அறிமுக இயக்குனர் உன்னி சிவலிங்கம் இயக்கத்தில் ஷேன் நிகம், சாந்தனு பாக்யராஜ், பிரீத்தி அஸ்ராணி, செல்வராகவன், அல்போன்ஸ் புத்திரன் நடிப்பில் உருவாகியுள்ள தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளில் உருவாகியுள்ள படம் “பல்டி”. சாய் அபயங்கர் இசையமைத்து வெளியாகும் முதல் படமும் இது தான். படம் எப்படி இருக்கு? பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, தமிழ்நாடு, கேரளா எல்லைப்பகுதியில் நிகழும் கதை. பஞ்சமி ரைடர்ஸ், பொற்றாமரை என இரண்டு கபடி குழுக்கள் உண்டு. அதில் செல்வராகவனின் கபடி குழு தான் பொற்றாமரை கபடி குழு. பஞ்சமி ரைடர்ஸ் கபடி குழுவில் ஷேன் நிகம், சாந்தனு மற்றும் அவர்களுடைய இரண்டு நண்பர்கள் திறமையாக விளையாடி தொடர்ந்து வெற்றியை சுவைக்கிறார்கள். ஒரு கட்டத்தில் செல்வராகவனுக்காக இவர்கள் பொற்றாமரை குழுவில் விளையாடி ஜெயித்துக் கொடுக்க, அதன் பின் செல்வராகவனின் எதிரியான அல்ஃபோன்ஸ் புத்திரனிடம் இருந்து தங்கள் காரை மீட்டுக் கொடுக்கச் சொல்லி கேட்க அதையும் செய்து முடிக்கிறார்கள். அன்றிலிருந்து அவர்களை தன் வேலைகளுக்கு தொடர்ந்து பயன்படுத்துகிறார் செல்வராகவன். செல்வராகவன் உண்மை முகம் இவர்களுக்கு தெரிந்ததா? அந்த சுழலில் இருந்து வெளியில் வந்தார்களா? அதன் பின் நடக்கும் சம்பவங்கள் என்ன? என்பதே மீதிக்கதை.
மெட்ராஸ்காரன் படத்திற்கு பிறகு மீண்டும் ஷேன் நிகம் தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு ரீ-எண்ட்ரி. பல்டி ஸ்டார் உதயனாக அலட்டல் இல்லாத கதாபாத்திரத்துக்கு ஏற்ற உணர்ச்சிகளை ஸ்கோர் செய்கிறார். சாந்தனுவுக்கு அவர் சோலோவாக நடித்த படங்களை விடவும் இந்த படத்தில் மிகச்சிறப்பான ஒரு கதாபாத்திரம். அந்த குழுலிலேயே ஆதிக்கம் செலுத்தும் கதாபாத்திரம். ரொம்ப ஸ்மார்ட்டான குமார் என்ற கதாபாத்திரத்தில் படம் முழுக்க கலக்கியுள்ளார். அவர்களின் இரண்டு நண்பர்கள் கதாபாத்திரமும் எழுதப்பட்ட விதமும், தேர்வும் மிகச்சிறப்பு.
நாயகியாக பிரித்தீ அஸ்ராணி, பெரிதாக வேலை இல்லை என்றாலும் செல்வராகவனுக்கு எதிராக நிற்கும் காட்சியில் ஸ்கோர் செய்கிறார். செல்வராகவன் மெயின் வில்லனாக படம் முழுக்க வந்து அதகள செய்கிறார். அல்ஃபோன்ஸ் புத்திரன் சோடா பாபு கதாபாத்திரத்தில் கொஞ்சம் ஃப்ரெஷாக இருக்கிறார். பூர்ணிமா இந்திரஜித் மிரட்டலான வில்லத்தனமான கதாபாத்திரத்தில் வந்து மனதில் பதிகிறார்.
சாய் அபயங்கரின் முதல் படம், பாடல்களில் ஜாலக்காரி சூப்பர் ஹிட், மற்ற பாடல்கள் கேட்க கேட்க பிடிக்கும் ரகம். பின்னணி இசையிலும் நம்மை கவர்கிறார். இது சாய் அபயங்கரின் முதல் படி, இன்னும் பல உயரங்களை தொடுவார் என நம்பலாம். அலெக்ஸ் புலிக்கல் ஒளிப்பதிவு அபாரம். கபடி காட்சிகளை காட்டிய விதம், இரவுக் காட்சிகளில் நடக்கும் சண்டைகள் ஆகட்டும் எல்லாமே படத்தை தூக்கி நிறுத்தியிருக்கிறது.
படத்தின் முதல் பாதி எங்கேயும் தொய்வில்லாமல் நகர்கிறது. இரண்டாம் பாதியில் ஆக்ஷன், எமோஷன், டிவிஸ்ட் என நம்மை அசரடிக்கிறார் இயக்குனர். கதாபாத்திரங்களின் தன்மையை எழுதிய விதமும், இரண்டாம் பாதியில் நடக்கும் காட்சிகளுக்கு முன்பே ஒரு ஐடியா கொடுத்ததும் சிறப்பு. கேங் வாரில் நண்பர்கள் சிக்கிக் கொண்டு, அதிலிருந்து எப்படி மீள்வார்களோ என பரபரப்பாக செல்கிறது கடைசி அரை மணி நேரம். கிளைமாக்ஸ் ட்ரான்ஸ்ஃபர்மேஷன் எதிர்பாராதது. மொத்தத்தில் ஷேன் நிகமுக்கு ஒரு வெற்றிப்படம், சாந்தனுவுக்கு தமிழில் மட்டும் இல்லாமல் மலையாளத்திலும் நல்ல பெயரை பெற்றுத் தந்திருக்கிறது இந்த பல்டி.

