நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் பாவனா நடித்த ஒரு படம் வெளியாகியிருக்கிறது. ரியாஸ் மராத் எழுதி இயக்கியுள்ள ஒரு மிஸ்டரி திரில்லர் படம் தான் அனோமி. நடிகர் ரஹ்மான் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். படம் எப்படி இருக்கு? பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, தாய் தந்தையை விபத்தில் இழந்து தனது ஒரே தம்பியுடன் வாழ்ந்து வருகிறார் தடயவியல் நிபுணர் பாவனா. அந்த விபத்தின் அதிர்ச்சியால் மனநிலை பிரச்சினையில் தவிக்கும் தம்பி ஒரு நாள் திடீரென மாயமாகிறார். பின் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறி அவரது சடலம் ஒரு ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் கிடைக்கிறது. அந்த தற்கொலைக்கான காரணத்தைத் தேடிப்போக, அதே பாணியில் மூன்று பேர் இறந்திருப்பது தெரிய வர, அந்த மூன்றுமே கொலைகள் தான் என்பதும் தெரிய வருகிறது. அந்த வழக்கை காவல்துறை அதிகாரியான ரஹ்மான் குழுவினர் ஒரு புறம் விசாரிக்க, மறுபுறம் பாவனா அதை துப்பு துலக்குகிறார். உண்மையில் அந்த கொலைகள் செய்தது யார்? என்ன காரணம்? அந்த கொலைகளுக்கான பின்னணி என்ன? என்பதே மீதிக்கதை.
பாவனா பெற்றோர் இறப்பில் இருந்து மீண்டு வரும் காலகட்டம், தம்பியை இழந்து தவிக்கும் காலம், அதன் காரணத்தை கண்டுபிடிக்கும் காலம் என ஒரு தடயவியல் நிபுணராக சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளார். பாவனாவின் நீண்ட கால தமிழ் ரசிகர்களின் ஏக்கத்தை இந்த படம் மூலம் தீர்த்திருக்கிறார்.
ரஹ்மான் ஏற்கனவே சமீப காலங்களில் பார்த்த மாதிரியான ஒரு கதாபாத்திரம் தான் என்றாலும் அசத்தலான ஸ்கிரீன் பிரசன்ஸ் மற்றும் நடிப்பால் ஆட்கொள்கிறார். பாவனாவின் காதலர், வில்லனாக வரும் அந்த நபர், தம்பியாக வரும் நடிகர் என ஒவ்வொருவரும் அவரவர் கதாபாத்திரத்தை செவ்வனே செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு, படத்தொகுப்பு மற்றும் இசை என அனைத்துத் துறைகளும் இங்கு ஒன்றிணைந்து செயல்படுகின்றன. தொழில்நுட்ப அம்சங்கள் படத்துக்கு கூடுதல் பலமாக அமைந்திருக்கிறது. ஒவ்வொரு லொகேஷனும் படத்தை விஷூவலாக ரசிக்கவும், பிரமிக்கவும் வைக்கிறது. அனிமல் இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ராமேஷ்வர் இசையில் பாடல்கள், பின்னணி இசை என அனைத்தும் தரம்.
ஒரு சுவாரஸ்யமான, தனித்துவமான திரில்லர் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குநர் ரியாஸ் மராத். தன் இருப்பை நிலைநிறுத்தப் போராடும் ஒரு காவல்துறை அதிகாரி, தன் சொந்த இழப்புகளுக்கு பிறகும் அதற்கான காரணத்தை அறிய போராடும் தடயவியல் நிபுணர் என இரண்டு முக்கிய கதாபாத்திரங்களை உலவ விட்டு, இரண்டு பேரின் நோக்கமும் ஒன்றே தான், அதை எப்படி கையாண்டார்கள் என்பதை மிக நேர்த்தியாக எழுதி இயக்கியிருக்கிறார். இரண்டாம் பாதியில் வரும் high-concept science விஷயங்கள் கிரகிப்பதற்குள் வேகமாக ஓடுகிறது. ஆனாலும் எளிமையாக புரியும்படி 150 நிமிட படமாக தந்து நம்மை படத்துடன் ஒன்ற வைக்கிறார். மொத்தத்தில் சுவாரஸ்யமான தருணங்களைக் கொண்ட ஒரு நல்ல படமாக முடிகிறது. திரில்லர் ரசிகர்களுக்கு நல்ல ஒரு விருந்து. நிச்சயம் பார்க்கலாம்.

