வல்லான் – விமர்சனம்

கடந்த 2024-ம், இந்த 2025 துவக்கமுமே இயக்குனர் சுந்தர்.சிக்கு சிறப்பாகவே அமைந்துள்ளது. கடந்த ஆண்டு அவர் இயக்கி நடித்த அரண்மனை 4 படம் 100 கோடி வசூலை பெற்று மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த பொங்கலில் 12 ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த அவரின் மத கஜ ராஜா படம் பொங்கல் வின்னராக வசூலை குவித்து வருகிறது. இந்த நேரத்தில் அவர் நாயகனாக நடித்த வல்லான் திரைப்படம் இந்த வாரம் வெளியாகிறது. கட்டப்பாவ காணோம் என்ற வித்தியாசமான படத்தை கொடுத்த இயக்குனர் மணி சேயோன் இயக்கியிருக்கிறார். கிரைம் திரில்லர் வகையை சேர்ந்த இந்த படம் ரசிகர்களை சீட்டின் நுனியில் அமர வைத்ததா? பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, சுந்தர்.சி ஒரு காவல்துறை அதிகாரி. நகரில் மிக முக்கியமான பெரும் புள்ளி ஒருவர் முகம் சிதைந்த நிலையில் இறந்து கிடக்க, அதை விசாரிக்கும் பொறுப்பை சுந்தர்.சியிடம் ஒப்படைக்கிறார் உயர் அதிகாரி. இந்த வழக்கு உனக்கு எவ்வளவு முக்கியம் என்பது எனக்கு தெரியும் என்று சொல்லியே அவரிடம் ஒப்படைக்கிறார். இந்த நிலையில் அடுத்தடுத்து சில கொலைகளும் நடக்க, இந்த குற்றங்களின் பின்னணி என்ன? அவர் விசாரணையில் அந்த கொலைக்கான காரணங்கள் என்ன? கொலையாளி யார்? எதனால் அவை எல்லாம் நடந்து என்பதை அடுத்தடுத்து பல திருப்பங்களுடன் சொல்லியிருக்கிறார் இயக்குனர்.

நாயகன் சுந்தர் சி. வழக்கம் போல தன் ஸ்க்ரீன் பிரசன்ஸ் மூலமே ஸ்கோர் செய்கிறார். கொலை வழக்கை விசாரிப்பது, அதில் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையுடன் சம்பந்தப்படும்போது அதில் உடைந்து போவது என காவல்துறை அதிகாரியாக கச்சிதமாக பொருந்துகிறார். எமோஷன் காட்சிகளில் மட்டும் இன்னும் கொஞ்சம் நடித்திருக்கலாம்.

நாயகியாக தான்யா ஹோப். சுந்தர்.சியுடன் காதல் காட்சிகள், பாடல் காட்சிகளில் அழகாக வந்து போகிறார். கதையின் மிக முக்கியமான புள்ளியில் அவரை இணைத்தது அவரது கதாபாத்திரத்திற்கு வலு சேர்க்கிறது. ஹெபா படேல் மாடல் அழகியாக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சாந்தினி தமிழரசன் நல்ல நடிகை, ஆனால் அவரது கதாபாத்திரம் சரியாக சொல்லப்படவில்லையோ எனத் தோன்ற வைக்கிறது. அபிராமி வெங்கடாசலம் அழுத்தமான, எமோஷனல் கதாபாத்திரம். முடிந்த நடிப்பை வழங்கியிருக்கிறார். ஜெயக்குமார், கமல் காமராஜ், தலைவாசல் விஜய் மற்றும் மற்ற நடிகர்களும் தங்கள் பங்கை செய்திருக்கிறார்கள்.

மணி பெருமாள் ஒளிப்பதிவு படத்திற்கு ஓரளவு பலம் சேர்க்கிறது. ஆக்ஷன் காட்சிகளிலும், ஊட்டியில் படமாக்கப்பட்ட காட்சிகளில் அவரது உழைப்பு தெரிகிறது. சந்தோஷ் தயாநிதியின் இசையில் பாடல்கள் படத்துடன் பார்க்கும்போது ரசிக்க வைக்கிறது. குறிப்பாக சுந்தர்.சி, தான்யாவின் காதல் பாடல் இதம். பின்னணி இசையும் படத்துக்கு பலம்.

இயக்குனர் மணி சேயோன் கட்டப்பாவ காணோம் படத்தில் கவனம் பெற்றவர், இந்த வல்லான் படத்தில் அடுத்த கட்டத்துக்கு போக முயற்சி செய்திருக்கிறார். படத்தில் அவர் தொட்டிருக்கும் பணப்பரிமாற்றம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் நல்ல சுவாரஸ்யமான ஒன்று. ஆனால் சஸ்பென்ஸ் திரில்லராக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த படத்தின் திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம் எனத் தோன்றுகிறது. படத்தின் நீளம் இரண்டு மணி நேரம் என்பது மிகச்சிறப்பான முடிவு. திரில்லர் ரசிகர்கள் கண்டிப்பாக ரசித்துப் பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *