முதல் நீ முடிவும் நீ, தருணம் படங்களில் நாயகனாக நடித்த கிஷன் தாஸ் நடித்துள்ள மூன்றாவது படம் “ஆரோமலே”. நடிகர் தியாகுவின் மகன், அறிமுக இயக்குனர் சாரங்க் தியாகு இயக்கியிருக்கிறார். ரொமாண்டிக் காமெடி படமான இந்த படத்தில் ஷிவாத்மிகா ராஜசேகர் கிஷன் தாஸுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
படத்தின் கதைப்படி, பள்ளியில் படிக்கும்போதில் இருந்தே கிஷன் தாஸ், காதலில் சொதப்பி ரொம்பவே தடுமாறுகிறார். சினிமா போல தனக்கும் காதல் வரும் என நம்பும் ஒரு இளைஞர். பல தோல்விகளுக்குப் பின் மேட்ரிமோனி அலுவலகத்தில் வேலைக்குச் சேர்கிறார். அங்கு அவருக்கு பாஸாக வருகிறார் ஷிவாத்மிகா ராஜசேகர். அவருடன் மோதல், பின் இருவருக்கும் இடையே ஒரு சவால். அந்த சவால் என்ன ஆனது? அப்படி என்ன சவால்? கிஷன் தாஸ் காதல் என்ன ஆனது? என்பதே மீதிக்கதை.
கிஷன் தாஸ். இன்றைய தமிழ் சினிமாவில் பள்ளி, கல்லூரி இளைஞர் என அந்த கதாபாத்திரங்களுக்கும் மிக பொருத்தமான ஒரு இளம் ஹீரோவாக இருக்கிறார். அந்த வயது ஹீரோக்களுக்கு இருக்கும் வெற்றிடத்தை மிக அழகாக நிரப்புகிறார். இந்த படத்திலும் மிகப் பொருத்தமாக, ஒரு நல்ல ரொமாண்டிக் காமெடி படத்துக்கான நடிப்பை தந்திருக்கிறார். சாக்லேட் பாயாக பல இளசுகளின் மனதை கொள்ளை கொள்கிறார். ஷிவாத்மிகா ராஜசேகர் பாஸியான கதாபாத்திரத்தில் பட்டைய கிளப்புகிறார். இருவருக்குமான கெமிஸ்ட்ரி அட்டகாசம். விடிவி கணேஷ் வரும் காட்சிகள் எல்லாம் வெடிச்சிரிப்பை வரவழைக்கின்றது. யூடியூப் புகழ் ஹர்ஷத் கான் ட்ராகன் படத்துக்கு பிறகு மிகச் சிறப்பான ஒரு கதாபாத்திரம். மிகப்பெரிய காமெடியனுக்கு கிடைக்கும் வரவேற்பு ஹர்ஷத் கானுக்கு திரையரங்கில் கிடைப்பதே ஹர்ஷன் கானின் வளர்ச்சிக்கு சாட்சி. ஒரு பெரிய நடிகரின் பங்களிப்பும் படத்தில் செம்ம சர்ப்ரைஸ்.
சித்து குமாரின் இசையில் பாடல்கள் இதயத்தை வருடுகிறது. பின்னணி இசையிலும் படத்தை தூக்கி நிறுத்துகிறார். ஒளிப்பதிவு படத்துக்கு பலம் சேர்க்கிறது. நல்ல ஃபீல் குட் ரொமாண்டிக் படத்துக்கு தேவையான கலர்ஃபுல்லான ஒளிப்பதிவு.
தமிழ் சினிமாவில் தற்போதைய வன்முறை சூழலில் நல்ல ஃபீல்குட் படங்களின் தேவை இருக்கிறது. அப்படி ஒரு இயக்குனராக வந்திருக்கிறார் அறிமுக இயக்குனர் சாரங்க் தியாகு. நல்ல ஃப்ரெஷான ஒரு ஃபீல்குட் படத்தை தந்திருக்கிறார். நடிகர்கள் தேர்வு, தரமான மேக்கிங் என தலைப்பு போலவே ஒரு கௌதம் மேனன் படத்தை பார்த்த உணர்வை தந்திருக்கிறார். மொத்தத்தில் திரையரங்கில் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கக் கூடிய ஒரு நல்ல படமாக அமைந்திருக்கிறது இந்த “ஆரோமலே”.
