வடம் – விமர்சனம்!

மாசாணி பிக்சர்ஸ் ஆர். ராஜசேகர் தயாரிக்க, இயக்குநர் கேந்திரன்.வி இயக்கத்தில் விமல் – நட்டி நட்ராஜ் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் வடம். வட மஞ்சு விரட்டு பின்னணியில் கிராமத்து படமாக உருவாகியிருக்கும் இந்த படத்துக்கு டி.இமான் இசையமைத்திருக்கிறார். படம் எப்படி இருக்கு? இந்த விமர்சனத்தில் பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, வட மஞ்சு விரட்டு, ஜல்லிக்கட்டு என எந்த போட்டியாக இருந்தாலும் அந்த வட்டாரத்திலேயே வெற்றியை குவிப்பது நட்டி வளர்க்கும் காளைகள் தான். அவரது வீட்டில் ஒரு கன்று குறையுடன் பிறக்க அதை அடிமாட்டுக்கு அனுப்பும் மாடுகளோடு அனுப்பி விடுகிறார். அதை தடுக்கும் ஊர் பெரிய மனிதர் நரேன், அந்த கன்றை தன் வீட்டில் வளர்க்கிறார். அந்த கன்றுடன் சேர்ந்து நரேன் மகனான விமலும் வளர்கிறார். வளர்ந்த பின் வட மஞ்சு விரட்டில் அந்த ஊரிலேயே அவரது காளை யாரும் தொட முடியாத ஒரு காளையாக வலம் வருகிறது. அதே நேரம் விமல் ஒரு வழக்கில் கைதாகி சிறையில் இருந்து ஜாமீனில் வெளி வருகிறார். வெளியில் வந்த விமலை கொலை செய்ய பலரும் திட்டம் தீட்டுகிறார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணத்துக்காக கொலை செய்ய திட்டமிட, அவர்களிடம் இருந்து எப்படி தப்பினார்? அந்த பிரச்சினைகளை எப்படி சமாளித்தார்? என்பதே மீதிக்கதை.

நாயகன் விமல். வழக்கம் போல அவருக்கே உரித்தான நடிப்பை தந்திருக்கிறார். ஆரம்ப காட்சிகளில் அடிதடிக்கே பயந்தவர் போல ஓடி செல்பவர், ஆனால் அவரே பல பேரை அடித்து துவைப்பது என ரசிக்க வைத்திருக்கிறார். காளை மாட்டுக்கு பயிற்சி கொடுப்பது, நாயகியுடன் காதலில் திளைப்பது, குடும்பத்துக்கு கட்டுப்பட்ட மகனான இருப்பது என நல்ல ஒரு நாயக பிம்பத்தில் படம் முழுக்க வலம் வருகிறார். நட்டி மிக முக்கியமான கதாபாத்திரத்தில் கொஞ்ச நேரமே வந்தாலும் அவருடைய ஈர்ப்பான நடிப்பால் மனதில் நிற்கிறார். அவரது ஸ்கிரீன் பிரசன்ஸ் வழக்கம் போல இந்த படத்தில் அட்டகாசம்.

நாயகி சனஸ்கா ஸ்ரீ. காளை மாட்டுடன் தான் என்ட்ரி. விமல் உடன் காதல், அதற்கு பின்னணியில் இருக்கும் விஷயம் என அவரது கதாபாத்திரம் ஒரு சர்ப்ரைஸ் பேக்கேஜ். முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம், ஆனாலும் அநாயசமாக செய்து முடித்திருக்கிறார். நட்டியின் மனைவியாக வரும் காயத்ரி மயூராவும் கவனம் ஈர்க்கிறார். ஹரி படங்களில் வரும் அப்பா போல ஒரு கம்பீரமான அப்பாவாக ஆடுகளம் நரேன் ரசிக்க வைக்கிறார். வழக்கமான காமெடியனாக இல்லாமல் எமோஷனில் நம்மை கலங்க வைக்கிறார் முனிஷ்காந்த். விமல் நண்பனாக பால சரவணன் அவரது கவுண்டர்கள் எல்லாம் அருமை. மதுசூதன் ராவ், தீபா, இந்துமதி மணிகண்டன், சரவண சக்தி, மூர்த்தி, ஜெகன் என அத்தனை பேருமே ஒரு கிராமத்து படத்தை பார்த்த திருப்தியை நமக்கு தந்திருக்கிறார்கள்.

பிரசன்னா எஸ் குமார் ஒளிப்பதிவு காட்சிகளின் பிரமாண்டத்தை கூட்டியிருக்கிறது. வட மஞ்சு விரட்டை மிக அழகாக பதிவு செய்திருக்கிறார். சாபு ஜோசப் ஒரு கமெர்சியல் கிராமத்து படத்துக்கு ஏற்ற படத்தொகுப்பை செய்துள்ளார். படத்தின் நீளமும் பக்கா. இசையமைப்பாளர் இமான் இசையில் பாடல்கள் ஏற்கனவே கேட்ட உணர்வை தந்தாலும் ரம்மியமான கிராமத்து பாடல்கள் மூலம் படத்தை தூக்கி நிறுத்துகிறது. பாண்டி முனி பாடலும், ஆசை களவாணியே பாடலும் நம்ம சாய்ஸ்.

இயக்குனர் கேந்திரன். ஒரு கிராமத்து படத்துக்கேற்ற சரியான களத்தை அழகாக செட் செய்திருக்கிறார். ஆக்ஷன், காமெடி, காதல், செண்டிமெண்ட் என அத்தனையும் சரிவிகிதத்தில் கலந்து தந்திருக்கிறார். சரியான நடிகர்களை தேர்ந்தெடுத்ததிலேயே பாதி வெற்றியை உறுதி செய்திருக்கிறார். வட மஞ்சு விரட்டுக்கு எப்படி களத்தை தயார் செய்வார்கள் என்பதை காட்டிய விதமும் வட மஞ்சு விரட்டு இதுவரை பார்த்திராத பலருக்கும் ரொம்பவே புதிதாக இருந்திருக்கும். முதல் பாதி அதிரடி, இரண்டாம் பாதி எமோஷன் என நல்ல ஒரு படத்தை ரசிக்கும் விதத்தில் தந்து வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குனர். நிச்சயம் குடும்பத்துடன் சென்று ரசிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *