ஹேப்பி ராஜ் – விமர்சனம்!

இசை & நடிப்பு என இரண்டு குதிரைகளிலும் மிக துணிச்சலாக சவாரி செய்து வரும் ஜி.வி.பிரகாஷ், இசையில் புலிப் பாய்ச்சல் என்றால் நடிப்பில் கொஞ்சம் வேகம் குறைவு தான். ஆனாலும் வித்தியாசமான கதைக்களங்களில், நல்ல நல்ல படங்களை தர வேண்டும் என்ற தாகம் மட்டும் தீரந்த பாடில்லை. அப்படி ஒரு முயற்சியாக ஜிவி பிரகாஷ் நடித்திருக்கும் படம் தான் “ஹேப்பி ராஜ்”.  அறிமுக இயக்குனர் மரிய ராஜா இளஞ்செழியன் இயக்கியிருக்கிறார். ஜிவி பிரகாஷூக்கு வெற்றியை தந்ததா? பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, சிறு வயதில் தன் தந்தை ஜார்ஜ் மரியானால் பள்ளியில் நண்பர்கள், காதல் என எல்லாவற்றையும் இழந்து விடும் ஜிவி பிரகாஷ், அதை தவிர்க்க வெளியூருக்கு வேலைக்கு சென்று விட்டால் அங்கு நல்ல பெண்ணாக பார்த்து காதலிக்கலாம் என நினைக்கிறார். அப்படி பெங்களூருவுக்கு செல்லும் ஜிவி, அவரது அலுவலகத்திலேயே உயர் பதவியில் இருக்கும் நாயகி ஸ்ரீ கௌரி பிரியாவை கண்டதும் காதலில் விழுகிறார். பின் நாயகியும் ஜிவி பிரகாஷை காதலிக்க, ஒரு கட்டத்தில் உன் பெற்றோரை வந்து எங்க வீட்டில் சம்மந்தம் பேச சொல்லு என சொல்கிறார் நாயகி. அப்பா வந்தால் அவர்களுக்கு தன்னை பிடிக்காமல் போய் விடுமோ என நினைக்கிறார் ஜிவி. அவர்கள் இருவரின் பெற்றோரும் சந்தித்துக் கொண்டார்களா? ஜிவி, ஸ்ரீ கௌரி பிரியா காதல் என்ன ஆனது? தந்தையை தகுதிக் குறைவாக நினைக்கும் ஜிவியின் எண்ணம் மாறியதா? என்பதே மீதிக்கதை.

நாயகன் ஜிவி பிரகாஷ். வழக்கம் போல அவருக்கே உரித்தான நடிப்பை தந்திருக்கிறார். கதையிலும் அதற்கேற்ப பல இடங்கள் அமைந்திருக்கிறது. சில இடங்களில் லவ் டுடே பிரதீப் போல வெளிப்படுகிறது. காமெடி, காதல், எமோஷன் என அத்தனையிலும் ஸ்கோர் செய்கிறார். நாயகி ஸ்ரீ கெளரி ப்ரியா மாடர்ன் யுவதியாக அழகால் நம்மை கட்டிப் போடுகிறார். இரண்டாம் பாதியில் கதையின் போக்கில் முக்கியத்துவம் குறைந்தாலும் அவருக்கு கிடைத்த காட்சிகளில் எல்லாம் அசத்தியிருக்கிறார். ஒரு பாடல் காட்சியில் நடனத்திலும் பட்டைய கிளப்பியிருக்கிறார்.

ஜார்ஜ் மரியான். கதையின் இன்னொரு நாயகன் என்றே சொல்லலாம். அவர் வரும் காட்சிகள் எல்லாமே தியேட்டரில் அதகளம். குறிப்பாக நாயகி வீட்டிற்கே சென்று அவர் செய்யும் விஷயங்கள் எல்லாம் மாஸ். இரண்டாம் பாதியில் நம்மை நெகிழ வைக்கிறார். அவர் கதாபாத்திரம் தான் படத்தின் ஆன்மாவே. அப்பாஸ் ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் நடித்திருக்கும் படம். இளம் நெஞ்சங்களை கொள்ளை கொண்டவராக பார்த்த அப்பாஸ் இப்போது ஒரு இளம் பெண்ணுக்கு அப்பாவாக நடித்திருக்கிறார். வயசானாலும் அந்த சார்ம் அப்படியே இருக்கிறது. கீதா கைலாசம் ஜிவியின் அம்மாவாக படம் முழுக்க கலகலக்க வைக்கிறார். குறிப்பாக அந்த பெங்களூர் எபிசோடு. பிராத்தனா நாதன் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் வந்தாலும் கதையின் திருப்பத்துக்கு காரணமாக அமைகிறார். பிரேம்ஜி ஒரு சின்ன கேமியோவிலும் வருகிறார்.

இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு துள்ளலான இசையை தந்திருக்கிறார். ஆடினே இருப்பேன் பாடல் ஆட வைக்கிறது. இரண்டாம் பாதியில் வரும் திருமண நாள் பாடலும், அப்பா பாடலும் நன்றாகவே இருக்கிறது. பின்னணி இசையும் படத்துக்கு பலம். மதன் கிரிஸ்டோபர் ஒளிப்பதிவும் படத்தை கலர்ஃபுல்லாக காட்டியிருக்கிறது.

இயக்குனர் மரிய ராஜா இளஞ்செழியன். போஸ்டர் மற்றும் ட்ரைலரில் ஒரு திரிஷா இல்லனா நயன்தாரா, லவ் டுடே சாயலில் ஒரு படத்தை தான் தருகிறாரோ என என்ன வைத்து தியேட்டரில் அப்படியே நம்மை சர்ப்ரைஸ் செய்கிறார். முதல் பாதியில் லவ் டுடே போல இன்றைய ட்ரெண்டில் இருந்தாலும் இரண்டாம் பாதியில் சொல்லியிருக்கும் விஷயங்கள் நம் மனதில் ஆழமாக பதிகிறது. தொடர்ச்சியாக ஜிவி பிரகாஷ் நடித்து வந்தாலும் வெற்றிப் படம் அங்கொன்றும் இங்கொன்றுமாகவே இருந்து வந்திருக்கிறது. ஆனால் அந்த குறையை ஹேப்பி ராஜ் போக்கும் என நம்பலாம். முதல் பாதி இளைஞர்களை கவரும் விதமாக காமெடியாக சென்றாலும், இரண்டாம் பாதியில் தந்தை மகன் செண்டிமெண்ட் குடும்ப ரசிகர்களையும் நிச்சயம் ரசிக்க வைக்கும் என்பது உறுதி. மொத்தத்தில் சம்மர் எண்டர்டெயினர் இந்த “ஹேப்பி ராஜ்”.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *