தனுஷ் வளர்ந்த பின் வேறு வேறு கதைக்களங்களில் நடிக்கச் சென்ற பின் அவரின் மிடில் கிளாஸ் இளைஞன் படங்களில் நடிக்க ஹீரோக்கள் பஞ்சம். அந்த குறைய போக்க வந்திருப்பவர்களில் ஒருவர் தான் கென் கருணாஸ். ஆனால் கொஞ்சம் இறங்கி பள்ளி மாணவனை மையமாக வைத்து கென் நடித்து இயக்கியிருக்கும் படம் “யூத்”. படம் எப்படி இருக்கு? பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, பேக்கரி வைத்திருக்கும் சுராஜ் மகன் கென், அம்மா தேவதர்ஷினியின் செல்லப்பிள்ளை. 10ஆம் வகுப்பில் 35 மார்க் வாங்கி ஜஸ்ட் பாஸானதையே கொண்டாடுகிறார். பிரின்சிபல் காலில் விழாத குறையாக கெஞ்சி தன் மகனுக்கு 11, 12ஆம் வகுப்புக்கு சீட்டும் வாங்கி விடுகிறார். ஆனால் கென் பள்ளியில் பல பெண்கள் பின் சுற்றி, இறுதியில் மீனாட்சி தினேஷை காதலிக்க தொடங்குகிறார். இந்த காதலை பிரிக்க ஒரு சதியும் நடக்கிறது. ஒரு கட்டத்தில் காதல் பிரிவு ஏற்பட, அனிஷ்மாவின் குணங்களால் ஈர்க்கப்பட்டு அனிஷ்மாவுடன் பழகி வருகிறார் கென். பள்ளி Farewell விழாவில் அனிஷ்மாவிடம் தன் காதலை சொல்லப் போகிறார். இதற்கிடையில் பள்ளியில் சில மாணவர்களுடன் ஏற்பட்ட பிரச்சினை கென் வீட்டிலும் எதிரொலிக்கிறது. கென் காதல் என்ன ஆனது? பள்ளி வாழ்க்கை என்னவானது? அவர்கள் பெற்றோர்கள் நிலை என்ன? என்பதே படத்தின் மீதி கதை.
நாயகன் கென். 20-களில் துவக்கத்தில் இருக்கும் ஒரு துடிப்பான இளம் ஹீரோ தமிழ் சினிமாவின் தற்போதைய தேவையாக இருக்கிறது. அந்த குறையை நிச்சயம் கென் போக்குவார் என சொல்லும் அளவுக்கு துறுதுறுவென காமெடி, காதல், சண்டைக்காட்சிகள், நடனம், எமோஷன் என அனைத்து ஏரியாக்களிலும் ஸ்கோர் செய்கிறார். எல்லாவற்றையும் விட முக்கியமாக தனுஷ் போலவே நம் பக்கத்து வீட்டு பையன் போன்ற கனெக்ட் கென்னிடம் இருக்கிறது. அது ரொம்பவே நம்மை ரசிக்க வைக்கிறது. இது போலவே நல்ல கமெர்சியலான, அதே சமயம் குடும்ப ரசிகர்களை ஈர்க்கும் படங்களில் நடித்தால் நிச்சயம் பெரிய ஹீரோவாக வலம் வர எல்லா வாய்ப்புகளும் கென்னுக்கு இருக்கிறது.
கென் பெற்றோராக வரும் சுராஜ் மற்றும் தேவதர்ஷினி ஜோடி. படம் முழுக்க சின்னஞ் சிறுசுகள் ஆக்கிரமிக்க, படத்துக்கு உயிர் சேர்ப்பது இந்த இருவரும் தான். மகனுடன் பெரிதாக பேசிக் கொள்ளாமல் இருக்கும் அப்பாவாக சுராஜ், மகனுக்காக எல்லாவற்றையும் செய்யும் தாயாக தேவதர்ஷினி இருவருமே நம்மை நெகிழ வைக்கிறார்கள். இரண்டாம் பாதியில் பல காட்சிகளில் நம்மை கலங்க வைக்கிறார்கள்.
நாயகிகளாக அனிஷ்மா. முதல் பாதியில் ஆல் இருக்கிற இடம் தெரியாமல் இருக்கிறார், ஆனால் இரண்டாம் பாதியை மொத்தமாக ஆக்கிரமிக்கிறார். அவ்வளவு கியூட், அவரை பார்த்தால் பிடிக்காது என யாருமே சொல்ல முடியாது. நடிப்பிலும் சிறப்பு. மீனாட்சி தினேஷ், பிரியான்ஷி யாதவ் என இருவருமே பள்ளி மாணவிகளாக வந்து முதல் பாதியை கலகலப்பாக்குகிறார்கள். பிரின்சிபலாக நளினி, கென் நண்பர்களாக நடித்தவர்கள், பள்ளி மாணவ, மானவிகள் என அத்தனை பேரும் நல்ல தேர்வு. சிறப்பான பங்களிப்பையும் செய்திருக்கிறார்கள்.
இந்த சின்ன படத்தை இன்னும் பிரமாண்டமாக மாற்றியிருக்கிறது இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இசை. முட்டை கலக்கி பாடல் தொடங்கி ஒவ்வொரு பாடலும் படத்துக்கு பலம். பின்னணி இசையும் படத்தின் தன்மையை காட்சிக்கு காட்சி நம்மை தயாராக்குகிறது. ரொம்பவே கலர்ஃபுல்லான ஒளிப்பதிவுவும், பக்காவான எடிட்டிங்கும் படத்தை மேலும் தரமாக்குகிறது.
24 வயதில் இயக்குனராக களமிறங்கி தானே நடித்திருக்கும் கென் தைரியத்துக்கு பாராட்டுக்கள். முதல் காட்சியில் இருந்து இறுதி காட்சி வரை பொழுதுபோக்கை மனதில் வைத்து குடும்பத்தோடு ரசிக்கும்படியான ஒரு ஜாலியான படத்தை தந்திருக்கிறார். பல படங்களில் பார்த்த அதே வழக்கான கதை என்றாலும் ஹீரோவின் பின்னணி, காதல்கள், நடிகர்கள் தேர்வு என கொஞ்சம் தனித்துவமாக்குகிறது. முதல் பாதியில் மாணவர்களின் அட்ராசிட்டி, இரண்டாம் பாதியில் எமோஷன் என ஒரு முழுநீள கமெர்சியல் பேக்கேஜாக தந்திருக்கிறார். மொத்தத்தில் இன்றைய 2கே இளைஞர்களை குறி வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்த யூத், நிச்சயம் குடும்ப ரசிகர்களையும் கவரும்.

