கிரீடம், மதராசப்பட்டினம், தெய்வத் திருமகள், சைவம் போன்ற தரமான படங்களை தந்த இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ரொமாண்டிக் ட்ராமா தான் “காதல் ரீசெட் ரிப்பீட்”. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்த பாடல்கள் ஏற்கனவே செம்ம ஹிட்டு. மதும்கேஷ், ஜியா ஷங்கர், அர்ஜுன் அசோகன் ஆகியோர் நடித்துள்ள இந்த படம் எப்படி இருக்கு? பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, ஸ்காட்லாந்தில் நாயகி ஜியா ஷங்கர் காதல் தோல்வி மற்றும் வேறு ஒரு பிரச்சினையால் மலையிலிருந்து தற்கொலைக்கு முயற்சிக்கிறார். சிறு வயதிலிருந்து ஜியாவை ஒருதலையாக காதலிக்கும் நாயகன் மதும்கேஷ் அவரை காப்பாற்றுகிறார். ஆனால் ஜியாவுக்கு அந்த விபத்தால் மெமரி லாஸ் பிரச்சினை. தூங்கி எழுந்தால் முந்தைய நாள் நடந்தவை கூட நினைவில் இல்லாமல் போகிறது. அந்த ஊரில் சூப்பர் மார்க்கெட் வைத்திருக்கும் எம்.எஸ்.பாஸ்கர் இவர்களுக்கு அடைக்கலம் தந்து உதவுகிறார். ஒவ்வொரு நாளும் அவர் நினைவை இழக்க, நாயகனும் எம்.எஸ்.பாஸ்கரும் அதை நினைவுபடுத்த இப்படியே நாட்கள் கழிகிறது. அந்த நேரத்தில் ஜியாவின் காதலன் அர்ஜூன் அசோகன் அவரை தேடி வருகிறார். அவர் ஜியாவின் ஞாபகத்தை தூண்டி அழைத்து சென்றாரா? மதும்கேஷ் இரு தலை காதல் என்ன ஆனது? மெமரி லாஸ் பிரச்சினைக்கு தீர்வு என்ன? என்பதே மீதிக்கதை.
மதும்கேஷ், ஜியா ஷங்கர் இருவருமே அறிமுகம். ஆனாலும் அறிமுக நடிகர்கள் என சொல்ல முடியாத அளவுக்கு நல்ல நடிப்பை தந்திருக்கிறார்கள். குறிப்பாக ஜியா ஷங்கர் அந்த கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாக கையாண்டிருக்கிறார். அளவான, யதார்த்தமான நடிப்பு. மதும்கேஷ் இளம் வயது காதல் கொண்டேன் தனுஷ் கதாபாத்திரத்தை போல அதிகம் பேசாத, காதலை மட்டுமே காட்டத் தெரிந்த கதாபாத்திரத்தில் நன்றாக நடித்திருக்கிறார்.
மலையாள நடிகர் அர்ஜூன் அசோகன், செகண்ட் ஹீரோ தான். நாயகியின் காதலனாக அறிமுகமாகி பின் சுயநலத்துக்காக அவரை ஏமாற்றுபவராக ஒரு சேஞ்ச் ஓவர், அதிலும் நல்ல நடிப்பை தந்துள்ளார். இவர்களை தாண்டி எம்.எஸ்.பாஸ்கர், ஜெயபிரகாஷ் என இரண்டு அனுபவ நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் படத்தை தாங்கிப் பிடிக்கிறார்கள். அதிலும் படம் முழுக்க பயணிக்கும் எம்.எஸ்.பாஸ்கர் படத்துக்கு மிகப்பெரிய பக்கபலமாக அமைந்திருக்கிறார். விஜி சந்திரசேகர் சில காட்சிகள் வந்தாலும் படத்தின் கோர் எமோஷனுக்கு வலு சேர்க்கிறார்.
அரவிந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்து வைத்திருக்கிறது. குறிப்பாக முக்கால்வாசி படமே ஸ்காட்லாந்தில் நடப்பதும் அந்த ஊரின் அழகை அர்விந்தின் விஷூவல்ஸ் லயிக்க வைக்கிறது. ஹாரீஸ் ஜெயராஜ் வழக்கம் போல அவரது முத்திரையை பதித்திருக்கிறார் இசையில். பாடல்கள் எல்லாமே சூப்பர் ஹிட். படத்துடன் பார்க்கும்போது அந்தந்த உணர்வுகளை அழகாக நமக்குள் கடத்துகிறது. கஜினி பாடலும், இளையராஜா பாடலுக்கு ட்ரிபியூட் போல அமைந்திருக்கும் உன் பார்வை பாடலும் செம்ம. பின்னணி இசையிலும் மனிதர் உணர்வுகளை ததும்ப விடுகிறார்.
இயக்குனர் விஜய். உணர்வுப்பூர்வமாக கதை சொல்வதில் கில்லாடி இயக்குனர். அதை மிக மிக அழகாக பேக்கேஜ் செய்து கொடுப்பதிலும், அழகியலோடு பிரசண்ட் செயவதிலும் வல்லவர். முதல் பாதி சில இடங்களில் ஒரே மாதிரி திரும்ப திரும்ப வருவது போல இருந்தாலும் ரசிக்கலாம். இரண்டாம் பாதியில் அந்த ட்ராமா நன்றாக இருந்தது, ஆனாலும் அந்த அடியாட்கள் காமெடியை தவிர்த்திருக்கலாம் என்றே தோன்றுகிறது. ஒரு தலை காதல், காதலி எங்கு இருந்தாலும் நன்றாக இருந்தால் போதும் என நினைக்கும் காதலன் என வழக்கான விஷயங்களுடன் பயணித்தாலும் போரடிக்காமல் ரசிக்க வைத்ததில் வெற்றி பெறுகிறார் இயக்குனர். ஒரு சில நடிகர்களை வைத்தே 2:15 மணி நேரம் ஓடும் படத்தை, நல்ல தொழில்நுட்ப கலைஞர்களின் துணையோடு தந்திருக்கிறார் விஜய். லாஜிக்கை மறந்து ரசித்து விட்டு வரக் கூடிய ஒரு ஃபீல் குட் ட்ராமா.

