தமிழ் ஓடிடி உலகில் தொடர்ந்து நல்ல நல்ல கதைக்களங்களை கொண்டு மாதா மாதம் இணையத் தொடர்களை வழங்கி வருகிறது ZEE5 நிறுவனம். அந்த வகையில் இந்த மாதம் அவர்கள் வெளியிடும் இணையத் தொடர் “தடயம்”. சமுத்திரகனி, ஷிவதா ஆகியோர் நடிக்க, நவீன்குமார் பழனிவேல் இயக்கியிருக்கிறார். பிப்ரவரி 27 முதல் ஸ்ட்ரீமாகும் இந்த தொடர் எப்படி இருக்கு? பார்க்கலாம்.
இந்த தொடரின் கதைப்படி, தமிழக, ஆந்திர எல்லைப்பகுதியில் இருக்கும் ஒரு காவல் நிலையத்தில் எஸ்.ஐ.யாக பணி புரிகிறார் சமுத்திரகனி. அவருடன் பணிபுரிந்தவர்கள் எல்லாம் பதவி உயர்வு எல்லாம் பெற்று டிஎஸ்பி-யாக வலம் வர, சமுத்திரகனி மட்டும் 20 ஆண்டுகளாக அதே பதவியில் அப்படியே இருக்கிறார். அவர் விருப்ப ஓய்வு பெறப்போகும் சமயத்தில் அந்த காவல் நிலையத்துக்கு இன்ஸ்பெக்டராக வருகிறார் ஷிவதா. அந்த நேரத்தில் அடுத்தடுத்து இரு தம்பதிகள் மர்மமான முறையில் கொலை செய்யப்பட, அந்த வழக்கை விசாரிக்க கிளம்புகிறார்கள். ஷிவதா, சமுத்திரகனி இருவரும் இணைந்து விசாரிக்க துவங்குகிறார்கள். அப்படி விசாரிக்கும்போது இது மட்டுமல்லாமல் கிட்டத்தட்ட 76 பேர் கொலை செய்யப்பட்டது தெரிய வருகிறது. அவர்களை கொன்ற கொலையாளிகள் யார்? அவர்கள் நோக்கம் என்ன? அவர்களை பிடித்தார்களா? என்பதே மீதிக்கதை.
சமுத்திரகனி. ஆரம்ப சில காட்சிகளில் மனநலம் பாதித்தவரோ என எண்ண வைத்து விட்டு பின் அவரின் கேரக்டரை மிக அழகாக நமக்கு காட்டுகிறார்கள். சினிமா போலீஸ் போல அல்லாமல் நாம் அன்றாடம் பார்க்கும் ஒரு போலீஸ் அதிகாரியை ரத்தமும் சதையுமாக நம் கண் முன் நிறுத்துகிறார். ஷிவதா கதையின் இன்னொரு மிக முக்கியமான தூண். அந்த வழக்கை விசாரிக்க, தன் திருமண வேலைகளை கூட தள்ளி வைத்து விட்டு சின்சியராக இருக்கும் ஒரு பெண் போலீஸ் அதிகாரியாக மனதில் நிற்கிறார். அழகான, அதிரடியான போலீஸ் அதிகாரியாக ஸ்கோர் செய்கிறார்.
இரட்டை கொலையாளிகளாக வரும் ராஜ் மற்றும் பிரேம் இருவருமே மிரட்டலான நடிப்பை தந்திருக்கிறார்கள். ஆனாலும் அவர்களின் பின் கதை கேட்கும் போது ஒரு சின்ன பரிதாபம் எட்டிப் பார்க்கிறது. மூணாறு ரமேஷ், சுந்தர பாண்டியன், கார்த்திகேயன் என மற்றவர்களும் முடிந்தளவு நல்ல பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
ஆந்திர, தமிழ்நாடு எல்லையை மிக அழகாக நம்பும்படி காட்சிப்படுத்தியதில் ஒளிப்பதிவாளரின் பங்கும், உழைப்பும் அபாரமானது. பின்னணி இசையும் பல காட்சிகளை தூக்கி நிறுத்துகிறது. இந்த தொடரை அழகாக ஒவ்வொரு எபிசோடும் செதுக்கி, 6 எபிசோடுகளில் தந்த எடிட்டரை பாராட்டியே ஆக வேண்டும்.
இயக்குனர் நவீன் குமார் பழனிவேல், உண்மைச் சம்பவங்களை மையமாகக் கொண்டு திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார். ஒவ்வொரு எபிசோடிலும் ஃபிளாஷ்பேக், பிரசெண்ட் என மாற்றி மாற்றி கதையை நகர்த்தியிருக்கிறார். கொலையாளி யார் என்ற பாணியில் இல்லாமல், ஏன் கொலை செய்தார்கள்? அதன் பின்னணி என்ன? என்ற பாணியில் கொண்டு சென்றிருப்பது கதையின் எமோஷனை கொஞ்சம் ஆடியன்ஸூக்கு கடத்த உதவி புரிந்திருக்கிறது. போலீஸ், கொலையாளியை வைத்து ஒரு கேட் அண்ட் மௌஸ் கேம் ஆடியிருக்கிறார் இயக்குனர். அது பரபரப்பை கூட்டி நம்மை சீட்டில் அமர வைக்கிறது. மொத்தத்தில் நிச்சயம் “Binge watch” செய்து பார்க்கக் கூடிய ஒரு சுவாரஸ்யமான தொடர் தான் இந்த “தடயம்”.

