மேட் டாமன் நடித்த ‘தி மார்ஷியன்’ என்ற படம் Andy Weir எழுதிய நாவலை மையமாகக் கொண்டு உருவாகி பெரும் வெற்றியை பெற்ற படம். அதே Andy Weir, 2021-ல் ‘ப்ராஜெக்ட் ஹெயில் மேரி’ என்ற பெயரில் எழுதி, அதிகம் விற்பனையான ஒரு அறிவியல் புனைகதை நாவல் தற்போது திரைப்படமாக உருவாகியிருக்கிறது. Ryan Gosling நாயகனாக நடித்திருக்கும் இந்த படம் எப்படி இருக்கு? பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, பூமியில் இருந்து பல ஒளி ஆண்டுகள் தள்ளி இருக்கும் தொலைதூர நட்சத்திர மண்டலத்தில், ஒரு தனித்த விண்கலம் ஒன்று இருக்கிறது. அந்த விண்கலத்தில் கோமாவில் இருந்து விழித்தெழுகிறார் அறிவியல் மற்றும் அணுக்கூறு உயிரியலாளரான Ryan Gosling. அந்த விண்கலத்தில் மனிதர்கள் யாருமே இல்லை, அவர்களது சடலங்கள் மட்டுமே இருக்கின்றன. அவர் தனது நினைவை மீட்டெடுக்கும்போது, ஒரு வினோதமான பொருளின் மர்மத்தை ஆராய வேண்டும் என்ற தனக்கான பணியை நினைவு கூர்கிறார். அப்பொருள், சூரியனின் ஒளியை மங்கச் செய்து, அதை முற்றிலுமாக ஒழிக்கும் Astrophage என்ற நுண்ணுயிரியாகும். Ryan Gosling-ஐ பணியில் அமர்த்தும் Sandra Huller, Astrophage-களை முற்றிலுமாக அழிக்க ப்ராஜெக்ட் ஹெயில் மேரியைத் தொடங்குகிறார். அதன் முடிவு என்ன? அந்த விண்கலத்தில் Ryan Gosling எப்படி அவர் பணியை தொடர்ந்தார்? நினைவுகளை எப்படி மீட்டெடுத்தார்? என்பதை உணர்வுப்பூர்வமாக சொல்வதே மீதிக்கதை.
நாயகனாக Ryan Gosling. காதல், காமெடி, ஆக்ஷன் என எந்த படத்தை கொடுத்தாலும் அதில் 100% உழைப்பை கொடுக்கும் ஒரு திறமையான நடிகர். இந்த படத்திலும் முழுக்க முழுக்க தனி ஒரு மனிதனாக படத்தை தாங்கியிருக்கிறார். மற்ற நடிகர்கள், ஏன் மனிதர்களே இல்லாத சூழலில் தனி ஒருவராக அவர் செயல்கள் தான் படத்தில் திரைக்கதையே. அதை இலகுவாக செய்திருக்கிறார். Sandra Huller அவ்வப்போது ஒரு சில காட்சிகளில் வந்து போகிறார். கதையை நகர்த்தும் ஒரு கருவியாக வருகிறார். மற்றபடி ராக்கி குரலாலும், பேசும் வசனங்களாலும் நம் மனதில் பதிந்து விடுகிறது.
James Ortiz, Ray Porter & Meryl Streep, Priya Kansara என பின்னணி குரல்களும் படத்துக்கு உயிர் தந்திருக்கிறது. Daniel Pemberton இசை நம்மை விண்வெளிக்கு அழைத்து செல்கிறது. உயிரோட்டமான இசை. Greig Fraser ஒளிப்பதிவு படத்துக்கு பெரும் பலம்.
நாவலை சினிமாவுக்கு ஏற்றவாறு தழுவி திரைக்கதை எழுதியிருக்கிறார் Drew Goddard. அவரது பங்கு அளப்பரியது. அதை திரையில் காட்சிகளாக கொண்டு வந்த Phil Lord மற்றும் Christopher Miller உழைப்பை பாராட்டியே தீர வேண்டும். மார்ஷியன் படத்தை ரசித்த ரசிகர்கள் நிச்சயம் இந்த படத்தையும் கொண்டாடுவார்கள். பெரிய திரையில் பார்த்து ரசிக்க தகுந்த சிறப்பான ஒரு திரைப்படம் தான் இந்த “ப்ராஜெக்ட் ஹெயில் மேரி”.

