நகர்ப்புறங்களில் வாழும் எளிய மனிதர்களின் மிடில் கிளாஸ் வாழ்வியலை அவர்களின் அன்றாட ஆசைகளை, ஏக்கங்களை பேசும் படங்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டு தான் இருக்கின்றன. அப்படி ஒரு சாதாரண ட்ரைவர் வேலை பார்ப்பவரின் குடும்பத்தின் வாழ்க்கையை சொல்லும் படம் தான் “கார்மேனி செல்வம்”. படம் எப்படி இருக்கு? இந்த விமர்சனத்தில் பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, கௌதம் வாசுதேவ் மேனன் குடும்பத்துக்கு கார் டிரைவராக வேலை செய்கிறார் சமுத்திரக்கனி. அந்த குடும்பமே சமுத்திரகனி மீது மரியாதை வைத்து தன் குடும்பத்தில் ஒருவர் போல நடத்துகிறது. மறுபுறம் தள்ளுவண்டி இட்லி கடை நடத்தும் மனைவி லட்சுமி பிரியா மற்றும் மகனுடன் கடலோரத்தில் சின்ன வாடகை வீட்டில் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற கனவுவுடன் பயணிக்க, அந்த எண்ணமே அவரை கடனில் சிக்க வைக்கிறது. இதற்கிடையில் யார் யார் பேச்சையோ கேட்டு கடன் வாங்கி வாழ்க்கை நடத்தினால் தான் நாமும் முன்னேற முடியும் என கடன் வாங்கி குவித்து அதனால் மேலும் சிக்கலுக்கு உள்ளாகிறார். அவர் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் அவரையும், குடும்பத்தையும் எப்படி பாதிக்கிறது என்பதே மீதிக்கதை.
கதையின் நாயகனாக சமுத்திரக்கனி. அவரது இயல்பான நடிப்பால் ஒரு யதார்த்தமான மிடில் கிளாஸ் குடும்பத்தலைவனை நம் கண் முன்னால் நிறுத்துகிறார். ஆரம்பத்தில் இருக்கும் குணங்கள், பின் ஒரு மாற்றம் என கதாபாத்திரத்தின் உளவியல் மாற்றங்களை அவரது நடிப்பால் அழகாக காட்டியிருக்கிறார். அவரது மனைவியாக லட்சுமி பிரியா சந்திரமௌலி. எளிய மிடில் கிளாஸ் குடும்பத் தலைவியாக பொறுப்புடனும் கணவர் செய்யும் தவறுகளை சுட்டிக் காட்டுபவருமாக மிக தத்ரூபமான நடிப்பு. எந்த சூழல் ஆனாலும் குடும்பத்துக்கு அவமரியாதை ஏற்படக் கூடாது என எண்ணும் ஒவ்வொரு குடும்பத் தலைவிகளையும் நினைவுபடுத்துகிறார்.
கதையின் இன்னொரு நாயகனாக கௌதம் வாசுதேவ் மேனன். அவர் வரும் காட்சிகள் ரொம்பவே குறைவு. நட்புக்காக ஒரு சிறப்பு தோற்றத்தில் வருவது போல வந்து போகிறார். ஆனாலும் இவ்வளவு நல்ல மனிதரா என நம்மை நெகிழ வைக்கிறார். சினிமாவில் மட்டும் தான் இப்படி எல்லாம் பார்க்க முடியும் போல என எண்ண வைக்கும் தம்பதியாக அபிநயா, கௌதம் என இருவரும் நம்மை நெகிழ வைக்கிறார்கள். கார்த்திக் குமார், படவா கோபி, கோதண்டம், மற்ற நடிகர்கள் என எல்லோருமே யதார்த்தம் மீறாத நடிப்பு.
யுவராஜ் தக்ஷனின் ஒளிப்பதிவில் காட்சிகள் எல்லாமே அழகு. வெளிப்புற துபாயின் பிரமாண்டம், தொழிலாளர்கள் அறையின் அவல நிலை என அதையும் சிறப்பாக பதிவு செய்திருக்கிறார். சமுத்திரகனியின் கடலோர வீட்டையும் மிக அழகாக காட்டியிருக்கிறார். ராமானுஜம் இசையில் படத்தின் தன்மை அழகாக வெளிப்பட்டிருக்கிறது. அந்த மெலடி பாடல் இனிமை, பின்னணி இசையும் சிறப்பு.
குறையொன்றுமில்லை என்ற ஒரு நல்ல படத்தை தந்த இயக்குனர் ராம் சக்ரி இந்த சமூகத்தை மிக அழகாக காட்டியிருக்கிறார். எல்லாம் இருப்பவர்களுக்கும் ஏதோ ஒன்று இல்லாமல் தான் தவிக்கிறார்கள் என்பதையும், கடன் தேவைக்கு வாங்கலாம், ஆடம்பரத்திற்கு கடன் வாங்கக் கூடாது என்பதையும் சொல்லியிருக்கிறார். பணத்துக்காக ஓடி ஓடி நம் குடும்பங்களை, நல்ல நல்ல தருணங்களை கூட நாம் இழந்து விடுகிறோம் என்பதையும் உணர்வுப்பூர்வமாக சொல்கிறார். படம் முழுக்க எல்லாமே யூகிக்கும்படியாக இருப்பதும், அவற்றை கொஞ்ச நீட்டி சொல்லியிருப்பது படத்தின் தாக்கத்தை குறைக்கிறது. மொத்தத்தில் மிடில் கிளாஸ் வாழ்க்கையை பிரதிபலிக்கும் இன்னொரு இயல்பான சினிமாவாக நிச்சயம் பார்க்கலாம்.

