‘நீரின்றி அமையாது உலகு’ எனும் டேக்லைனுடன் ஐம்பூதங்களை பற்றியும், அவற்றில் இரண்டை நாம் வியாபாரமாக்கி விட்டோம், அந்த இயற்கையின் சாபம் தான் நம்மை இப்படி ஆட்டிப் படைக்கிறது என்ற கருத்துடன் உருவாகியுள்ள படம் தான் ‘வருணன்’. யாக்கை பிலிம்ஸ் பேனரில் கார்த்திக் ஸ்ரீதரன் தயாரிக்க, ராதாரவி, சரண்ராஜ் முக்கிய வேடங்களில் நடித்த இந்த படத்தை ஜெயவேல் முருகன் இயக்கியுள்ளார். துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ், கேப்ரியல்லா, சங்கர் நாக் விஜயன், ஹரிப்பிரியா ஆகியோர் நாயகன், நாயகியாக அறிமுகமான படம் இது. சில ஆண்டுகள் கழித்து ரிலீஸ் ஆகும் படம் இன்றைய சூழலுக்கு ஏற்ப ரசிக்கும்படி உள்ளதா? தண்ணீர் பிரச்சினைகளை எவ்வாறு அலசியிருக்கிறது? பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, வடசென்னையில் ராதாரவி, சரண்ராஜ் இருவரும் எதிரெதிர் துருவமாக வாட்டர் கேன் சப்ளை தொழில் செய்பவர்கள். இதில் ராதாரவி வாட்டர் பிளான்ட் வைத்திருப்பதால் அவர் கையே ஓங்கி இருக்கிறது. சரண்ராஜின் மனைவி மகேஸ்வரியும், மைத்துனரும் தண்ணீர் தொழிலுடன் கூடுதலாக போதை தரும் பானங்களை தயார்செய்து விற்றும் வருகிறார்கள். ராதாரவியிடம் வேலை பார்க்கும் துஷ்யந்த் கேப்ரியல்லாவை காதலிக்கிறார். சங்கர் ஹரிப்ரியாவை காதலிக்கிறார். இந்த தொழில் போட்டிக்கு நடுவில் அவர்கள் காதல் என்ன ஆனது? தொழில் என்ன ஆனது? என்பதே மீதிக்கதை.
துஷ்யந்த், சங்கர் நாக் விஜயன், கேப்ரியல்லா, ஹரிப்ரியா என நாலவருமே இந்த படம் சில ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்டது என்பதற்கு சாட்சியாக திரையில் தெரிகிறார்கள். நடிப்பிலும், தோற்றத்திலும் என அவர்கள் குறைந்தது 6,7 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தில் நடித்தது தெரிகிறது. ஆனாலும் முடிந்தவரை நடித்திருக்கிறார்கள். ராதாரவி அவருடைய தோற்றம், டயலாக் டெலிவரி, பாடி லாங்குவேஜிலேயே கெத்து காட்டுகிறார். அவரின் தொழில் போட்டியாளரான சரண்ராஜ் வித்தியாசமான பாடி லாங்குவேஜூடன் வேறு ஒரு பரிமாணத்தில் நடித்திருக்கிறார். அவரது மனைவியாக மகேஸ்வரி, வில்லத்தனம் கலந்த நடிப்பை அனாயசமாக செய்திருக்கிறார். ஜீவா ரவி, அர்ஜுனா கீர்த்தி வாசன், ஹைடு கார்த்தி, பிரியதர்ஷன், கௌஷிக், துங்கன் மாரி, கிரண் மயி, பேபி ஜாயிஸ் , ஐஸ்வர்யா உள்ளிட்ட பலரும் தங்கள் கதாபாத்திரங்களை நன்றாகவே செய்திருக்கிறார்கள்.
ஸ்ரீராம சந்தோஷ் ஒளிப்பதிவில் வடசென்னையை நம் கண் முன் பார்த்த உணர்வு. போபோ சசி இசையில் பாடல்கள் எல்லாமே நன்றாகவே இருக்கிறது. டூயட் பாடல்கள் ரசிக்க வைக்க, கோளாறு பாடல் படத்தை கொஞ்சம் எலிவேட் செய்கிறது. எடிட்டிங்கிலும் அதற்கு தகுந்தவாறு செய்திருக்கிறார்கள்.
இயக்குனர் ஜெயவேல் முருகன் தண்ணீரைப் பற்றி பேசியிருக்கிறார். 1995ம் ஆண்டிலேயே சென்னைக்கு தண்ணீர் கேன் அறிமுகமாகி விட்டது என்ற தகவலையும், தண்ணீர் வியாபாரம் ஆனதால் ஏற்படும் பிரச்சினைகளையும், தண்ணீர் சேமிப்பு பற்றியும் படத்தில் சொல்ல முயற்சித்திருக்கிறார். நல்ல ஒரு கருத்தை வடசென்னை பின்னணியில் இரு கோஷ்டிக்கு இடையேயான மோதல், அதிகாரத்தில் இருப்பவர்களின் சூழ்ச்சி, பகை, பழிவாங்கல் என கலந்து ஒரு கமெர்சியல் படமாகவே தந்துள்ளார் இயக்குனர். குறைகளை கடந்து பார்த்த நல்ல ஒரு கருத்தை சொல்லும் படமாக இருக்கிறது இந்த வருணன்.