நீ forever – விமர்சனம்!

இணையம் வந்த பிறகு வாழ்க்கை முறையிலேயே பல மாற்றங்கள் ஏற்பட்டு விட்டது. இன்றைய Gen-Z  தலைமுறையின் சொல்லாடல்கள், வாழ்க்கை முறை எல்லாம் முந்தைய தலைமுறைகளுக்கு புரியாத புதிராகவே மாறியிருக்கிறது. அப்படி Gen Z உலகத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் தான் “நீ forever”. நவீன டேட்டிங் ஆப் மூலம் இணையும் ஒரு காதல் ஜோடியைப் பற்றிய இந்த படம் எப்படி இருக்கு? பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, நாயகன் சுதர்ஷன் கோவிந்த். சிறு வயதில் இருந்தே தந்தையால் கைவிடப்பட்டு தாய் அரவணைப்பு மற்றும் தாத்தாவின் கண்டிப்புடன் வளர்பவர். இளைஞரான பின் சென்னையில் நண்பர்களுடன் தங்கியிருக்கும் அவருக்கு ஒரு டேட்டிங் ஆப் உருவாக்க வேண்டும் என்ற லட்சியம். மறுபுறம் நாயகி அர்ச்சனா ரவி, ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்த அவருக்கு, சினிமாவில் இயக்குனராகி தான் சொல்ல விரும்பும் வாழ்க்கை கதைகளை சொல்ல வேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கிறார். ஒரு சூழலில் இருவரும் டேட்டிங் ஆப் மூலம் சந்திக்க வேண்டியதாகிறது. இருவருக்கும் வேறு ஒரு காரணம் இருந்தாலும் நன்றாக பழகுகிறார்கள். இந்த ஜோடி காதலில் விழுந்ததா? அவர்கள் காதல் என்னவானது? அவர்கள் லட்சியம் என்ன ஆனது? என்பதே மீதிக்கதை,

நாயகன் சுதர்ஷன் கோவிந்த். நாளைய இயக்குநர் 6வது சீசனில் டைட்டில் வின்னராக இவர் கதைக்கேற்ற முகமாக ஆரம்ப காட்சிகளில் தோன்றுகிறார். ஆனால் அப்படியே தன்னை மாற்றிக் கொண்டு காதல் காட்சிகளிலும் ரசிக்க வைக்கிறார். அவருக்குள் இருக்கும் பிரச்சினைகளை தாங்கி நடித்திருக்கிறார். மிஸ் தென்னிந்தியா 2016 அர்ச்சனா ரவி நாயகியாக நடித்துள்ளார். படம் முழுக்க ஃப்ரெஷாக வரும் அவர், காதல் காட்சிகளிலும் பாடல் காட்சிகளிலும் அவரது அழகால் ஈர்க்கிறார்.

மிக முக்கியமான கதாபாத்திரத்தில் ஒய் ஜி மகேந்திரன் அவருக்கே உரித்தான அனாயசமான நடிப்பால் ஸ்கோர் செய்கிறார். ஒரு காட்சியில் வந்தாலும் நிழல்கள் ரவியின் ஆளுமை வெளிப்படுகிறது. எம்.ஜே.ஸ்ரீராம், ரெத்திகா ஸ்ரீனிவாஸ், செல்லா, பிருந்தா, டாக்டர்.வித்யா, பிரதோஷ், சினேகா சக்தி, இயக்குனர் அசோக் குமார் கலைவாணி என மற்ற கதாபாத்திரங்களில் நடித்தவர்களும் அவர்கள் பங்கை நன்றாகவே செய்திருக்கிறார்கள்.

ராஜா பட்டாச்சார்ஜி ஒளிப்பதிவில் படம் முழுக்க காதல் படத்துக்கேற்ற கலர்ஃபுல்லான அதே சமயம் சாஃப்டான ஒளிப்பதிவால் நம்மை ரசிக்க வைக்கிறார். அஸ்வின் ஹேமந்த் இசையில் பாடல்கள் ஒவ்வொன்றும் அருமை. திரையில் காட்சிகளோடு சேர்த்து பார்க்கும்போது இன்னும் அழகு. பின்னணி இசையிலும் நம் இலகுவாக்குகிறார்.

இயக்குனர் அசோக் குமார் கலைவாணி. ஒரு டேட்டிங் அப்ளிகேஷன் பயன்பாடும் அதன் மூலம் சந்தித்துக் கொள்ளும் இருவர் வாழ்க்கையும், அதனால் ஏற்படும் விளைவுகளையும் காதல், காமெடி, எமோஷன் கலந்து அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும்படி தந்திருக்கிறார். முதல் பாதி முழுக்க காதல், காமெடி என இன்றைய இளைஞர்களின் வாழ்க்கையை காட்டியவர் இரண்டாம் பாதியில் குடும்ப உறவுகளின் உன்னதத்தையும், அன்பைப் பறிமாறுவதின் முக்கியத்துவத்தையும் மிக அழகாக சொல்லி, தியேட்டரை விட்டு வெளியே வரும்போது திருப்தியான மனநிலையுடன் ரசிகர்களை அனுப்பி வைக்கிறார். நிச்சயம் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *