நம் சமூகம் என்ன தான் முன்னேற்றம் அடைந்த சமூகமாக இருந்தாலும் இன்னமும் பல விஷயங்களில் மக்கள் மனங்களில் மாற்றம் ஏற்படவில்லை என்பது தான் உண்மை. அதில் மிக முக்கியமான ஒன்று காலம் காலமாக நடந்து வரும் சாதி ஆணவக் கொலை என்ற ஒரு விஷயமும் தான். அதை மையமாக வைத்து உருவாகியிருக்கும் படம் “திவ்யா”. படம் எப்படி இருக்கு? பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, நாயகன் ஆர்ஜேபி பெற்றோரை சிறுவயதிலேயே இழந்தவர், தன் தாத்தாவினால் வளர்க்கப்படுகிறார். சாவு வீடுகளில் தப்பு அடிப்பது அவர்களின் தொழில். கல்லூரியில் படிக்கும் அவர் தப்பு அடிப்பதையும் தங்கள் பிழைப்புக்காக விடாமல் செய்து வருகிறார். அதே கல்லூரியில் உடன் படிக்கும் நாயகி கேத்தி, நல்ல வசதியான குடும்பத்தை சேர்ந்தவர். தன் பெற்றோருக்கு ஒரே செல்ல மகள். நாயகன் மீது கொஞ்சம் கொஞ்சமாக காதல் வர, ஒரு கட்டத்தில் இருவரும் உயிருக்கு உயிராய் காதலிக்கிறார்கள். காதல் விஷயம் தெரிய வர, நாயகியின் பெற்றோர் அவசர அவசரமாக வேறு ஒரு திருமணத்துக்கு ஏற்பாடு செய்கிறார்கள். நாயகன், நாயகியின் காதல் கைகூடியதா? அவசர திருமணம் என்ன ஆனது? குடும்பத்தை எதிர்த்து திருமணன் செய்து கொண்டார்களா? என்பதே மீதிக்கதை.
நாயகன் ஆர்ஜேபி. ஒரு ஒடுக்கப்பட்ட சமூக இளைஞராக, மிகவும் எளிய குடும்பத்து பின்னணியில் இருந்து வந்தவராகவே தன் தோற்றம், உடை, நடத்தை என அத்தனையிலும் அந்த பிரதிபலிப்பு அப்படியே இருக்கிறது. பல காட்சிகளில் மிகவும் சிரத்தை எடுத்தும் நடித்திருக்கிறார்கள். குறிப்பாக அடிவாங்கும் காட்சிகளில் அவ்வளவு தத்ரூபமாக அடி வாங்கியிருக்கிறார். பல காட்சிகளில் நம்மை கலங்கவும் வைக்கிறார்.
நாயகி கேத்தி. நல்ல ஒரு யதார்த்தமான நடிப்பை தந்திருக்கிறார். தமிழக கிராமங்களில் கல்லூரிக்கு போகும் பெண்களை பிரதிபலித்திருக்கிறார். காதல் காட்சிகளிலும், இரண்டாம் பாதியில் வரும் முக்கியமான காட்சிகளிலும் தான் ஒரு நல்ல நடிகை என்பதை நிரூபித்திருக்கிறார். நாயகியின் அப்பாவாக வரும் அனந்த் ராம் நல்லவரா கெட்டவரா என யோசிக்க வைக்கும் அளவுக்கான ஒரு நடிப்பு. அவரும் அவர் மனைவியாக வரும் கலாவதியும் இந்த சமூகத்தின் சூழ்நிலை கைதிகளாக, பல கிராமங்களின் உயர்சாதி பிடிப்பு கொண்ட குடும்பங்களை இயல்பாக நம் கண் முன் நிறுத்துகிறார்கள்.
நாயகனின் நண்பர்களாக வரும் சபி, ஜிவி என இருவருமே கதையோட்டத்துக்கு துணை புரிகிறார்கள். வில்லனாக வரும் செந்தில் மனதுக்குள் சாதி பெருமையை வைத்துக் கொண்டு சாதிக்காக எந்த எல்லைக்கும் செல்பவர்களை அப்படியே பிரதிபலித்திருக்கிறார். நாயகனின் தாத்தாவாக வரும் பவுன்ராஜ் ஒடிசலான தோற்றம், கையறு நிலையில் அன்றாடங்காய்ச்சியாக வாழும் எளிய மனிதர்களையும் அவர்களின் வாழ்வியலையும் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறார். கிளைமாகஸில் அவர் பாடும் பாடல் கனக்க வைக்கிறது.
ஒளிப்பதிவாளர் செல்வக்குமார் ஒரு சின்ன பட்ஜெட்டில் நல்ல தரமான ஒளிப்பதிவை தந்திருக்கிறார். குறையில்லாத ஒளிப்பதிவு. சங்கர் ராம் இசையில் பாடல்கள் ஒகே ரகம், இரைச்சல் இல்லாத காதுகளுக்கு இனிமையானக இருக்கிறது, பின்னணி இசையிலும் அசத்தியிருக்கிறார்.
இயக்குனர் RJP. மிக மிக யதார்த்தமான உண்மைக்கு மிக நெருக்கமாக ஒரு படத்தை தந்திருக்கிறார். ஆணவக் கொலை பற்றி எவ்வளவோ படங்கள் வெளியாகியிருக்கிறது. இந்த படமும் அந்த மாதிரி ஒரு காதல் பின்னணியில் உருவாகியுள்ள ஒரு படம் தான். ஆனாலும் எளிமையான திரைக்கதையாலும், மென்மையான காதல் காட்சிகளாலும், மனதை கனக்க வைக்கும் இரண்டாம் பாதியும் படத்தை தூக்கி நிறுத்தியிருக்கிறது. காதல் ஜோடியின் அழகான காதலை காட்டியது படத்தில் ரசிக்கும்படியான ஒரு அம்சம். 2026-லும் கூட சாதாரணமாக நடக்கும் ஆணவக் கொலைகள் இந்த மாதிரி படங்களின் தேவை இன்றும் இருப்பதை சுட்டி காட்டியிருக்கிறது. மிக அழுத்தமான ஒரு படத்தை தந்த ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் பாராட்டுக்கள்.

