வெப்பன் – திரை விமர்சனம்

மில்லியன் ஸ்டுடியோ புரொடக்‌ஷன்ஸ், எம்.எஸ். மன்சூர் தயாரிப்பில் சவாரி படத்தை இயக்கிய குகன் சென்னியப்பன் இயக்கியுள்ள இரண்டாவது படம் தான் “வெப்பன்”. சத்யராஜ், வசந்த் ரவி, தான்யா ஹோப் நடித்துள்ள இந்த ’வெப்பன்’ திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். தமிழ் சினிமாவிற்கு அரிதான சயின்ஸ் ஃபிக்‌ஷன் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இந்த படம் ரசிகர்களை கவருமா? பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, வசந்த் ரவி ஒரு யூடியூபர். தன் நண்பர்கள் குழுவுடன் தன் யூடியூப் வீடியோவுக்கு தேவையான புது கண்டெண்டை தேடி தேனி செல்கிறார்கள். இயற்கையை பாதுகாக்கணும் என்ற லட்சிய நோக்குடன் வாழ்பவர் தான் வசந்த் ரவி. சென்ற இடத்தில் நியூட்ரினோ திட்டம் அமலில் இருக்கும் பாதுகாக்கப்பட்ட மண்டத்தில் குண்டு வெடிப்பு  நிகழ்கிறது. அதை தொடர்ந்து அந்த விஷயத்தை கையில் எடுக்கிறது தேசிய பாதுகாப்புப் படை. அந்த இடத்தில் சம்பந்தப்பட்ட அத்தனை பேரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வருகிறது. இது ஒரு புறம் இருக்க, தன்னுடைய பிளாக் சொசைட்டியை சேர்ந்தவர்கள் அனைவரும் கொலை செய்யப்பட்டு விட்டனர், எனவே தனக்கு இசட் கேட்டகிரி பாதுகாப்பு தேவை என அவர்களை நாடுகிறார் பிளாக் சொசைட்டியை சேர்ந்த வேலு பிரபாகரன். அவரையும் விசாரிக்கும்போது பல விஷயங்கள் தெரிய வருகின்றன. சூப்பர் சொசைட்டியின் தலைவனான ராஜீவ் மேனன், சூப்பர் பவரை கொண்ட அந்த சூப்பர் ஹியூமனை அழித்து, அவரிடம் இருக்கும் ஒரு ஸ்வஸ்திக்கை தன்னிடம் கொண்டு வந்து சேர்க்க பலரையும் அனுப்புகிறார். அந்த நிகழ்வுக்கு காரணம் யார்? அந்த சூப்பர் ஹியூமன் என்ன ஆனார்? அவரின் சக்திகளை வைத்து என்ன செய்தார்? ஹீரோ வசந்த் ரவியின் நோக்கம் நிறைவேறியதா? என்பதே மீதிக்கதை.

நாயகனாக வசந்த் ரவி, பரபரவென நகரும் கதையில் பதட்டத்துடனும், அதிரடியுடனும் தனக்கே உரித்தான பாடி லாங்குவேஜில் நடித்திருக்கிறார். கதைக்கு ஏற்றவாறு, அவரின் கதாபாத்திரத்தை பிரதிபலிக்கும் வகையில் அவரின் உடல்வாகு வலு சேர்க்கிறது. சண்டைக்காட்சிகளிலும் தன் பங்கை செவ்வனே செய்திருக்கிறார்.

சத்யராஜ், கதையின் முக்கிய அங்கமாக, சஸ்பென்ஸ் கதாபாத்திரமாக எப்போ வருவார் எப்போ வருவார் என எதிர்பார்க்க வைத்து மிரட்டலான ஒரு காட்சியில் அறிமுகமாகிறார். அவர் அறிமுக காட்சி அசத்தல். சூப்பர் பவரை கொண்ட ஒரு மனிதராக அதற்குரிய தோற்றத்துடன் மிரட்டுகிறார். நாயகியாக தான்யா ஹோப், சராசரி கதாபாத்திரமாக வந்து போகிறார். கதையில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. எலைட் வில்லனாக வரும் ராஜீவ் மேனன் கதாபாத்திரத்துக்கு ஏற்ப நல்ல தேர்வு. ஆனால் படம் முழுக்க ஒரே கன்ட்ரோல் ரூமில் இருந்தபடியே எல்லாவற்றையும் ஆட்டுவிக்கும் கதாபாத்திரம். ஒரு கட்டத்திற்கு பிறகு தொழில்நுட்பத்தை வைத்தே எல்லாவற்றையும் சாதிப்பது சலிப்பை வரவழைக்கிறது. வேலு பிரபாகரன், கனிகா, யாஷிகா ஆனந்த், பரத்வாஜ் ரங்கன், கஜராஜ், பிக் பாஸ் மாயா என பலரும் ஒரு காட்சியுடன் காணாமல் போகிறார்கள்.

பிரபு ராகவ் ஒளிப்பதிவில் படம் முழுக்க ஒருவித பிளாக் டோன் படத்துக்கான Mood-ஐ செட் செய்கிறது. தேனி சம்பந்தப்பட்ட காட்சிகள் ரசிக்க வைக்கிறது. நிறைய விஎஃப்எக்ஸ்  காட்சிகள் இருக்கும் இந்த படத்துக்கு ஒளிப்பதிவாளரின் பங்கு அதிகமே. ஜிப்ரான் இசையில் பாடல்கள் பெரிய அளவில் ஈர்க்கவில்லை, பின்னணி இசையில் கேஜிஎஃப் படம் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை. ஆனாலும் படத்தின் தன்மைக்கேற்ப இசையை வழங்க ஜிப்ரான் தவறவில்லை.

குகன் சென்னியப்பன் தனது இரண்டாவது படத்தின் இப்படிப்பட்ட ஒரு கதைக்களத்தை, சயின்ஸ் ஃபிக்ஷன் படத்தை தர எடுத்த முயற்சி பாராட்டுக்குரியது. திரைக்கதை பரபரவென செல்கிறது, ஆனாலும் கதை ஒரே இடத்தை சுற்றி சுற்றி வருவதும், சுவாரஸ்யத்தை ஏற்படுத்தவும் தவறியிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். சூப்பர் பவர் கொண்ட ஹீரோவும், சூப்பர் வில்லனும் மோதி யார் ஜெயித்தார்கள் என்பதை பார்க்க சுவாரஸ்யமான அமசங்கள் மிஸ்ஸிங். சத்யராஜ் அறிமுக சீக்வன்ஸ் போன்ற ஒரு சில காட்சிகள் திரையில் பார்க்கும்போது ரசிக்க வைக்கிறது. கேஜிஎஃப்வை நினைவுபடுத்தும் மேக்கிங்கும், கதை சொல்லும் உத்தியும் சிலருக்கு ஒர்க் ஆகலாம், சிலருக்கு அதுவே மைனஸாகவும் அமையலாம். நம்மை பொருத்துவரை சூப்பர் ஹியூமன் சகா என்ற பெயரில் சூப்பர் ஹீரோக்களை அதவாது மார்வெல் போன்ற அடுத்தடுத்த பாகங்களை உருவாக்கும் இயக்குனரின் விஷனும், நோக்கமும் உயர்ந்தது. ஆனால் அதற்கான செட் அப்பை சரியாக அமைத்திருக்கிறார்களா? என்பதை ரசிகர்களின் முடிவுக்கே விட்டு விடுகிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *