ஜேஷன் ஸ்டுடியோஸ் சச்சின் சினிமாஸோடு இணைந்து, ஸ்ரீதயாகாரன் சினி புரொடக்ஷன் மற்றும் MIY ஸ்டுடியோஸ் பேனர்களில் ஏ.எல்.உதயா, தயா என். பன்னீர்செல்வம், எம்.தங்கவேல் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் ‘அக்யூஸ்ட்’. பிரம்மாண்ட பட்ஜெட்டில் படமாக்கப்பட்டுள்ள ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தில் முதல் முறையாக உதயா, அஜ்மல் மற்றும் யோகி பாபு இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தை கன்னட திரையுலகில் வெற்றி படங்களை இயக்கிய பிரபு ஶ்ரீநிவாஸ் இயக்கியுள்ளார். பிரபல கன்னட நடிகை ஜான்விகா நாயகியாக நடித்துள்ளார். நரேன் பாலகுமார் இசையமைத்துள்ள இந்த படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
தயாரிப்பாளரும் இயக்குநருமான கேயார் பேசும்போது, “உதயாவின் தந்தை ஏ.எல். அழகப்பன் அவர்களும் நானும் நீண்டகால நண்பர்கள். எனவே உதயாவை எனக்கு சிறுவயது முதலே தெரியும். திரையுலகில் நீண்ட காலமாக போராடி வருகிறார். ‘அக்யூஸ்ட்’ காட்சிகள் பார்த்தேன், உதயாவின் திறமை பளிச்சிடுகிறது. பாடல்களும் சிறப்பாக வந்துள்ளன. இப்படம் உதயாவின் திரையுலகப் பயணத்தில் திருப்புமுனையாக திகழும்” என்றார்.
‘அக்யூஸ்ட்’ படத்தின் இயக்குநர் பிரபு ஶ்ரீநிவாஸ் பேசும்போது, “திரையுலகின் மிகப்பெரிய ஜாம்பவான்கள் இங்கு இருக்கிறீர்கள். நான் இந்தப் படத்தின் ஸ்கிரிப்டை உதயாவிடம் கொடுத்த சிறிது நேரத்திலேயே அவர் அதை முழுவதும் படித்து ஓகே சொன்னதோடு, அவரது வேறு சில படங்களையும் இதற்காக தள்ளி வைத்தார். படம் தொடங்கிய முதல் நாளிலிருந்து படப்பிடிப்பு நிறைவடையும் வரை உதயா தந்த ஒத்துழைப்பு அலாதியானது. அவர் மற்றும் அனைத்து குழுவினரின் ஒத்துழைப்போடு பிரேக்கே இல்லாமல் தொடர் படப்பிடிப்பை நடத்தினோம். இப்படத்தில் இடம்பெறும் பஸ் சண்டைக்காட்சி மிகவும் பேசப்படும். ஒட்டுமொத்த படமும் ரசிகர்களை கவரும்” என்றார்.
வீடியோ அழைப்பில் பேசிய நடிகர் யோகிபாபு, “வேறொரு இடத்தில் இரவு படப்பிடிப்பில் இருப்பதால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை. இந்த படத்தில் நான் பணியாற்றியது சிறப்பான அனுபவம். வாய்ப்பளித்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருக்கு நன்றி. படம் வெற்றி பெற வேண்டும் என்று ஆண்டவரை பிரார்த்திக்கிறேன்” என்றார்.
சண்டைக் காட்சி இயக்குநர் ஸ்டண்ட் சில்வா பேசும்போது, “உதயா அவர்களின் குடும்பத்தில் ஒருவன் நான். அவர், அவரது தந்தை ஏ.எல். அழகப்பன் சார், சகோதரர் விஜய் ஆகியோர் எனக்கு மிகவும் நெருக்கம். உதயா சாரின் விடாமுயற்சி எனக்கு மிகவும் பிடிக்கும். இப்படத்தில் இடம்பெறும் சண்டைக்காட்சிகள் அனைத்தும் அருமையாக வந்துள்ளது. படமும் நன்றாக வந்துள்ளது. எனவே, ‘அக்யூஸ்ட்’ மாபெரும் வெற்றி பெறும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தே இல்லை,” என்றார்.
நடிகை ஜான்விகா பேசுகையில், “என்னை நம்பி எனக்கு இந்த வாய்ப்பளித்த தயாரிப்பாளர்கள், இயக்குநர் மற்றும் உதயா சாருக்கு நன்றி. சிறப்பான பாடல்களை தந்துள்ள இசையமைப்பாளருக்கு நன்றி. திறமைகளுக்கு தவறாமல் ஆதரவளிக்கும் தமிழ் ரசிகர்கள் எனக்கும் ஆதரவளிப்பாளர்கள் என்று நம்புகிறேன். ‘அக்யூஸ்ட்’ படத்தில் பணியாற்றிய ஒவ்வொருவருக்கும் நன்றி. இந்த வாய்ப்புக்கு நான் அதிர்ஷ்டம் செய்துள்ளேன். தமிழ் கற்றுக் கொண்டு வருகிறேன், விரைவில் முழுவதும் தமிழில் பேசுவேன்,” என்றார்.
நடிகர் அஜ்மல் பேசும்போது, “அனைவருக்கும் வணக்கம். இந்தப் படத்தில் எனது கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடிக்கும். எனக்கும் உதயாவுக்கும் இடையே நல்ல கெமிஸ்ட்ரி திரையில் தெரியும். அவரை பார்த்து நிறைய கற்றுக்கொள்ளலாம். படத்தை சிறப்பாக உருவாக்கிய இயக்குநர் பிரபுவுக்கு நன்றி. நல்ல கன்டென்ட் உள்ள படம் இது. கட்டாயம் ஜெயிக்கும்,” என்றார்.
இயக்குநரும் நடிகருமான பாண்டியராஜன் பேசும்போது, “கஷ்டப்பட்ட அனைவரும் வெற்றி பெற்றதில்லை, ஆனால் வெற்றி பெற்ற அனைவரும் கஷ்டப்பட்டு உழைத்தவர்களே. உண்மையாக, நேர்மையாக கஷ்டப்பட்டால் நிச்சயம் வெல்லலாம், அப்படிப்பட்ட குழு இது, அனைவரும் மிகவும் திறமையானவர்கள். இவர்கள் வெற்றியடைந்தால் சினிமா மேலும் வெற்றி பெறும்” என்றார்.
பெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி பேசும்போது, “அக்யூஸ்ட் படவிழாவின் அழைப்பிதழே அருமை, உதயாவின் உழைப்பு அதிலேயே தெரிகிறது. அவருக்கு நல்ல நேரம் தொடங்கி விட்டது. அனைவரும் ஒற்றுமையாக இங்கு இருக்கிறோம் என்றால் அதற்கு காரணம் உதயா மீதும் அவரது தந்தையார் மீதும் நாம் வைத்துள்ள அன்பு தான். உதயாவை எந்த அவமானமும் பாதிக்காது, சிரித்த முகத்துடன் இருப்பார். விக்ரமுக்கு ‘சேது’ போல உதயாவுக்கு ‘அக்யூஸ்ட்’ அமையும். டிரெய்லர் மிரட்டுகிறது, மிகவும் பிரம்மாண்டமாக தயாராகி உள்ளது. படம் மிகப்பெரும் வெற்றியடைய வாழ்த்துகிறேன்,” என்றார்.
தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் முரளி ராமசாமி பேசும்போது, “இந்தப் படம் எப்படி தொடங்கியது, எப்படி உருவானது என்பது எனக்கு தெரியும். இவ்வளவு கஷ்டப்பட்டு இதை கட்டமைத்த சகோதரர் உதயாவுக்கு பாராட்டுகள். செல்வமணி சார் சொன்னது போல உதயாவுக்கு நல்ல நேரம் வந்துவிட்டது, இதை அவர் பிடித்துக்கொள்ள வேண்டும். திறமையான குழு இப்படத்திற்காக இணைந்துள்ளது, டிரெய்லரும் பாடல்களும் அருமை. படம் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்,” என்றார்.
தயாரிப்பாளர் ஏ.எல். அழகப்பன் பேசும்போது, “எனது மகன்களின் முயற்சிகளுக்கு நான் ஆதரவாக நின்றாலும், அவர்களின் முடிவுகளில் நான் தலையிட மாட்டேன். உதயா அவரது உழைப்பு மூலம் சொக்கத்தங்கமாக ஜொலிக்கிறார். அவரது தாயார் இன்று இருந்திருந்தால் மிகவும் மகிழ்ச்சியாக இருந்திருப்பார், அதே மகிழ்ச்சி எனக்கும் இருக்கிறது. படக்குழுவினர் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள், நன்றி,” என்றார்.
நடிகர் உதயா பேசும்போது, “எனது தாயார் கடவுளாக இருந்து என்னை வழிநடத்துகிறார். என்னை அவர் எங்கிருந்தோ பார்த்துக் கொண்டே தான் இருக்கிறார், ஆசீர்வதித்துக் கொண்டே தான் இருக்கிறார். திரையுலகத்தை விட்டே போய் விடலாம் என்று கூட யோசித்திருக்கிறேன், ஆனால் எனது தன்னம்பிக்கை காரணமாக இன்று உங்கள் முன்னால் நிற்கிறேன். எனவே அனைவரும் நம்பிக்கையுடன் உழைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
‘அக்யூஸ்ட்’ படம் எனது மிக முக்கிய படம். எனது 25வது ஆண்டில் இப்படி ஒரு படம் கிடைத்திருப்பது எனது பாக்கியம். இந்த படத்திற்காக எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. தயாரிப்பாளர்களுக்கு மிக்க நன்றி. இயக்குநர் அற்புதமாக ‘அக்யூஸ்ட்’ படத்தை உருவாக்கியிருக்கிறார், அவருக்கு நன்றி. மிகச்சிறந்த இயக்குநர் அவர். நரேன் பாலகுமார் இசை அருமை. உடன் நடித்தவர்களுக்கும், பணியாற்றிய அனைவருக்கும் மிகுந்த நன்றி. இவர்கள் அனைவரும் எனது குடும்ப உறுப்பினர்கள் மாதிரி தான். எங்கள் அனைவரின் உழைப்பில் சிறப்பாக உருவாகியுள்ள ‘அக்யூஸ்ட்’ படம் வெற்றி பெறும் என மனமார நம்புகிறேன். உங்கள் அனைவரின் வாழ்த்தையும், ஆதரவையும் கோருகிறேன்,” என்றார்.

