ஹாலிவுட்டிலும், உலக சினிமாக்களிலும் பல போர் படங்கள் உருவாகியுள்ளன. ஆனால் அவற்றை காட்டிலும் போர் பின்னணியில் போர் சூழலுக்கு நடுவில் வாழும் மக்களின் வாழ்வியலை பற்றியும், அவர்கள் மன ஓட்டங்கள் எப்படி இருக்கும் என்பது பற்றியும், நம்மை போல இயல்பாக அவர்கள் இருப்பார்களா? என்பதை காட்டும் படங்கள் என வரும் படங்கள் உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. தமிழில் அப்படி வெளியாகி இருக்கும் ஒரு படம் தான் “நீளிரா”.
படத்தின் கதைப்படி, நீளிரா என்றால் நீண்ட இரவு என்பது தான் அதன் பொருள். போர் சூழலில் ஒரு இரவில் நடக்கும் சம்பவங்களை சொல்லும் கதை இது. இலங்கையில் போர் பகுதிகளில் பதட்டமான சூழலுக்கு நடுவில் வாழும் ஒரு குடும்பத்தில் மகளுக்கு திருமணம். அந்த திருமணத்துக்குக் கூட இந்திய அமைதி காப்பு படையிடமும் (IPKF), இலங்கை ராணுவத்திடமும் அனுமதி பெற வேண்டிய சூழல். விடிந்தால் திருமணம் என்ற சூழலில் அவர்கள் வீட்டிற்கு வெளியே IPKF வீரர்கள் சிலர் வந்து நிற்க, திருமண வீட்டில் இருப்பவர்களுக்கோ பதற்றம். அதே நேரம் வேறு ஒரு இடத்தில் ராணுவத்துக்கும் போராளிகளுக்கும் இடையே தீவிர சண்டை நடக்கிறது. விடியும் வரை, பெரும் படை வரும் வரை இந்த வீரர்கள் இந்த வீட்டிலேயே இருக்கப் பணிக்கப்படுகிறார்கள். அந்த வீட்டிற்குள் தஞ்சம் புகும் வீரர்கள் அந்த குடும்பத்தினரை எப்படி நடத்தினார்கள்? போராளிகள் இவர்களை தேடி வந்தார்களா? போரில் எளிய மக்கள் பாதிக்கப்பட்டார்களா? என்பதை பேசுகிறது மீதிப்படம்.
நடிகர்களை பொறுத்தவரையில் அத்தனை பேருமே கச்சிதமான தேர்வு. நாயகன், நாயகி என பிரித்து சொல்ல முடியாத அளவுக்கு ஒவ்வொருவருமே அந்தந்த கதாபாத்திரங்களாக வாழ்ந்திருக்கிறார்கள். நவீன் சந்திரா ராணுவ வீரராக, அதே சமயம் வீரனின் கடமை என்ன? பொறுப்பு என்ன? மக்களை எப்படி நடத்த வேண்டும் என அவர் கதாபாத்திரம் நம் மனதில் நிற்கிறது. கபிலா வேணு அந்த போர் சூழலை அணுகும் விதத்தில் தத்ரூபமான நடிப்பால் அழுத்தமாக பதிகிறார்.
ரூபா கொடுவாயூர் பாதிக்கப்பட்ட பெண்ணாக நாயகியர் பலரும் செய்ய தயங்கும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்து நம் மனதை கனமாக்குகிறார். கல்யாண பெண்ணாக சித்து குமரேசன் அவரது துடிப்பான இளம்பெண் கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார். விது, ‘கயல்’ வின்சென்ட், ஸ்வாதி கிருஷ்ணா, சிறுவர்கள் என அத்தனை பேருமே அந்த மண்ணின் மக்களாகவே நம் கண்ணுக்கு தெரிகிறார்கள். அப்படி ஒரு அசாத்திய உழைப்பு.
செல்வரத்னம் பிரதீபன் ஒளிப்பதிவு அந்த களத்திலேயே நாமும் பயணித்த உணர்வை தந்திருக்கிறது. இரவு காட்சிகளில் எல்லாம் உண்மையில் பதைபதைக்க வைக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு கே ஒரு சிறப்பான இசையை தந்து நம்மை படத்தோடு ஒன்ற வைக்கிறார். தபஸ் நாயக் ஒலிப்பதிவு ஒரு யதார்த்த உணர்வை தந்திருக்கிறது.
இயக்குனர் சோமீதரன். இலங்கையில் பிறந்து, அந்த சூழலில் வளர்ந்தவரால் தான் இப்படி ஒரு ஆழமான, அழுத்தமான படத்தை தர முடியும். ஆரம்ப காட்சிகளிலேயே நம்மை கதைக்குள் இழுக்கிறார். முதல் காட்சியில் அந்த தாத்தா திரும்பி ஒரு ராணுவ வீரரை பார்த்து விட்டு செல்வதற்கான காரணம் ஆரம்பித்து இறுதிக் காட்சியில் அவர் செய்யும் விஷயம், வசனம் என எல்லாவற்றையும் படத்தோடு பார்க்கும்போது ஒன்ற முடிகிறது. ஒரு திருமணம் கூட இவ்வளவு சிரமத்தில் செய்ய வேண்டி இருக்கிறது, சாதாரண சாலையில் நடமாடுவது கூட அவ்வளவு பதட்டத்தை உருவாக்குகிறது என்பதெல்லாம் திரையில் பார்க்கும்போதே நம் இதயத்தை கனமாக்குகிறது. நடிகர்கள் தேர்வு, ஆழமான வசனங்கள், கதையை சொன்ன விதம் என இயக்குனராக சோமீதரன் வெற்றியை பெற்றிருக்கிறார். இந்த மாதிரி உண்மைக்கு நெருக்கமான கலைஞர்கள் தமிழ் சினிமாவுக்கு தேவை. அதை சோமீதரன் நிறைவு செய்திருக்கிறார். நிச்சயம் பார்க்கக் கூடிய ஒரு பதிவு.

