போகி – விமர்சனம்!

சமூகத்தில் நிலவும் மிகக் கொடிய, மிகவும் அச்சுறுத்தலாக விளங்கும் ஒரு சமூக குற்றப் பின்னணியில் இயக்குநர் விஜயசேகரன் இயக்கத்தில் புதுமுகங்கள் நடிக்க உருவாகியுள்ள படம் “போகி”.  நபி நந்தி, ஷரத், “லப்பர் பந்து” ஸ்வாசிகா, பூனம் கவுர் ஆகியோர் நடித்துள்ளனர். படம் எப்படி இருக்கு? பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, பெண்களை அவர்களுக்கே தெரியாமல் வீடியோ எடுத்து ஆபாச தளங்களில் வெளியிட்டு பணம் பார்க்கும் ஒரு சிண்டிகேட்டில் ஒரு போலீஸ் அதிகாரி அண்டர்கவராக இருப்பது தெரிய வர அவரை கொலை செய்து விடுகிறார்கள். அவர் முக்கிய ஆதாரங்களை வைத்திருக்கிறேன், கூடிய விரைவில் கூண்டோடு நீங்கள் சிக்கப் போகிறீர்கள் என சொல்ல, அந்த ஆதாரங்களை தேடுகிறது அந்த கும்பல். இதற்கிடையில் சிலர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட, அதை காவல்துறை விசாரிக்கிறது. அந்த கொலையானவர்கள் யார்? கொலை செய்யக் காரணம் என்ன? அந்த குற்றம் தடுத்து நிறுத்தப்பட்டதா? அந்த சிண்டிகேட் என்ன ஆனது என்பதே மீதிக்கதை.

நம் இந்திய சமூகத்தையே உலுக்கிய இரண்டு உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து, பரபரப்பான க்ரைம் திரில்லர் பாணியில் அழுத்தமான சமூக படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது. “லப்பர் பந்து” ஸ்வாசிகா மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஆனால் இன்றைய அந்த முதிர்ச்சியான நடிப்போ, முதிர்ச்சியோ இல்லை. சில ஆண்டுகளுக்கு முன்பே எடுக்கப்பட்ட படம் என்பது அவரை வைத்தே தெரிந்து கொள்ளலாம். ஆனால் அவரது கதாபாத்திரம் தான் படத்தின் ஆணி வேர்.

நபி நந்தி, ஷரத், வேல ராமமூர்த்தி, சங்கிலி முருகன், மொட்ட ராஜேந்திரன், எம்.எஸ்.பாஸ்கர், சிங்கமுத்து மற்றும் பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். பூனம் கவுர் முக்கிய கதாபாத்திரம் போல பில்டப் காட்டி விட்டு, கடைசியில் ஒரு பாட்டுக்கு மட்டும் வந்து ஆடி விட்டுப் போகிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு அவரை திரையில் பார்க்க முடிந்தது. கவிஞர் சினேகன் ஒரு பாடலில் தலையை காட்டி விட்டு போகிறார்.

ராஜா C சேகர் ஒளிப்பதிவு ஓகே ரகம். மலை கிராமத்தை மிக இயல்பாக படம் பிடித்திருக்கிறார். பாடல் காட்சிகளை படமாக்கிய விதமும் நன்றாக இருந்தது. இசையமைப்பாளர் மரியா மனோகர் பாடல்கள் 2000 கால கட்டத்தில் நாம் ரசித்த பாடல்களை நினைவுபடுத்தியது. கேட்பதற்கும் ஒரு நோஸ்டல்ஜியா உணர்வை தந்து விட்டுப் போகிறது.

இயக்குனர் விஜயசேகரன் சில ஆண்டுகளுக்கு முன்பே, இன்று சமூகத்தில் தலை விரித்தாடும் ஒரு மிகக் கொடுமையான ஒரு விஷயத்தை, உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு படமாக எடுத்திருக்கிறார். சில வருடங்களுக்கு முன்பே எடுக்கப்பட்ட படம் என்பது தான் குறையாக் இருக்கிறது. இந்த ஆண்டில் எடுக்கப்பட்டிருந்தால் இன்னும் மேம்படுத்தப்பட்ட வடிவத்தை திரையில் பார்த்திருக்க முடியும். அந்த பிரச்சினைகளை இன்னும் கொஞ்சம் விரிவாக அலசியிருக்க முடியும். பிணவறையில் நடக்கும் அந்த சம்பவங்கள் பகீர் ரகம். காடு, மலை, குப்பை மேடு, நெரிசலான சென்னை என ரியலாகவே அந்தந்த இடங்களுக்கு பயணித்த உணர்வை தந்திருக்கிறது. மொத்தத்தில் விழிப்புணர்வை தரும் உயர்வான நோக்கத்துக்காக எடுக்கப்ப்ட்டிருக்கும் படமாக இருந்தாலும் மேக்கிங் தரம் மற்றும் கொஞ்சம் பழைய ட்ரீட்மெண்ட் நம்மை விலகி இருக்க வைக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *