராம், பிரதீபா நடிப்பில் உருவாகியுள்ள காதல் திரைப்படம் ‘கிறிஸ்டினா கதிர்வேலன்’. தலைப்பே எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கும் நிலையில் வெளியாகி இருக்கும் இந்த படம் எப்படி இருக்கு? பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, கும்பகோணத்தில் நடக்கும் ஒரு காதல் கதை. வெளிநாட்டுக்லு வேலைக்கு செல்ல விசாவுக்கு காத்திருக்கும் நாயகன் கதிர்வேலன் யதேச்சையாக கிறிஸ்டினாவை பார்க்க, பார்த்த உடனே காதல் வயப்படுகிறார். தொடர்ந்து நண்பனை கல்லூரியில் ட்ராப் செய்யப் போன இடத்தில் நாயகியை மீண்டும் பார்க்க, வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்லும் எண்ணத்தை கைவிட்டு அதே கல்லூரியில் சேர்கிறார். அந்த நேரத்தில் கல்லூரியில் உடன் படிக்கும் நண்பனுக்கு பதிவு திருமணம் செய்து வைக்க சாட்சி கையெழுத்து போட, நாயகனும் நாயகியும் தங்கள் ஐடியை தர, அங்கு நிகழும் ஒரு தவறால் கிறிஸ்டினா கதிர்வேலன் இருவருக்கும் பதிவு திருமணம் நடந்தது போல தவறாக பதிவு ஆகிறது. கிறிஸ்டினாவுக்கு அவர்கள் வீட்டில் திருமணம் நிச்சயிக்கப்பட, இந்த பதிவு திருமணம் பிரச்சினையானதா? கதிர்வேலன் காதல் என்ன ஆனது? அவரின் காதல் கை கூடியதா? ஒன்று சேர்ந்தார்களா? என்பதே மீதிக்கதை.
நாயகன் கௌஷிக் ராம். மிக இயல்பான அலட்டல் இல்லாத நடிப்பு. கதாபாத்திரத்துக்கு ஏற்ற ஒரு நடிப்பை தந்திருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சியில் நம்மை கலங்க வைக்கிறார். நாயகியாக பிரதீபா. அதிகம் பேசாமல் மொத்த படத்திலும் ஒரு சில வசனங்கள் மடுமே பேசும் பிரதீபா, தன் கண்களால் பேசியே தன் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். சிங்கம் புலி, கஞ்சா கருப்பு ஆகியோர் ஒரு சில காட்சிகள் மட்டுமே வந்தாலும் ரசிக்க வைக்கிறார்கள். ஜெயக்குமார், அருள் டி. சங்கர், ‘சில்மிஷம்’ சிவா, ஜனனி மற்ற நடிகர்களும் தங்கள் பங்கை செய்திருக்கிறார்கள்.
பிரகத் முனியசாமி ஒளிப்பதிவு கிராமத்து காட்சிகளை அழகாக காட்டியிருக்கிறது. கிளைமாக்ஸ் காட்சியில் அந்த காட்சியின் பதட்டத்தை நமக்குள் கடத்துகிறது. ரகுநந்தன் இசையில் பாடல்கள் மனதை தொடுகின்றன. பின்னணி இசையிலும் ஈர்க்கிறார்.
இயக்குனர் அலெக்ஸாண்டர் பருத்தி வீரன் படத்தின் பாதிப்பில் படத்தை இயக்கியிருக்கிறார் என்பது படம் பார்க்குபோதே தெரிகிறது. தலைப்பிலேயே கவனம் ஈர்த்த இயக்குனர் பதிவுத் திருமணத்தை வைத்து சொல்லியிருக்கும் விஷயமும் படத்துக்கு பலம் சேர்க்கிறது. கிளைமாக்ஸ் நிச்சயம் நம்மை உலுக்கும் என்பது நிச்சயம். இயக்குனர் அலெக்ஸ் பாண்டியன் அந்த விதத்தில் ஜெயித்திருக்கிறார்.

