இயக்குநர் மாரி செல்வராஜின் இயக்கத்தில், துருவ் விக்ரம் நடிப்பில், தமிழ் திரையுலகில் மிகவும் எதிபார்க்கப்படும், ஸ்போர்ட்ஸ் டிராமா திரைப்படமாக உருவாகியிருக்கிறது “பைசன் காளமாடன்”. தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்தை அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் தயாரித்திருக்கிறது. துணிவும் தைரியமும் நிறைந்த ஒரு விளையாட்டு வீரனின், ஆழமான கதையான பைசனில் துருவ் விக்ரம் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அனுபமா பரமேஸ்வரன், அமீர், லால், பசுபதி, மற்றும் ரஜிஷா விஜயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு படக்குழுவினர் கலந்து கொள்ள மிக சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. விழாவில் இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா மற்றும் இசைக் குழுவினர் படத்தின் ஐந்து பாடல்களையும் லைவாக இசைத்து அரங்கத்தை அதிர வைத்தனர். படத்தில் நடித்த ஒவ்வொரு நடிகரையும் வரவேற்ற விதமும், அவர்கள் கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்திய விதமும் மிகச்சிறப்பாக இருந்தது.
அப்போது கந்தசாமி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் லால் பேசும்போது, “ஹைதராபாத் விமான நிலையத்தில் ஒரு பெண்மணி என்னை ஒரு குறிப்பிட்ட பெண்ணின் கணவரா என்று கேட்டார். ஆரம்பத்தில் குழப்பமாக இருந்தது. பின்னர் தான் அவர் கர்ணன் படத்தில் நான் நடித்த கதாபாத்திரத்தை பற்றி கேட்டிருக்கிறார் என்று. மாரி சார் தான் என்னுள் இருக்கும் கதாபாத்திரத்தை முதன்முதலில் வெளிக்கொணர்ந்தவர். அவர் படங்களில் மட்டும் தான் திரையரங்கை விட்டு வீட்டிற்கு செல்லும்போதும் கதாபாத்திரங்கள், அந்த சூழல், மற்றும் கதையும் நம்முடன் வீட்டிற்கு வரும். இந்தப் படத்திலும், கதை உங்களுடன் வீட்டிற்கு வரும்” என்றார்.
ராஜி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை ரஜிஷா விஜயன் பேசும்போது, “இந்த படத்தில் ஒரு சிஸ்டர் ரோல் இருக்கு, அதை நான் செய்வேனா என்று மாரி சார் சந்தேகமாக கேட்டார். நான் அவரிடம், எந்த வேடமாக இருந்தாலும், உங்களுடன் வேலை செய்ய விரும்புவதாகக் கூறினேன். நான் 30 படங்களில் நடித்திருக்கிறேன், ஆனால் மாரி சாரின் மீது எனக்கு ஒரு தனிப்பட்ட நம்பிக்கை உள்ளது. இந்தப் படத்தில் வேலை செய்யும்போது, ஒரு காட்சியில் நான் தண்ணீரில் குதிக்க வேண்டியிருந்தது. மாரி சார், நான் கர்ணனில் நீச்சல் கற்றிருந்ததால், நீச்சல் தெரியுமா என்று கேட்டார், நான் ஆமாம் என்றேன். ஆனால் எனக்கு நீச்சல் மறந்து போனதை மறந்து விட்டேன், தண்ணீரில் குதித்தபோது, நான் மூழ்குவது போல் உணர்ந்தேன். 5 வினாடிகள், என் முடிவு நெருங்கி விட்டது என்று நினைத்தேன், நல்ல வேளையாக மாரி சார் தான் குதித்து என்னைக் காப்பாற்றினார். அனுபமா எந்த ஒரு ஈகோவும், தற்பெருமையும் இல்லாத ஒரு சூப்பர் ஸ்டார். படம் முடியும்போது நாங்கள் மிக நல்ல நண்பர்களாகி விட்டோம்” என்றார்.
ராணி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள அனுபமா பர்மேஸ்வரன் பேசும்போது, “இந்த பைசன் படத்தில் நடித்ததே ஒரு கனவு போல் இருக்கிறது. கால்ஷீட் பிரச்சினை காரணமாக பரியேறும் பெருமாள் படத்தில் என்னால் நடிக்க முடியாமல் போனது. ஆனாலும் மாரி செல்வராஜ் மீண்டும் என்னை அழைப்பார் என்று நினைக்கவில்லை. பைசன் ஃபோட்டோஷூட்டின் போது பிரேமம் ஃபோட்டோஷூட் வைபை உணர்ந்தேன். பைசனுக்கு முன் இருந்த அனுபமாவை விட, பைசனுக்கு பின் இருக்கும் அனுபமா வித்தியாசமாக இருப்பார். அதற்கு மாரி செல்வராஜ் மற்றும் அவரிம் பொறுமைக்கு மிக்க நன்றி. நான் நடிகர் பசுபதியின் பெரிய ரசிகை. ரஜிஷா உடனான ஒரு பிணைப்புக்கு மாரி சார் தான் காரணம். படப்பிடிப்பில் அந்த ஊர் கிராமவாசிகள் எங்களுக்கு செங்கல் செய்வது முதல் பயிர் நடுவது வரை எல்லாவற்றையும் கற்றுக் கொடுத்தனர். துருவ் விக்ரமின் கடின உழைப்பு, ஆர்வம் மற்றும் அர்ப்பணிப்புக்கு வாழ்த்துகள். மிகப்பெரிய வெற்றிப் படமாக இருக்கும்” என்றார்.
பாண்டியராஜா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள இயக்குனர் அமீர் பேசும்போது, “என் இதயத்திற்கு நெருக்கமான ஒன்று இருந்தால் மட்டுமே நான் ஒரு படத்தில் நடிப்பேன். மாரி அப்படிப்பட்ட ஒரு நபர். ரஞ்சித் மற்றும் மாரி செல்வராஜ் நீங்கள் செய்யும் படங்களை தொடர்ந்து செய்ய வேண்டும். அப்போது தாம் என்னைப் போன்றவர்களும், மக்களும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். மாரி என் கதாபாத்திரம் பற்றி சொன்ன எதுவும் நினைவில் இல்லை. ஆனால் மாரி சொன்னவற்றைக் கேட்டு அதை அப்படியே நடித்தேன். இந்த நடிப்பிற்கு கிடைக்கும் எந்தப் பாராட்டும் மாரி செல்வராஜை மட்டுமே சேரும். துருவ் விக்ரமிடம் அவரது தந்தை சீயான் விக்ரமிடம் பார்த்த அதே ஆர்வத்தையும், அர்ப்பணிப்பையும் பார்க்கிறேன்” என்றார்.
வேலுசாமி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள பசுபதி பேசும்போது, “எளிமையாகச் சொன்னால் எல்லாப் புகழும் என் இயக்குநர் மாரி செல்வராஜூக்கே. மூன்றாவது நாள் படப்பிடிப்பில் இருந்த போது சீயான் விக்ரம் எனக்கு ஃபோன் செய்து, துருவ் விக்ரம் பற்றி விசாரித்தார். துருவ் கபடி மிக சிறப்பாக ஆடியிருக்கிறார். அவர் தேசிய அளவில் கபடி ஆடலாம், அந்தளவுக்கு சிறப்பாக கபடி ஆடினார்” என்றார்.
நடிகர் துருவ் விக்ரம் பேசும்போது, மாரி செல்வராஜ் கிட்டன் என்ற கதாபாத்திரத்தை எழுதும்போது என் முகத்தை மட்டுமே மனதில் வைத்திருந்ததாகக் கூறுகிறார். இந்த படத்தில் என்னுடன் பணியாற்றிய அனைத்து பயிற்சியாளர்கள் மற்றும் கபடி வீரர்களுக்கும் நன்றி. புரோ கபடி லீக் வீரர் பிரபஞ்சன் எனக்கு மிகவும் உதவியாக இருந்தார். கபடி வீரராக மட்டுமல்லாமல், ஒரு சகோதரனாகவும் இருந்தார். மூத்த நடிகர்கள் லால், அமீர், பசுபதி ஆகியோருக்கு நன்றி. இந்தப் படத்திற்குப் பின் உண்மையிலேயே என் சகோதரியாக மாறி விட்டார் ரஜிஷா. இந்தப் படத்தைப் பார்த்த பிறகு என் அம்மா கொஞ்சம் பெருமைப்படுவார் என்று நினைக்கிறேன். ஒவ்வொரு சவாலான காட்சியிலும் என் தந்தை சீயாம் விக்ரம்-ஐ மனதில் வைத்து உத்வேகத்தையும், எனர்ஜியையும் ஏற்றிக் கொண்டேன். அவர் இவ்வளவு செய்திருக்கிறார் என்றால், நான் கொஞ்சம் முயற்சி செய்ய முடியாதா? என தோன்றியது. இந்தப் படம் இயக்குநர் மாரி செல்வராஜின் முயற்சிக்காகவே மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும்” என்றார்.

