லாக் டவுன் – விமர்சனம்!

லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஷ்கரன் தயாரிப்பில், அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் அறிமுக இயக்குநர் ஏ.ஆர். ஜீவா இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘லாக் டவுன்’. லாக் டவுன் காலகட்டத்தில் மக்களுக்கு ஏற்பட்ட உணர்வு மற்றும் உளவியல் ரீதியிலான தாக்கங்களை மையப்படுத்தி உருவாகியுள்ளது. இந்த படம் எப்படி இருக்கு? பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, நாயகி அனுபமா பரமேஸ்வரன் குடும்பத்தோடு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். படித்து முடித்து 2 ஆண்டுகளாக நல்ல வேலை கிடைக்காமல் வேலை தேடிக் கொண்டே இருக்கிறார். ஒரு சூழலில் தோழி ஒருத்தியிடம் அவள் அலுவலகத்தில் வேலை கேட்க, அவளும் ஒரு பார்ட்டிக்கு அழைத்து அங்கு ஒருவரை அறிமுகம் செய்கிறார். அந்த பார்ட்டியில் அவர்கள் வற்புறுத்தலால் குடிக்க, பின் தன்னிலை மறந்து போதையில் கிடக்கிறார். இரண்டு மாதங்கள் கழித்து அனுபமா கர்ப்பம் ஆக, அதிர்ச்சியில் உறையும் அனுபமா தோழியிடம் இதைக் கூறி வெளியே வர முயற்சி எடுக்கிறார். கருவைக் கலைக்க முயற்சிகள் எடுக்க, அந்த முயற்சி ஒவ்வொன்றுக்கும் ஆயிரம் தடைகள். இதற்கிடையில் கொரோனா லாக் டவுன் போடப்படுகிறது. இந்த சூழலை நாயகி எப்படி எதிர்கொண்டார்? அவர் மனநிலை என்ன? கருவைக் கலைத்தாரா? குழந்தையை பெற்றெடுத்தாரா? என்பதே மீதிக்கதை.

நாயகி அனுபமா பரமேஸ்வரன். இதற்கு முன் பார்த்திராத ஒரு எளிய குடும்பத்து பெண்ணாக நடித்திருக்கிறார். வேலை தேடி அடையும்போது ஒரு மனநிலை, கர்ப்பமான பின் அதில் இருந்து வெளியே வரும் வரை அவரின் மனநிலை என அத்தனையையும் அவர் நடிப்பில் மிக அழுத்தமாக, யதார்த்தமாக பிரதிபலித்திருகறார். இறுதிக் காட்சியில் கொஞ்சம் மனதை கனக்க வைக்கிறார்.

நாயவியின் தந்தையாக சார்லி. வழக்கம் போல தந்தை கதாபாத்திரத்தில் அசால்ட்டாக ஸ்கோர் செய்திருக்கிறார். அவரின் மனைவியாக நிரோஷா. நீண்ட நாளைக்குப் பிறகு திரையில் ஒரு அம்மாவாக நல்ல ஒரு நடிப்பை வழங்கியிருக்கிறார். ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் லிவிங்ஸ்டன் சில காட்சிகளே வந்தாலும் நம் மனதில் பதிகிறார். ராஜ்குமார், பிரியா வெங்கட் மற்ற நடிகர்களும் அவரவர் பங்கை செவ்வனே செய்திருக்கிறார்கள்.

கே.ஏ.சக்திவேல் ஒளிப்பதிவு படத்திற்கு பெரும் பலம். நகரின் நெருக்கமான தெருக்கள், சென்னை நகரின் கோவிட் கால பிரமாண்ட கழுகுப் பார்வை காட்சிகள், ரொம்பவே யதார்த்தமாக காட்சிப்படுத்தியிருக்கிறார். பிரெக்னன்ஸி டெஸ்ட் கிட் POV ஷாட் ஒரு நல்ல ஐடியா. சாபு ஜோசப் படத்தொகுப்பு கச்சிதம். என்.ஆர்.ரகுநந்தன் – சித்தார்த் விபின் இசை படத்துக்கு கூடுதல் பலமாக அமைந்திருக்கிறது.

இயக்குனர் ஜீவா, லாக் டவுன் காலகட்டத்தில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து இந்த படத்தை எழுதி இயக்கியிருக்கிறார். ரொம்பவே ஆழமான, பேசத் தயங்கும் ஒரு விஷயத்தை மிக ஆழமாக பேசியிருக்கிறார். கோவிட் டைம்லனையும் கதையில் அழகாக கொண்டு வந்திருக்கிறார். நாயகியின் போராட்டத்தை மிக நுட்பமாக பதிவு செய்து நம்மையும் சீட்டின் நுனியில் அமர வைக்கிறார். கிளைமாக்ஸில் மனதை ரணமாக்குகிறார். மொத்தத்தில் நல்ல ஒரு விவாதத்தை கிளப்பும் படத்தை தந்து முதல் படத்திலேயே முத்திரை பதிக்கிறார் இயக்குனர் AR ஜீவா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *