சாத்தான்: தி டார்க் – விமர்சனம்!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரில்லர் படங்கள் வந்து கொண்டிருந்தது போய் ஹாரர் காமெடி படங்கள் எப்போது வர ஆரம்பித்ததோ அன்றில் இருந்து சீரியஸான ஹாரர் திரில்லர் படங்களின் வரவு நின்றே போய் விட்டது எனலாம். அப்படிப்பட்ட ஹாரர், திரில்லர் ஜானரில் கொஞ்சம் சர்ச்சையை கிளப்பும் விஷயத்தை பேசி உருவாகியிருக்கும் படம் தான் “சாத்தான் தி டார்க்”. படம் எப்படி இருக்கு? பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, அஸ்தினாபுரம் என்ற கிராமத்தில் ஒட்டுமொத்த கிராமமே கடவுள் நம்பிக்கை இல்லாமல் சாத்தான் வழிபாட்டை மேற்கொண்டு வருகிறார்கள். பல வருடங்களுக்குப் பிறகு அந்த கிராமத்தில் மீண்டும் பலர் மர்மமான முறையில் இறக்கிறார்கள். அந்த நேரத்தில் நாயகி ஐராவின் அம்மா மோனா பத்ரே விசித்திரமாக நடந்து கொள்கிறார். அவர் வீடே மர்மமாக காட்சியளிக்கிறது. நாயகி ஐரா படிக்கும் பள்ளியிலும் சர்ச்சிலும் சில பிரச்சினைகள் வருகின்றன. அதே பள்ளியில் படிக்கும் நாயகன் FJ ஐராவை காதலிக்கிறார். அவர் ஏதோ பிரச்சினையில் இருக்கிறார் என்பதை தெரிந்து கொள்ளும் FJ, ஐராவை காப்பாற்றுவதற்காக பல முயற்சிகளில் ஈடுபடுகிறார். காவல்துறை அதிகாரியுடன் சேர்ந்து சில விஷயங்களை கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார். இந்த மர்ம மரணங்களின் பின்னணி என்ன? அதை தடுத்து நிறுத்த வழி கண்டுபிடித்தாரா FJ? இந்த மர்ம சம்பவங்களின் பின்னணி என்ன? நாயகி ஐரா வீட்டில் இருக்கும் மர்மம் என்ன? என்பதே மீதிக்கதை.

நாயகனாக பிக் பாஸ் FJ. ஒரு பள்ளி மாணவனாக துடிப்பான இளைஞனாக நடித்திருக்கிறார் FJ. அவரது வேலையை குறைவில்லாமல் செய்திருக்கிறார். நாயகி ஐரா. பள்ளி மாணவியாக வரும் அவர் படம் முழுக்க ஒருவித பதட்டத்திலேயே இருக்கும் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். அவரும் பயந்து நம்மையும் பயப்பட வைக்கிறார்.

நாயகியின் அம்மாவாக படத்தின் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மோனா பத்ரே நம்மையும் அலற விடுகிறார். ஃபிளாஷ்பேக்கில் வரும் சாந்தினி தமிழரசன் கதையின் மையக் கதாபாத்திரத்தில் சில காட்சிகள் வந்தாலும் கதையை தாங்கிப் பிடிக்கிறார். சர்ச் கான்வெண்ட் மதராக வரும் ஸ்ரீஜா ரவி, காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் நடிகர், FJவின் நண்பர்கள், அந்த ஊர் மக்கள் என மற்ற கதாபாத்திரங்களில் நடித்தவர்கள் எல்லாருமே அவரவர் வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் பாலா ஜி.ராமசாமி ஒளிப்பதிவு நம்ம பிரமிக்க வைக்கிறது. இரவிலும் பகலிலும் என ஒவ்வொரு காட்சியிலும் அவரது கேமரா கோணங்களால் நம்மை மிரட்டுகிறார். கலை இயக்குனர் பங்கும் சிறப்பாக அமைந்திருக்கிறது. அஷ்வின் கிருஷ்ணாவின் இசை படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது. முக்கியமான காட்சிகளில் வரும் பின்னணி இசை படத்துக்கேற்ற தன்மையை அழகாக பிரதிபலிக்கிறது. படமே இரண்டு பாகங்கள் என்பதால் பல இடங்களில் ஒரு முழுமைத் தன்மை இல்லாத அளவில் படத்தொகுப்பு செய்திருக்கிறார்கள் ராஜ்குமார் மற்றும் கோவை அபிஷேக்.

இயக்குனர் மணிகண்டன் ராமலிங்கம் ஒரு வித்தியாசமான பாணியில் ஒரு புது கான்செப்டில் இந்த கதையை எழுதியிருக்கிறார். உருவாக்கத்திலும் அவர் சொல்ல வந்த கருத்தை ரசிகர்கள் மனதில் பதிய வைக்க முயற்சி எடுத்திருக்கிறார். அதில் சில விஷயங்கள் தவறி இருந்தாலும் இரண்டாம் பாகம் வெளிவந்த பின் மொத்த கதையும் நமக்கு புரியும் என்பது உண்மை. படத்தின் ஆரம்பத்தில் சொல்லப்படும் முன் கதை படம் முடியும்போது பலருக்கும் மனதில் பதியாமல் போவதால் குழப்பமாகவே முடிகிறது. ஆனாலும் ஒரு ஹாரர் திரில்லர் படத்திற்கே உண்டான மிரட்டலான காட்சிகள் மூலம் நம்மை மயிர்க்கூச்செறிய வைக்கிறார். ஒரு தரமான அனுபவத்தை தந்த இயக்குனர் மிச்சத்தை இரண்டாம் பார்ட்டில் பார்த்துக் கொள்ளுங்கள் என முடித்து நம்மை ஏமாற்றி விடுகிறார். சீக்கிரம் பார்ட் 2 ரிலீஸ் செய்தால் நிச்சயம் ரசிகர்கள் பார்த்து ரசிப்பார்கள் என்பதை உறுதியாக சொல்லலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *