வெஞ்சென்ஸ் – விமர்சனம்!

தமிழ் சினிமாவில் நாயகியை மையமாக வைத்து வரும் படங்கள் எல்லாமே பெரும்பாலும் நாயகியை பாதிக்கப்பட்டவராக காட்டி, அதிலிருந்து எப்படி மீள்கிறார் என்பது போலவே இருக்கும். ஆனால் நாயகர்களுக்கே உரிய புத்திசாலித்தனமாக காய் நகர்த்தி மிகப்பெரிய உயரிய இடங்களை அடையும் நோக்கத்தஒ கொண்ட படங்கள் வருவதே இல்லை. அந்த வகையில் அபர்ணதி நடிப்பில் இந்த வாரம் வெளியாகியுள்ள “வெஞ்சென்ஸ்” திரைப்படம் அந்த குறையை போக்கியிருக்கிறது. ராகுல் அசோக் இயக்கியிருக்கும் இந்த படம் எப்படி இருக்கு? பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, பள்ளி படிக்கும்போது இருந்த தன் மேல் மற்றவர்கள் கவனம் செலுத்த வேண்டும், தன்னைப் பற்றி மற்றவர்கள் பேச வேண்டும் என்ற எண்ணத்தில் வளர்கிறார் அபர்ணதி. அதற்காக எந்த எல்லைக்கும் செல்கிறார் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநிலத்தில் முதல் மாணவியாக வருவது, தன் தந்தையின் உடல் உறுப்பை தானம் செய்வது தொடங்கி படித்து கலெக்டராவது வரை எல்லாவற்றையும் செய்து வருகிறார். கலெக்டராக அதிரடியான விஷயங்களை செய்து தன்னை லைம்லைட்டிலேயே வைத்திருக்கிறார். கவன ஈர்ப்புக்காக செய்தாலும் அதில் ஒரு சில நல்ல விஷயங்களும் செய்கிறார்.

இப்படி சென்று கொண்டிருக்கும் அபர்ணதி வாழ்க்கையில் அரசியல் குறுக்கிடுகிறது. அரசியல் சதுரங்கத்தில் காய்களை நகர்த்தும் முக்கிய இடத்துக்கும் செல்கிறார். எல்லா தடைகளையும் மீறி தான் நினைத்ததை அடைந்தாரா? அட்டென்ஷன் கிடைக்க வேண்டும் என்பதற்காக எல்லாவற்றையும் செய்யும் அவர் வாழ்க்கை எப்படி முடிந்தது? என்பதே மீதிக்கதை.

கதையின் நாயகியாக அபர்ணதி. ஏற்கனவே நல்ல நல்ல படங்களில் நடித்து நல்ல நடிகை என்ற பெயரை பெற்றவர், தற்போது இந்த படத்தில் ஒரு மாஸ் ஹீரோயினாக வலம் வந்திருக்கிறார். கொஞ்சம் கிரே ஷேட் உள்ள கதாபாத்திரம் என்றாலும் அதை அனாயசமாக செய்து முடித்திருக்கிறார். அறம் நயன்தாரா கதாபாத்திரம் போன்றதொரு கம்பீரம் தேவைப்படும் அந்த கதாபாத்திரத்துக்கு நியாயம் சேர்த்திருக்கிறார்.

பெரும் அரசியல் தலைவர்களாக நடித்திருக்கும் இளவரசு, லிவிங்ஸ்டன், டெல்லியில் இருந்து அரசியல் சதுரங்கம் ஆடும் ஜான் விஜய், அபர்ணதியின் தந்தையாக சில காட்சிகளே வந்தாலும் எமோஷனை வெளிப்படுத்தும் காளி வெங்கட், ஒய்.ஜி.மகேந்திரன், சரவண சுப்பையா, சச்சு, சாய் தன்யா, சுரேஷ் சக்கரவர்த்தி என ஒவ்வொருவரும் அவரவர் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

எம்.எஸ்.பிரபுவின் ஒளிப்பதிவு படத்தை நல்ல ஒரு தரமான சினிமாவை பார்த்த அனுபவத்தை தந்திருக்கிறது. நல்ல பிரமாண்டமாகவும் படத்தை காட்டியிருக்கிறது. நல்ல செலவு செய்து எடுத்திருப்பதும் காட்சிகளில் நன்றாகவே தெரிகிறது. கார்த்திக் ராஜா இசையில் பாடல்கள் ஓகே ரகம். அருண் ராஜ் பின்னணி இசை படத்தை கொஞ்சம் பரபரப்பாக்குகிறது.

இயக்குனர் ராகுல் அசோக், ஒரு நல்ல சோசியோ பொலிட்டிகல் படத்தை தர மிக கடுமையாக உழைத்திருப்பது படத்தை பார்க்கும் போதே தெரிகிறது. முதல் காட்சியிலேயே கதைக்குள் சென்று விடுகிறார். கதாபாத்திரத்தின் குணங்களை எளிதாக சொல்லி, நம்மை கதைக்குள் பயணிக்க தூண்டுகிறார். அடுத்து என்ன செய்வார்? தன் குணத்தை மாற்றிக் கொள்வாரா என நினைத்து பார்த்தாலும் ஒவ்வொரு காட்சியிலும் நம்மை சர்ப்ரைஸ் செய்து கொண்டே இருக்கிறார். தமிழக அரசியலில் நடந்த சில சம்பவங்களை நினைவுபடுத்தும் விதத்தில் சில காட்சிகளை வைத்து நம்மை ஒன்ற வைக்கிறார். இன்றைய சூழலில் டெல்லி எப்படி தமிழக அரசியலை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள முயல்கிறது என்பதையும் அழகாக சொல்லியிருக்கிறார். இன்றைய தேர்தல் சூழலில் இந்த படம் நிச்சயம் பலரையும் ரசிக்க வைக்கும் என்பது உறுதி. நிச்சயம் பார்த்து ரசிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *