சமீபத்தில் 21 துறைகளையும் தனி ஒரு நபராக செய்து சாதனை படைத்தவர் வங்காள விரிகுடா படத்தின் குகன் சக்ரவர்த்தியார். அவர் 21 துறைகள் என சொல்லி விட்டு படத்தை தந்தார். ஆனால் அதற்கு எந்த விதத்திலும் குறையாமல் தனி ஆளாக பல துறைகளிலும் பணிபுரிந்து படத்தை தந்திருக்கிறார் பால்ராஜ். அறிமுக இயக்குநர் பால்ராஜ் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி பாடல்களை பாடி, தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘யார்ரா அந்த பையன் நான் தான் அந்த பையன். இன்றைய சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளை மையமாக வைத்து கமர்ஷியல் படமாக உருவாகியிருக்கிறது.
படத்தின் கதைப்படி, 6 குழந்தைகளை எனக்கு பெற்றுக் கொடு என்ற நிபந்தனையுடன் நாயகி காயத்ரியை திருமணம் செய்து கொள்கிறார் நாயகன் பால்ராஜ். ஆனால் ஒரு குழந்தை பெற்ற பின் அதற்கு இணங்க மறுக்கிறார் காயத்ரி. ஆனால் பால்ராஜ் அவருடன் நெருக்கமாக முயற்சி செய்ய, காயத்ரி விலகி விலகி போகிறார். மறுபுறம் முறைப்பையன் என்பதால் ஒரு குடிகாரனுக்கு வாக்கப்பட்ட நாயகி சுவேதா ஸ்ரீ, தினம் தினம் குடித்து விட்டு வருவதால் கணவனை நெருங்கவே முடியாமல் தாபத்தில் வாழ்கிறார். கார் மெக்கானிக்கான பால் ராஜை சந்திக்கும் ஸ்வேதா ஸ்ரீக்கு பார்த்த உடனே பால்ராஜை பிடித்துப் போகிறது. இருவரும் பழக ஆரம்பிக்க, அதை தெரிந்து கொள்ளும் காயத்ரி தாய் வீட்டுக்கு செல்கிறார். அந்த கவலையில் இருக்கும் பால்ராஜ்க்கு ஸ்வேதா ஸ்ரீ ஆறுதலாக இருக்க, இருவருக்கும் இடையில் நெருக்கம் அதிகமாகிறது. அதன் பிறகு அவர்கள் உறவு எப்படி இருந்தது? பால்ராஜ் காயத்ரி இணைந்தார்களா? இவர்கள் காதல் என்னவானது? என்பதே மீதிக்கதை.
நாயகன் பால்ராஜ், கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவருக்கு இப்படி இரண்டு ஜோடிகளா என பார்ப்பவரை பொறாமைப்பட வைக்கிறார். ஆனாலும் நடிப்பில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். நாயகிகளாக காயத்ரி ரமா, ஸ்வேதா ஸ்ரீ இருவருமே நல்ல சாய்ஸ். காயத்ரி குடும்பப் பெண்ணாக, மனைவியாக மிக கண்ணியமான ஒரு கதாபாத்திரத்தில் மிக அழகாக நடித்திருக்கிறார். ஸ்வேதா ஸ்ரீ மனம் அலைபாயும் ஒரு கதாபாத்திரத்தில் அந்த நுண்ணிய உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
ஒரு போலீஸ் அதிகாரியாக பெண் பித்து பிடித்தவராக ரவி மரியா அசத்துகிறார். இரண்டாம் பாதியில் அவர் பேசும் வசனங்கள் எல்லாமே தியேட்டரை கலகலப்பாக்குகிறது. அம்பானி சங்கர், பசங்க சிவக்குமார் மற்ற நடிகர்கள் என அனைவருமே நல்ல நடிப்பை தந்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் உதயன் ஒளிப்பதிவு சென்னையின் புறநகரின் யதார்த்தத்தை சிறப்பாக காட்சிப்படுத்தியிருக்கிறது. விஜய் பிரபு இசையில் பாடல்கள் சுமார். அதிலும் நாயகன் பால்ராஜே பாடல்களை பாடியிருக்கிறார். பின்னணி இசையும் சுமார் ரகம் தான்.
தற்போதைய காலக்கட்டத்தில் பல குடும்பங்களில் நடக்கும் ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டு காதல், காமெடி மற்றும் காமம் உள்ளிட்ட அனைத்து விதமான கமர்ஷியல் அம்சங்களோடு கலந்து தந்திருக்கிறார் இயக்குனர். மதுவுக்கு அடிமையாகும் ஆண்களால் பெண்கள் எந்த அளவுக்கு பாதிக்கப்படுகிறார்கள், கணவனின் விருப்பதிற்கு மாறாக பெண்கள் நடக்கும்போது ஆண்கள் எடுக்கும் முடிவு என்பதை கலந்து ஒரு சுவாரஸ்யமான படமாக தர முயற்சி செய்திருக்கிறார். ஆனாலும் கதையை மட்டும் எடுத்துக் கொண்டு நல்ல ஒரு குழுவை அமைத்திருந்தால் இன்னும் கொஞ்சம் தரமாகவும் படத்தை தந்திருக்க முடியும். மொத்தத்தில் ஒரு தடவை பார்க்கலாம்.

