பேபி & பேபி விமர்சனம்

யுவராஜ் தயாரிப்பில் பிரதாப் இயக்கத்தில் ஜெய், சத்யராஜ், யோகி பாபு, பிரக்யா நக்ரா, நடித்துள்ள படம் பேபி & பேபி. டி இமான் இசையமைக்க, கல கல காமெடி படமாக உருவாகியிருக்கும் இந்த படம் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகியுள்ளது.

படத்தின் கதைப்படி, ஜெய், பிரக்யா நக்ரா தம்பதி மற்றும் யோகி பாபு தான்யா தம்பதி தங்கள் அப்பாக்களுக்கு விருப்பமில்லாதவாறு அவர்களுக்கு பிடித்த பெண்களை திருமணம் செய்ததால் அவர்களை ஒதுக்கி வைத்திருக்கிறார்கள். இந்நிலையில் சத்யராஜூக்கு பரம்பரையில் ஆண் குழந்தை வாரிசாக வரணும் என நினைக்கிறார். அந்த நேரத்தில் ஜெய்க்கு ஆண் குழந்தை பிறந்த தகவல் தெரிய வர வீட்டுக்குள் சேர்த்துக் கொள்ள அழைக்கிறார். யோகிபாபுவின் அப்பா இளவரசு ஜாதகத்தில் கொண்ட அதீத நம்பிக்கையால் பெண் குழந்தை வாரிசாக வேண்டும் என விரும்ப, அந்த நேரத்தில் யோகி பாபுவுக்கு பெண் குழந்தை பிறந்த தகவல் தெரிய வர அவரையும் வீட்டுக்குள் சேர்த்துக் கொள்ள விரும்பி அழைக்கிறார். இந்த இரண்டு தம்பதிகளும் மதுரை, கோயமுத்தூர் போக ஏர்போர்ட்டில் காத்திருக்கும் நேரத்தில் இருவரது குழந்தையும் மாறி விடுகிறது. சத்யராஜ், இளவரசுவுக்கு தெரியாமல் அந்த சூழலில் இருந்து எப்படி தப்பினார்கள் என்பதை கல கல காமெடி படமாக சொல்லியிருக்கும் படமே பேபி & பேபி.

ஜெய் காமெடி மற்றும் எமோஷனல் காட்சிகளிலும் நல்ல நடிப்பை தந்துள்ளார். குழந்தைக்கு அப்பாவாக, தந்தைக்கு பயந்த மகனாக என நன்றாக ஸ்கோர் செய்கிறார். ஜெய்க்கு இணையான ஒரு கதாபாத்திரத்தில் யோகி பாபு. காமெடியிலும் சிரிக்க வைக்கிறார், சில சீரியஸ் காட்சிகளிலும் குணச்சித்திர நடிப்பை வழங்கியிருக்கிறார். சத்யராஜ் தனக்கேரிய ஆளுமையான கதாபாத்திரத்தில் அசத்தல் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இளவரசு ஜாதகத்தை நம்பும் ஒரு கதாபாத்திரத்தில் காமெடியிலும் ஸ்கோர் செய்கிறார். அவர் வரும் காட்சிகள் எல்லாமே ரசிக்கும்படி உள்ளன. பிரக்யா நக்ரா ஜெய் ஜோடியாக குழந்தையை காணாமல் தவிக்கும் காட்சிகளிலும் நல்ல நடிப்பு. தான்யா யோகிபாபுவின் மனைவியாக நல்ல ஒரு கதாபாத்திரம்.

இவர்களை தவிர மொட்ட ராஜேந்திரன், நிழல்கள் ரவி, ஆனந்தராஜ், ரெடின் கிங்ஸ்லீ, சிங்கம் புலி, ஸ்ரீமன், தங்கதுரை, லொள்ளு சபா சேசு, ராமர், என திரும்பும் திசையெல்லாம் தெரிந்த முகங்கள். அவர்களும் அவர்கள் பங்குக்கு நல்ல ரசிக்கும்படியான நடிப்பை தந்தி விட்டு செல்கிறார்கள்.

டி இமான் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசை படத்துக்கு ஏற்றார்போல அமைந்துள்ளது. ஒரு கிராமத்து படத்துக்கு தேவையான ஒளிப்பதிவும் படத்துக்கு பலம். முதல் காட்சியிலேயே படத்தின் கதை என்ன என்பதை சொல்லி விடும் இயக்குனர் அதன் பிறகு அதை சுவாரஸ்யமாக நகர்த்தி செல்ல முயற்சிக்கிறார். முதல் பாதியில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார். இரண்டாம் பாதியில் காமெடி நடிகர்களின் அணிவகுப்பு படத்தை இன்னும் கொஞ்சம் ரசிக்க வைக்கிறது. இரண்டாம் பாதியில் வரும் காமெடி காட்சிகள் நன்றாக ஒர்க் ஆகி உள்ளது. ஒரு சில முக்கியமான காட்சிகளில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் இன்னும் ரசிக்கும்படியான படமாக அமைந்திருக்கும். இருப்பினும் நிச்சயம் ஜாலியாக தியேட்டரில் சென்று ரசிக்கும் படமாக அமைந்திருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *