மித்ரா பிக்சர்ஸ் சார்பில் எம்.எஸ்.மூர்த்தி தயாரித்து கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இசையமைத்து இயக்கியுள்ள படம் “99/66 தொண்ணூற்று ஒன்பது அறுபத்தியாறு”. அமானுஷ்யம் கலந்த ஹாரர் திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் ரச்சிதா மகாலட்சுமி நாயகியாக நடித்திருக்கிறார். சபரி, ரோகிந்த், ஸ்வேதா ஆகியோர் நடித்துள்ள இந்த படம் எப்படி இருக்கு? பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, சென்னையில் உள்ள 99 வீடுகள் கொண்ட ஓர் அடுக்கு மாடிக் குடியிருப்புப் பகுதிக்கு தன் கணவர் சபரியுடன் வந்து பி பிளாக் 66ஆம் நம்பர் வீட்டில் குடியேறுகிறார் நாயகி ரச்சிதா மகாலட்சுமி. அவர்கள் வீட்டு ஜன்னலில் இருந்து ஒரு குரல் வர, எதிர்ப்புறம் சி பிளாக் 99ஆம் நம்பர் வீட்டில் இருந்து ஸ்வேதா டோரத்தி ரச்சிதாவுடன் கனிவாக பேசி அவருடன் நட்பாக பழகுகிறார். வாழ்க்கை இப்படியாக சென்று கொண்டிருக்க ரச்சிதாவின் கணவர் சபரி இன்ஸூரன்ஸ் பணத்துக்காக மனைவியை கொல்ல இரண்டு முறை திட்டமிட அதிலிருந்து ரச்சிதா தப்பிக்கிறார். அதே நேரம் ரச்சிதா தனியாக பேசுகிறார், அவர் சொல்வது போல அங்கு யாரும் இல்லை என சிலருக்கு தெரிய வருகிறது. ரச்சிதாவின் கனவில் சில விஷயங்கள் தோன்றி அவருக்கு ஏதோ சொல்ல முயற்சிக்கிறது. உண்மையில் ஸ்வேதா டோரத்தி யார்? அவருக்கு என்ன பிரச்சினை? ரச்சிதா வாழ்வில் என்னவெல்லாம் நடக்கிறது? ரச்சிதா, சபரி உறவு என்ன ஆனது? என்பதை ஹாரர் கலந்து சொல்லியிருக்கிறார்கள்.
நாயகி ரச்சிதா மகாலட்சுமி. வழக்கம் போல அவரது குடும்பப் பாங்கான அழகால் ரசிகர்களை கவர்ந்து இழுக்கிறார். கணவர் மீது அன்பு கொண்டவராக, கணவனே வாழ்க்கை என வாழும்போதும், சில மறைக்கப்பட்ட உண்மைகளை தெரிந்து கொள்ளும்போதும் என அவரது நடிப்பால் காட்சிகளை மெறுகேற்றி இருக்கிறார். இன்னொரு நாயகியாக வரும் ஸ்வேதா டோரத்தியும் ரச்சிதாவுக்கு இணையான குடும்பப் பாங்கான அழகு. புத்த மத போதனைகளின் பின்னணியில் வாழ்க்கையை வாழும் ஒரு குணமுள்ள பெண்ணாக நம் மனதில் இடம் பிடிக்கிறார். அவர் முடிவு நமக்கும் மனதில் வலியை ஏற்படுத்துகிறது.
நாயகன் சபரி, ரச்சிதாவுடன் அன்புள்ள கணவனாக இருப்பது, பின் அவரின் உண்மையான சுயரூபத்தை காட்டுவது என வித்தியாசப்படுத்தி நடிப்பில் ஸ்கோர் செய்கிறார். வில்லனாக ரோகிந்த் மற்றும் பவன் கிருஷ்ணா. அவர்கள் கதாபாத்திரத்தை நன்றாகவே உணர்ந்து நடித்திருக்கிறார்கள். முக்கியமான கதாபாத்திரத்தில் வரும் இயக்குனர் மூர்த்தி அலட்டல் இல்லாத நடிப்பை தந்திருக்கிறார். கே.ஆர்.விஜயா, கே.எஸ்.வெங்கடேஷ், எஸ்.சினேகா, குமாரி கனிஷ்கா, ஸ்ரீலேகா, புஜ்ஜி பாபு, சாம்ஸ், அம்பானி சங்கர், முல்லை கோதண்டம், பி.எல்.தேனப்பன் என ஏகப்பட்ட பரிச்சியமான நடிகர்கள், அவர்களும் ஆங்காங்கே வந்து போகிறார்கள்.
டிவி சீரியல்களுக்கு ஒளிப்பதிவு செய்து புகழ் பெற்ற சேவிலோ ராஜா இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சில இடங்களில் சீரியல் தன்மை வெளிப்படுகிறது. இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம். இயக்குனர் மூர்த்தியே இசையும் அமைத்திருக்கிறார். பெரிதாக சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. இசை ஓகே ரகம் தான். எடிட்டிங்கில் இன்னும் சில காட்சிகளை கத்தரித்து நீளத்தை குறைத்திருக்கலாம்.
இயக்குனர் எம்.எஸ்.மூர்த்தி. எடுத்துக் கொண்ட கதையை எளிமையாக சொல்லாமல் கொஞ்சம் சுற்றி வளைத்து சிக்கலாக்கியது போல இருக்கிறது. முதல் பாதியில் சுமாராக இருக்கே என நினைக்க, இரண்டாம் பாதியில் அந்த உணர்வை மாற்றி முக்கியமான விஷயங்களை சொல்லி நம்மை கன்வின்ஸ் செய்து விடுகிறார். புத்த மதத்தை பின்பற்றும் நாயகியின் பின் கதை படத்தின் முக்கிய அம்சம். காஞ்சனா, அரண்மனை போன்ற படங்களின் சாயல் வருமோ என நினைக்கும்போது அதை வேறு மாதிரி சொன்ன விதத்தில் தனித்துவத்தை நிரூபிக்கிறார். குடும்ப ரசிகர்களை இந்த படம் கவரும் என நம்பலாம்.

