ஓல்ட் டவுன் பிக்சர்ஸ் மற்றும் பத்மஜா பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில், ஈஸ்வர் கார்த்திக் இயக்கியிருக்கும் பொருளாதார குற்றப் பின்னணியில் உருவாகியிருக்கும் திரில்லர் திரைப்படம் “ஜீப்ரா”. சத்யதேவ், டாலி தனஞ்செயா, பிரியா பவானி ஷங்கர், சத்யராஜ், சுனில் ஆகியோர் நடிக்க மிக பிரம்மாண்டமான பான் இந்திய திரைப்படமாக உருவாகியுள்ளது.
படத்தின் கதைப்படி, ஒரு முக்கியமான வங்கியில் அதிகாரியாக பணியாற்றும் சத்யதேவ், தன் காதலி பிரியா பவானி ஷங்கரை ஒரு பொருளாதார பிரச்சினையில் இருந்து காப்பாற்ற வங்கியில் தன்னுடைய புத்திசாலித்தனத்தை உபயோகித்து சில விஷயங்களை செய்கிறார். பிரியா பவானி ஷங்கரை காப்பாற்றிய அடுத்த நாளே அவர் செய்த அந்த செயலால் மிகப்பெரிய ஒரு பிரச்சினையில் மாட்டிக் கொள்கிறார். அதன் மூலம் வில்லனுக்கு 5 கோடியை தர வேண்டிய சூழல் ஏற்படுகிறது. மறுமுனையில் பணத்தை விட தனக்கு சுயமரியாதை முக்கியம் எனக் கருதும் டாலி தனஞ்செயா அந்த 5 கோடி பணத்தை தனக்கு 4 நாட்களில் தர வேண்டும் என அழுத்தம் கொடுக்கிறார். வங்கிக் கணக்கில் வெறும் 80,000 மட்டுமே வைத்திருக்கும் நாயகன் சத்யதேவ் அந்த 5 கோடியை தன் காதலி மற்றும் நண்பன் உதவியோடு எப்படி திருப்பி கொடுத்தார் என்பதே பரபர திரைக்கதையில் உருவாகி இருக்கும் ” ஜீப்ரா”.
நாயகன் சத்யதேவ். பான் இந்தியா படம் என்ற உடனே அதிரடியாக 100 பேரை அடித்து துவைத்து எண்ட்ரி கொடுப்பாரோ என நினைத்தால் மிகச் சாதாரணமாக, கதைக்கு ஏற்ற வகையில் கதாபாத்திரத்துக்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார். தனது புத்திசாலித்தனத்தால் அவர் செய்யும் செயல்கள் ஒவ்வொன்றும் ரசிக்க வைக்கிறது. நல்ல கதைத்தேர்வு.
நாயகியாக பிரியா பவானி ஷங்கர். வெறுமனே பாடல் காட்சிகளுக்கு வந்து செல்லும் நாயகியாக இல்லாமல், கதையின் மிக முக்கிய திருப்பம் நிகழும் காரணியாகவே இருக்கிறார். கதையின் போக்கிலும் அவருக்கும் நடிக்க நல்ல வாய்ப்புள்ள கதாபாத்திரம். செவ்வனே செய்திருக்கிறார்.
வில்லத்தனம் கலந்த ஒரு இரண்டாம் நாயகன் கதாபாத்திரத்தில் டாலி தனஞ்செயா. அசத்துகிறார். அளந்த நடிப்பு. தேவையாக இடங்களில் ஸ்கோர் செய்கிறார். சத்யராஜ் எம்ஜிஆர் ரசிகர் போன்ற ஒரு கதாபாத்திரத்தில் காமெடி கலந்து தனக்கே உரிய ரகளையான நடிப்பை தந்திருக்கிறார். சுனில் வர்மா வழக்கம் போல அசத்தியுள்ளார். சிரிக்கவும் வைக்கிறார். சில நேரங்களில் எரிச்சல் ஊட்டும் கதாபாத்திரம், அதை அழகாக செய்திருக்கிறார். ஜெனிஃபர் பிசினாடோ, சுரேஷ் மேனன், சத்யா அக்கலோ உள்ளிட்ட மற்ற கதாபாத்திர நடிகர்களும் தங்கள் பங்கை சிறப்பாகவே செய்திருக்கிறார்கள்.
சலார் மற்றும் KGF படங்களின் வெற்றிக்கு முக்கிய தூணாக இருந்த இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசை மிகப்பெரும் பலமாக அமைந்துள்ளது. சத்யா பொன்மார் ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் பிரமாண்டம். சேஸிங், சண்டைக் காட்சிகளில் அசத்தியிருக்கிறார். விஎஃப்எக்ஸில் சில காட்சிகள் சுமாராக இருப்பது குறையாக தெரிகிறது. படத்தின் நீளம் 2:44 மணி நேரம் இருப்பதும் சில இடங்களில் குறைத்திருக்கலாம் என்றே தோன்றுகிறது.
’பெண்குயின்’ மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக், இந்த படத்தில் மாறுபட்ட திரைக்கதையில் பரபரப்பான திரில்லர் படத்தை கொடுத்து இறங்கி அடித்திருக்கிறார். தமிழிலிருந்து சத்யராஜ், தெலுங்கு சினிமாவில் இருந்து சத்யதேவ், கன்னடத்தை சேர்ந்த தனஞ்சயா என நட்சத்திர நடிகர்களை நடிக்க வைத்து மூன்று மொழிகளிலும் ஸ்கோர் செய்கிறார். வங்கிப் பின்னணியில் நடக்கும் காட்சிகளில் சுவாரஸ்யத்தை கூட்டியிருக்கிறார். நிறைய ஆய்வு செய்து திரைக்கதையில் அதை கொண்டு வர மெனக்கெட்டிருப்பதும், எளிமையாக ரசிகர்களுக்கு புரியும் வகையில் உழைத்திருப்பதும் தெரிகிறது. தமிழில் பார்க்கும்போதும் டப்பிங் படம் என்ற நினைப்பு வராத வகையில் மிகச்சிறப்பாகவே அமைந்திருக்கிறது. நல்ல சுவாரஸ்யமான விறுவிறுப்பான திரில்லர் படத்தை காதல், காமெடி என கலந்து கொடுத்து அப்ளாஸ் அள்ளுகிறார். நிச்சயம் ரசிகர்கள் எந்த சந்தேகமும் இன்றி குடும்பத்துடன் பார்க்கலாம்.