ஆர்யன் – விமர்சனம்!

ராட்சசன் படம் விஷ்ணு விஷால் கேரியரில் மட்டுமல்ல, தமிழ் சினிமாவில் வெளியான ஆகச்சிறந்த திரில்லர் படங்களில் ஒன்று. படம் வெளியாகி 7 ஆண்டுகள் கடந்தும் அந்த படத்தை மிஞ்சும் ஒரு படம் இன்னும் வெளியாகவில்லை என்பது தான் உண்மை. அவ்வப்போது வெளியாகும் சில திரில்லர் படங்கள் ஓகே ரகம், நல்லா இருக்கு என்று சொல்லும் அளவுக்கு மட்டுமே இருந்திருக்கின்றன. அந்த ராட்சசன் படத்தின் ஹீரோ விஷ்ணு விஷால் நடிப்பில் இயக்குனர் பிரவீன் இயக்கத்தில் தற்போது வெளியாகியிருக்கும் ஒரு திரில்லர் படம் தான் “ஆர்யன்”. விஷ்ணு விஷாலே இது ராட்சசன் இல்லை என சொல்லி விட்டதால் ஒப்பீட்டை தவிர்த்து விட்டு இந்த படம் எப்படி இருக்கு? என்பதை ஸ்பாய்லர் இல்லாத ஒரு விமர்சனத்துடன் பார்க்கலாம்.

படத்தின் கதை ட்ரைலரில் நீங்கள் பார்த்தது போலவே ஒரு சீரியல் கொலைகாரனான செல்வராகவன் தொடர் கொலைகள் செய்வேன் என காவல்துறைக்கு சவால் விடுகிறார். யாரை கொலை செய்யப் போகிறேன் என்பதை ஒரு மணி நேரத்துக்கு முன்பு வெளியிடுவேன், முடிஞ்சா தடுத்துக்கோங்க என சவால் விட்டு ஒவ்வொரு கொலையையும் நிகழ்த்துகிறார். அந்த கேஸை விசாரிக்க வரும் நாயகன் விஷ்ணு விஷால் அந்த விக்டிம்ஸை காப்பாற்றினாரா? தொடர் கொலைகளை தடுத்து நிறுத்தினாரா? செல்வராகவன் ஏன் அந்த கொலைகளை செய்கிறார்? அவர் கொலை செய்ய யாரை எல்லாம் தேர்ந்தெடுக்கிறார்? ஏன் அவர்களை தேர்ந்தெடுக்கிறார்? என்பதை சொல்லும் மீதிக்கதையே ஆர்யன். இந்த படம் Whodunit வகை இல்லை, மாறாக Howdunit வகை திரைப்படம்.

நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களின் உழைப்பைப் பற்றி பேசும் முன் படத்தை பற்றி கொஞ்சம் பேசுவோம். இந்த மாதிரி ஒரு சீரியல் கில்லர் படம் தமிழில் வந்ததே இல்லை என சொல்லலாம். படத்தின் முதல் காட்சியிலேயே துவங்கும் கதை பரபரவென இறுதி காட்சி வரை நகர்வதே இந்த படத்தின் மிகப்பெரிய பாஸிடிவ். படத்தின் ஆரம்ப 20 நிமிட காட்சிகள் படத்தின் மிகப்பெரிய ஹைலைட். அந்த காட்சிகள் நம்மை சீட்டின் நுனிக்கே கொண்டு செல்கிறது. அந்த 20 நிமிடம் முடிந்த பின்பு இனி எப்படி, இனி என்ன நடக்கும்? என ஒவ்வொரு காட்சியையும் யோசிக்க வைக்கிறார் இயக்குனர் பிரவீன். ஒவ்வொரு கதாபாத்திரமும் கதையை மிக அழகாக நகர்த்திக் கொண்டு செல்கிறது. அந்த அளவுக்கு மிக நெருக்கமாக திரைக்கதையை தைத்திருக்கிறார்கள் பிரவீன் மற்றும் மனு ஆனந்த். சமீப வருடங்களில் தமிழில் வந்திருக்கும் ஒரு நல்ல திரில்லர் படம் என்பதை நிச்சயம் சொல்லலாம்.

நாயகன் விஷ்ணு விஷால் மிக இளைமையாக, மிக கச்சிதமாக அந்த போலீஸ் கதாபாத்திரத்தில் பொருந்திப் போகிறார். அவரது கச்சிதமான உடலமைப்பு, பாடி லாங்குவேஜ், திரில்லர் படத்துக்கான நடிப்பு என வழக்கம் போல ஸ்கோர் செய்திருக்கிறார். செல்வராகவன் நடிக்க வந்த சில படங்களிலேயே இப்படி ஒரு சிறப்பான, மறக்க முடியாத கதாபாத்திரம் அமைந்திருக்கிறது. அந்த கதாபாத்திரத்தின் தன்மையை, உணர்வை மிகச் சிறப்பாக பிரதிபலித்திருக்கிறார். செல்வராகவனின் பெஸ்ட் என்று கூட சொல்லலாம்.

ஸ்ரத்தா ஸ்ரீநாத். தொலைக்காட்சி தொகுப்பாளராக ஆளுமை செலுத்தும் ஒரு கதாபாத்திரத்தில் கச்சிதம். நாயகி மானசா சௌத்ரி சில காட்சிகளே வந்தாலும் கதைக்கு ஒட்டாமல் பயணித்தாலும் அவரது அழகால் ரசிகர்கள் மனதில் ஒரு தென்றலாக வீசிச் செல்கிறார். கருணாகரன் சின்ன கதாபாத்திரம் என்றாலும் அவரது முத்திரையை பதிக்கிறார். ராஜா ராணி பாண்டியன், அவினாஷ், உதயபானு மகேஸ்வரன், ஜெயக்குமார், ஜீவா என மற்ர நடிகர்களும் அவர்கள் கதாபாத்திரங்களை செவ்வனே செய்திருக்கிறார்கள்.

ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவு படத்துக்கான த்ரில்லர் மூட்-ஐ படம் முழுக்க மிக அழகாக பார்வையாளர்களுக்கு கடத்துகிறது. கலை இயக்குனர் ஜெயச்சந்திரன் உழைப்பும் படத்துக்கு பலம். ஷான் லோகேஷ் எடிட்டிங் கூடுதல் பலம். 2 மணி நேரம் 16 நிமிடங்கள் என்பது இந்த படத்துக்கு ஏற்ற சரியான நீளம். ஜிப்ரான் வைபோதா பின்னணி இசை திரில்லர் படத்துக்கு எப்போதும் சிறப்பு சேர்க்கும். அதே போல இந்த படத்திலும் பல காட்சிகளில் நம்மை மிரள வைக்கிறது அவரது இசை. அவரது இசையுடன் சேர்த்து சவுண்ட் டிசைனும் படத்தின் தரத்தை பல படிகள் உயர்த்துகிறது.

படத்தை பார்க்கப் போகும் ரசிகர்கள் முதல் 20 நிமிடங்களை தவற விடாதீர்கள். மொத்தத்தில் விஷ்ணு விஷால் கேரியரில் இன்னுமொரு மகுடமாக அமைந்திருக்கிறது இந்த ஆர்யன். திரில்லர் ரசிகர்களுக்கு நல்ல ஒரு தீனி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *