காளிதாஸ் 2 – விமர்சனம்!

2019ஆம் ஆண்டு வெளியான த்ரில்லர் படம் தான் காளி தாஸ். பரத் நடிப்பில் வெளியான இந்த படம் பெரு வெற்றியை பெற்றது, அந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது இன்னும் பிரமாண்டமாக வெளியாகியிருக்கிறது. படம் எப்படி இருக்கு? முந்தைய பாகத்தை போலவே வெற்றியை அடையுமா? பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட வீடுகளை கொண்ட ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் அனந்த் நாக் – அபர்னதி தம்பதியினரின் குழந்தை காணாமல் போகிறது. அதை விசாரிக்க வருகிறார் காவல்துறை அதிகாரி பரத். அந்த விசாரணையில் அசிஸ்டண்ட் கமிஷனர் பவானி ஸ்ரீயும் உள்ளே வருகிறார். இவர்கள் இணைந்து அந்த கொலையாளியை பிடிக்க விசாரணையை நடத்துகிறார்கள். இதற்கிடையில் மர்மமான முறையில் இரண்டு ரவுடிகளும் இறந்து போகிறார்கள். இந்த வழக்கில் உண்மையான குற்றவாளியை காவல்துறை கண்டுபிடித்ததா? யார் அந்த கொலையாளி? என்ன காரணம்? என்பதே மீதிக்கதை.

நாயகன் பரத். முதல் பாகத்தை போலவே அந்த போலீஸ் கதாபாத்திரத்தில் அதற்கான எல்லைக்குள் மிக அழகாக, இயல்பாக நடித்திருக்கிறார். உயர் அதிகாரி பவானி ஸ்ரீயிடம் பணிந்து செல்வது, கொலையாளியை பிடிக்க எல்லா முயற்சியை மேற்கொள்வது என வழக்கம் போல கதாபாத்திரத்துக்கு நியாயம் சேர்த்திருக்கிறார். அறிமுக நாயகன் அஜய் கார்த்திக் முதல் படத்திலேயே ஒரு குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்திருக்கிறார். திரில்லர் படம் என்பதால் காமெடி, டான்ஸ் காட்சிகளில் பார்க்க முடியவில்லை. அடுத்தடுத்த படங்களில் அவரின் முழு கமெர்சியல் திறமையை எதிர்பார்க்கலாம்.

பவானி ஸ்ரீ இளம் வயதிலேயே அசிஸ்டண்ட் கமிஷனர் ஆன ஒரு அதிகாரியாக, அதற்கேற்ற ஆளுமையுடன் நல்ல ஒரு நடிப்பை தந்திருக்கிறார். ‘பூவே உனக்காக’ சங்கீதா நீண்ட இடைவேளைக்குப் பிறகு மிக முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் ரீ-என்ட்ரி. கதையோடு பயணிக்கும் முக்கிய கதாபாத்திரம். அபர்னதி, அனந்த் நாக், டிஎம் கார்த்திக் மற்றும் பலரும் நல்ல ஒரு பங்களிப்பை செய்திருக்கிறார்கள். பிரகாஷ் ராஜ், கிஷோர் போன்ற சீனியர் நடிகர்கள் ஒரு சிறப்பு தோற்றத்தில் வந்து கதையை நகர்த்தி செல்கிறார்கள்.

சாம் சி.எஸ். இசை படத்துக்கு பெரும் பலம். ஒரு பாடல்களை விட பின்னணி இசையில் ஆதிக்கம் செலுத்துகிறார். சுரேஷ் பாலா ஒளிப்பதிவில் அந்த அடுக்கு மாடி குடியிருப்பு காட்சிகள், இரவு காட்சிகள், கிளைமாக்ஸ் காட்சி என எல்லாமே மிக அழகாக பதிவு செய்திருக்கிறார். புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பும் குறிப்பிடத்தக்க ஒரு அம்சம்.

முதல் பாகத்தை இயக்கிய இயக்குநர் ஸ்ரீ செந்தில் இந்த இரண்டாம் பாகத்தையும் இயக்கியுள்ளார். முதல் பாகத்தில் ஒரு குடும்பத்தில் நடக்கும் பின்னணியிலான ஒரு திரில்லர் படத்தை தந்து வெற்றி பெற்றிருந்தார். இந்த பாகத்தில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு பின்னணியில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து ஒரு கிரைம் திரில்லர் படத்தை தந்திருக்கிறார். முதல் பாதி முழுக்க ஒரு கொலையை சுற்றியே நடக்கிறது, இரண்டாம் பாதியில் இன்னும் கொஞ்சம் வேகமெடுத்தாலும் முக்கியமான திருப்பங்கள் நிகழும் காட்சிகள் ரசிகர்களை எதிர்பார்க்க வைக்கிறது. கிளைமாக்ஸில் வரும் அடுத்தடுத்த திருப்பங்கள் ரசிகர்களை ஆச்சர்யப்படுத்துகிறது. வெளியில் வரும் ரசிகர்கள் திருப்தியோடு ஒரு நல்ல திரில்லர் படம் பார்த்து விட்டு வந்த உணர்வை தருகிறது இந்த காளிதாஸ் 2.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *