குட் நைட், லவ்வர், டூரிஸ்ட் ஃபேமிலி என தொடர்ந்து தனித்துவமான Breathe of fresh air என சொல்லக் கூடிய வகையில் மனதை வருடும் படங்களை தந்து முத்திரை பதித்த மகேஷ் ராஜ் பசிலியான் மற்றும் 16 வருடங்களுக்கு முன்பே தமிழ் சினிமாவில் Ahead of time என குறிப்பிடும்படியான கோவா படத்தை தந்த சௌந்தர்யா ரஜினிகாந்த் இருவரும் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘வித் லவ்’. டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் நாயகனாக அறிமுகம் ஆகியிருக்கும் இந்த படத்தில் அனஸ்வரா ராஜன் நாயகியாக நடித்திருக்கிறார். ஷான் ரோல்டன் இசையமைக்க, அறிமுக இயக்குனர் மதன் இயக்கியுள்ளார். முழுக்க முழுக்க இன்றைய தலைமுறை இளைஞர்களை கவரும் காதல் கதையாக உருவாகியுள்ள இந்த படம் எப்படி இருக்கு? பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, சென்னையில் டிசைனராக இருக்கும் அபிஷான் அக்கா, அவருக்கு பெண் பார்த்து வருகிறார். அப்படி அவர் தேர்வு செய்த ஒரு பெண்ணை சென்று சந்திக்க சொல்கிறார். அந்த பெண் தான் நாயகி அனஸ்வரா ராஜன். காஃபி ஷாப்பில் சந்தித்து பேசும்போது தங்கள் வெளிப்படுத்தப்படாத காதல் கதைகளை பகிர்ந்து கொள்கிறார்கள். இருவருக்குமே பள்ளியில் படிக்கும் காலத்தில் சொல்லாத காதல் இருந்தது தெரிகிறது. முடிவில் தாங்கள் காதலித்தவர்களை இப்போது தேடி கண்டுபிடித்து அவர்களிடம் தங்கள் காதலை வெளிப்படுத்தி விட்டு வரலாம், நமக்கும் புது அனுபவமாக இருக்கும் என முடிவெடுக்கிறார்கள். அப்படி கிளம்பும்போது அவர்கள் வாழ்க்கையில் என்ன மாற்றங்கள் நிகழ்ந்தன? அந்த காதலர்களை தேடி கண்டுபிடித்து காதலை சொன்னார்களா? இவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்தனரா? என்பதே மீதிக்கதை.
நாயகன் அபிஷான் ஜீவிந்த். பிரதீப் ரங்கநாதன் வரிசையில் முதல் படம் இயக்குனராக சாதித்து விட்டு அடுத்த படத்திலேயே நாயகனாக அறிமுகம். முதல் படம் என்றாலும் அப்படி தெரியாத அளவுக்கு நல்ல ஒரு நடிப்பை தந்திருக்கிறார். பக்கத்து வீட்டுப் பையன் போன்ற ஒரு எளிய முகம், ரொம்பவே அப்பாவித்தனமான குணாதிசயங்கள், கள்ளமில்லா நல்ல சிரிப்பு என அவரது சின்ன சின்ன செய்கைகள் மூலம் கவனம் ஈர்க்கிறார். வாரணம் ஆயிரம்க்கு ட்ரிபியூட் கொடுக்கும் அந்த பாடல் காட்சியிலும் ரசிக்க வைக்கிறார். எமோஷனல் காட்சிகளிலும் ஸ்கோர் செய்கிறார்.
நாயகி அனஸ்வரா ராஜன். மலையாளத்தில் பார்த்து ரசித்த அனஸ்வராவின் நீட்சியாக இந்த படத்திலும் அசால்ட்டாக ஸ்கோர் செய்கிறார். பள்ளிக் காட்சிகளிலும் சரி, present காட்சிகளிலும் சரி, இரண்டிலுமே அப்ளாஸ் அள்ளுகிறார். பிரேமம் நிவின் பாலிக்கு அமைந்த மாஸ் காட்சி போல வரும் ஒரு காட்சி அடி பொலி. இன்னும் கொஞ்சம் நீட்டித்திருக்கலாம் என்ற உணர்வு எழுகிறது.
முதல் நீ முடிவும் நீ, டாடா, லவ்வர் படங்களில் நண்பனாக வந்தாலும் படத்துக்கு படம் வித்தியாசம் காட்டி மனதை கவர்ந்த ஹரீஷ் இந்த படத்திலும் ஈர்க்கிறார். அனிஷாவாக வரும் காவ்யா அனில் மிக மிக அழகு, அந்த கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்திருக்கிறார். நாயகனின் அக்காவாக வரும் RJ ஆனந்தி கோமாளி, லவ் டுடே படங்களை நினைவுபடுத்தினாலும் அந்த கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்திப் போகிறார். சச்சின் நாச்சியப்பன், தேனி முருகன், சுதர்ஷன், சரவணன் என மற்ற நடிகர்களும் அவர்கள் பங்கை மிகச் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
அறிமுக ஹீரோ படத்தில் உண்மையான ஹீரோக்களாக இருந்திருக்கிறார்கள் இருவர். ஒருவர் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன். வழக்கம் போல பாடல்களில் ராஜாங்கமே நடத்துகிறார். ஆண், பெண் என இரண்டு வெர்ஷனில் வரும் அய்யோ காதலே பாடல் இளைமை துடிப்பு. பின்னணி இசையிலும் இரைச்சல் இல்லாமல் கதைக்கு தேவையான இசையை தந்து படத்தினை மேம்படுத்துகிறார். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு படத்தின் மிகப்பெரிய பலம். கியூட்டான காதல் காதைக்கு ஏற்ற வகையில் கலர்ஃபுல்லான ஒளிப்பதிவில் நம் கண்களை குளிர்விக்கிறார்.
இயக்குனர் மதன். முதல் படத்திலேயே கொஞ்சம் தனித்துவமான ஒரு கான்செப்டை கையில் எடுத்து அதை ரசிக்கும் வகையில் இளமை துள்ளலோடு தந்திருக்கிறார். நாயகன், நாயகி பின் கதையை சொன்ன விதம், அவர்கள் கதாபாத்திரம் intersect ஆகும் அந்த இடம், முக்கியமான சம்பவங்கள் ஒரு butterfly effect போல அவர்கள் வாழ்க்கையில் மாற்றம் நிகழ்த்துவது என ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து எழுதி இயக்கியிருக்கிறார். அபிஷான், அனஸ்வரா பார்ட்டிக்கு செல்லும்போது வரும் அந்த விண்டேஜ் பாடல் வரும் இடமும், அதை காட்சிப்படுத்திய விதமும் மிக அருமை. அந்த பாடல் வரிகளுக்கு ஏற்ப காட்சிகள் அமைத்ததும் ரசிக்கும்படி இருந்தது. ட்ரைலரிலேயே கதையை சொல்லி இருந்தாலும் கொஞ்சம் கூட போர் அடிக்காமல் 2 மணி நேரம் 20 நிமிடங்கள் நம்மை Feel Good ஆக உணர வைத்து வெளியில் வரும்போது இறகை போல லேசான மனதுடன் நம்மை உணர வைத்த விதத்தில் ஜெயித்திருக்கிறார் இயக்குனர் மதன். நாயகனாக அபிஷானுக்கும், இயக்குனராக மதனுக்கும் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமையும் என்று நம்பலாம். படம் முடிந்த பின் வரும் ‘வித் லவ்’ என்ற தலைப்பு படக்குழு நமக்கு எழுதிய கடிதத்தை வாசித்த உணர்வை தந்திருக்கிறது.

