சின்னத்திரையில் இருந்து தமிழ் சினிமாவுக்கு ஹீரோக்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறார்கள். சிவகார்த்திகேயன், கவின் தொடங்கி பிக் பாஸ் ராஜூ வரை பலரையும் சொல்லலாம். அந்த வகையில் சிறகடிக்க ஆசை டிவி தொடர் மூலம் புகழ் பெற்ற ஸ்ரீதேவா நாயகனாக நடித்திருக்கும் படம் தான் வசூல் மன்னன். படம் எப்படி இருக்கு? பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, நாயகன் ஸ்ரீதேவா ஊரைச் சுற்றி கடன் வாங்கி வைத்து அதை திருப்பி செலுத்த முடியாமல் ஓடி ஒளிகிறார். ஒரு கட்டத்தில் கடன் பிரச்சினையால் தற்கொலை செய்து கொள்வேன் என சொல்ல, அதை பார்த்து பயந்து போகும் நாயகனின் அம்மா போலீஸ் பாதுகாப்பு கேட்டு பெறுகிறார். அந்த கடனை திருப்பி செலுத்த வேறு வேறு வழிகளில் எல்லாம் பணம் சேர்க்க முயற்சிக்கிறார். ஆனால் ஏமாற்றமே நிகழ்கிறது. அந்த நேரத்தில் பெரும் செல்வந்தரான வேல ராமமூர்த்தி மகள் நிவேதாவுக்கு போலீஸ் கனவு இருப்பதும், அதற்காக 10 லட்சங்கள் கூட தர தயாராக இருப்பதும் தெரிந்து அவரை ஏமாற்றி அந்த பணத்தை அபகரிக்க முயற்சிக்கிறார். அந்த பணத்தை ஆட்டைய போட்டாரா? நிவேதாவின் போலீஸ் கனவு என்ன ஆனது? கடன் பிரச்சினைகளில் இருந்து தப்பினாரா? என்பதே மீதிக்கதை.
நாயகன் ஸ்ரீதேவா. அந்த கதாபாத்திரத்துக்கு பொருத்தமான முகம், ஏற்கனவே சீரியல் அனுபவம் இருப்பதும் அவருக்கு பெரிய அளவில் கைகொடுத்திருக்கிறது. தாய் மாமன் சரவண சக்தி உடன் சேர்ந்து அடிக்கும் லூட்டி கலகலக்க வைக்கிறது. ஆனாலும் இரண்டாம் பாதியில் சில காட்சிகளில் இருவருமே எமோஷனிலும் நம்மை கலங்க வைக்கிறார்கள்.
நாயகி நிவேதா நல்ல இயல்பான தமிழ்ப் பெண்ணுக்கே உரித்தான அழகும் பளிச்சென்று இருக்கிறார். போலீஸ் செலக்ஷன் காட்சிகளில் அசத்துகிறார். ஆரம்பத்தில் மிரட்டல் வில்லனாக என்ட்ரி கொடுத்து மிரட்டுகிறார் வேல ராமமூர்த்தி, ஆனால் அதுவே இரண்டாக் பாதியில் அவர் வரும் காட்சிகளும், சிச்சுவேஷனும் சிரிக்க வைக்கிறது. சரவண சுப்பையா ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் அவருக்கு வழங்கப்பட்ட வேலையை சிறப்பாக செய்கிறார். நாயகனின் அம்மா, தங்கை, மச்சான், பந்தோஸ்துக்கு வரும் போலீஸ் என மற்ற நடிகர்களும் நல்ல ஒரு பங்களிப்பை தந்திருக்கிறார்கள்.
பரணியின் இசையில் பாடல்கள் ஓகே ரகம். பின்னணி இசையும் காட்சிக்கு ஏற்ப துணை புரிந்திருக்கிறது. சின்ன பட்ஜெட்டாக இருந்தாலும் அந்த ஊரின் எளிமையான அழகை அழகாக படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.
இயக்குனர் வேல் குமரேசன். குடும்பத்துடன் பார்த்து ரசிக்கக் கூடிய ஒரு படத்தை தர முயற்சி செய்து அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார். முதல் பாதியில் நாயகனின் நோக்கமில்லா கதாபாத்திரம் நம்மை கொஞ்சம் எரிச்சலூட்டினாலும் இரண்டாம் பாதியில் அதற்கான காரணம் தெரிய வரும்போது கொஞ்சம் நாமும் பரிதாபப்பட வேண்டியதாகிறது. ஆனாலும் அவர் கதாபாத்திரம் ஒரு மோசடி பேர்வழி போலவே படைக்கப்பட்டிருப்பதை தவிர்த்திருக்கலாம். மொத்தத்தில் குடும்பத்துடன் ஒரு முறை பார்த்து ரசிக்கலாம்.

