அனந்தா – விமர்சனம்!

தமிழில் பாட்ஷா, அண்ணாமலை, சத்யா போன்ற மாஸ் படங்களால் பெரும் புகழ் பெற்ற இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா, ஆஹா, சங்கமம் என மென்மையான படங்களையும் தந்தவர். இவர் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ‘அனந்தா’. ஆன்மீக குரு சத்ய சாய் பாபாவை பற்றிய ஒரு படமாக இந்த படம் உருவாகியுள்ளது. வலியை அமைதியாக மாற்றும் நம்பிக்கையை மையமாக கொண்ட ஐந்து ஆழமான, மனதை நெகிழ வைக்கும் கதைகளை கொண்ட இந்த படம் எப்படி இருக்கு? பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, புட்டபர்த்தி ஆஸ்ரமத்தின் நிர்வாகி நிழல்கள் ரவி, சத்யசாய் பாபா பக்தர்கள் ஐந்து பேரை ஆஸ்ரமத்துக்கு அழைக்கிறார். அவர்களை அழைக்க சொல்லி உத்தரவிடுகிறார் சாய் பாபா. அவரே அழைத்தது எங்கள் பாக்கியம் என அவர்களும் ஆஸ்ரமத்துக்கு வருகிறார்கள். அங்கு வந்த பிறகு அவர்கள் அவர்களின் வாழ்க்கையில்  நிகழ்ந்த சில உண்மைச் சம்பவங்களை பகிர்ந்து கொள்கிறார்கள். அவர்கள் வாழ்வில் சாய் பாபா நிகழ்த்திய ஆச்சர்யங்கள் என்ன? அவர்கள் பக்தி எத்தகையது? என்பதை உணர்வுப்பூர்வமாக சொல்வதே மீதிக்கதை.

மிகப்பெரிய தொழிலதிபரான ஜெகபதி பாபு, மகனுக்காக தவிக்கும் ஒரு தாய் & அன்னதானம் செய்து வரும் சுஹாசினி மணிரத்னம், மனைவியை நேசிக்கும் ஒய்.ஜி.மகேந்திரன், நடனக் கலைஞர் அபிராமி வெங்கடாசலம் மற்றும் வெளிநாட்டவர் ஜான் என ஐந்து பேர் சத்ய சாய்பாபாவின் பக்தர்களாக மிகுந்த அர்ப்பணிப்போடும் பக்தியோடும் நடித்திருக்கிறார்கள். கடவுள் மீது கொண்டுள்ள பக்தியை இந்த படத்தில் மிக அழகாக தங்கள் நடிப்பில் கொண்டு வந்திருக்கிறார்கள். இந்த ஐந்து பேரின் வாழ்வில் நிகழ்ந்த உண்மைச் சம்பவங்களை அப்படியே திரையில் கொண்டு வந்திருக்கிறார்கள். இவர்களுடன் நிழல்கள் ரவி, தலைவாசல் விஜய், ஸ்ரீரஞ்சனி, உதயபானு மகேஸ்வரன் என மற்ற நடிகர்களும் கிடைத்த வாய்ப்ப மிக அழகாக பயன்படுத்தி ஸ்கோர் செய்திருக்கிறார்கள்.

பா. விஜய் வசனம் மற்றும் பாடல்களும் படத்துக்கு பலம் சேர்த்திருக்கிறது. தேனிசை தென்றல் தேவா மற்றும் ஸ்ரீகாந்த் தேவா இசையும் படத்துக்கு ஒரு தெய்வீகத் தன்மையை வழங்கியிருக்கிறது. சஞ்சய் ஒளிப்பதிவில் காசியின் பிரமாண்டமும், புட்டபர்த்தி சாய் பாபா ஆஸ்ரமத்தின் எழிலும், பிரமாண்டமும் மிகவும் அழகாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இந்த படத்தில் ஒவ்வொரு மனித வாழ்விலும் கண்ணுக்கு தெரியாத அருள் நம் வாழ்வில் எப்படி நம்மை வழிநடத்துகிறது என்பதை சொல்லியிருக்கிறார். அன்பு மற்றும் இறைவனின் காண முடியாத கிருபையை கொண்டாடும் ஒரு காவியமாக உருவாகியுள்ளது. தெய்வீகம் என்பது கோவில்களிலோ அல்லது அற்புதங்களிலோ மட்டும் அடங்கி விடுவதில்லை. அது நம்பிக்கை, இரக்கம் மற்றும் இறைவனிடம் தன்னை ஒப்படைத்து சரணாகதி அடைவது என ஒவ்வொரு செயலிலும் அமைதியாக வாழ்கிறது என்பதை அனந்தா படம் வெளிப்படுத்துகிறது. மொத்தத்தில் குடும்பத்துடன் பார்த்து உணர வேண்டிய ஒரு படம். பக்தர்கள் நிச்சயம் கொண்டாடும் ஒரு படம் இந்த அனந்தா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *