தமிழ் சினிமாவில் சீரியல் கில்லர் திரைப்படங்கள் வெகு சிலவே வந்திருக்கின்றன. அவற்றில் சில படங்கள் காலம் கடந்தும் நிலைத்து நிற்பவை. அப்படிப்பட்ட ஒரு மிக முக்கியமான ஜானரில் அந்த சீரியல் கில்லர் கேஸை முடித்து வைக்கும் நாயகனுக்கு அல்ஸைமர் என்ற பிரச்சினை இருப்பதாக சுவாரஸ்யமான விஷயத்தை வைத்து உருவாகியிருக்கும் திரைப்படம் “தி ஸ்மைல்மேன்”. சுப்ரீம் ஸ்டார் சரத்குமாருக்கு இது 150வது படம். “மெமரீஸ்” என்ற சைக்காலஜிகல் த்ரில்லர் படத்தை இயக்கிய ஷ்யாம், பிரவீன் என்ற இரட்டை இயக்குனர்கள் இந்த படத்தை இயக்கியிருக்கிறார்கள். காலம் கடந்தும் நிற்கும் படமாக மாறுமா? பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, சிதம்பரம் நெடுமாறன் என்னும் காவல் அதிகாரியாக சரத்குமார். அல்ஸைமர் நோயால் பாதிக்கப்பட்டு அடுத்த ஒரு வருடத்திற்குள் தன்னுடைய நினைவுகளை கொஞ்சமாக மறக்கும் சூழலுக்கு ஆளாகிறார். அவர் நினைவில் அவ்வப்போது கடந்த கால நினைவில் இருந்து ஒரு பெண் குழந்தை வந்து போகிறார். அதே நேரம் 5 ஆண்டுகளுக்கு முன்பே என்கவுண்டர் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பிரபலமான ஸ்மைல்மேன் சீரியல் கில்லர் பாணியில் மீண்டும் கொலைகள் நடக்கின்றன. நினைவுகளை இழந்து வரும் சரத்குமார் அந்த சீரியல் கில்லரை கண்டுபிடித்தாரா? அவனின் நோக்கம் என்ன? என்பதே மீதிக்கதை.
சரத்குமார், போர்த்தொழில் படத்துக்கு பிறகு மீண்டும் சீரியல் கில்லரை கண்டுபிடிக்கும் ஒரு திரில்லர் படத்தில் நடித்திருக்கிறார். காவல்துறை அதிகாரிக்கே உண்டான மிடுக்குடன் இருந்தாலும், நினைவுகளை இழந்து நடமாடும் கதாபாத்திரத்துக்கான தன்மைகளை தன் நடிப்பின் மூலம் பிரதிபலிக்கிறார். அந்த கேஸை துப்பறியும் துடிப்பான இளம் அதிகாரியாக ஸ்ரீகுமார், அவர்கள் குழுவில் இருக்கும் சிஜா ரோஸ் ஆகியோரும் தங்கள் கதாபாத்திரங்களை செவ்வனே செய்திருக்கிறார்கள். இனியா மிக முக்கியமான கதாபாத்திரத்தில் வந்து தன்னுடைய அனுபவமிக்க நடிப்பால் நம் மனதில் நிற்கிறார். ஜார்ஜ் மரியான், சுரேஷ் சந்திர மேனன், ராஜ்குமார், பேபி ஆலியா, பிரியதர்ஷினி, குமார் நடராஜன் ஆகியோரும் தங்கள் பங்கை சிறப்பாகவே செய்திருக்கிறார்கள். சீரியல் கில்லராக நடித்தவருக்கு நிச்சயம் பாராட்டுக்களை சொல்லியே ஆக வேண்டும். அவர் யார் என்பதை திரையில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
கவாஸ்கர் அவினாஷ் பின்னனி இசை படத்துக்கு மிகப்பெரும் பலம் சேர்த்திருக்கிறது. குறிப்பாக இரண்டாம் பாதியில் சில முக்கியமான காட்சிகளில் திகிலூட்டி இருக்கிறது. விக்ரம் மோகன் ஒளிப்பதிவில் இரவுக் காட்சிகளும், ஆக்ஷன் காட்சிகளும் சிறப்பாகவே வந்திருக்கிறது. படத்தின் திரில்லர் நிமிடங்களுக்கு ஒளிப்பதிவு கூடுதல் வலு சேர்த்திருக்கிறது. ஷான் லோகேஷ் காட்சிகளுக்கு தேவையான நீளத்தை கொடுத்து படத்தின் ஓட்டத்துக்கு உதவியிருக்கிறார்.
இரட்டை இயக்குனர்கள் ஷ்யாம், பிரவீன் ஒரு சீரியல் கில்லர் திரில்லர் படத்துக்கு என்னவெல்லாம் தேவையோ அதை மிகச் சிறப்பாகவே கையாண்டிருக்கிறார்கள். கமலா ஆல்கெமிஸ் திரைக்கதை வசனம் படத்தின் முதுகெலும்பாக அமைந்திருக்கிறது. முதல் பாதியில் சில விஷயங்கள் கொஞ்சம் குழப்புவது போல இருந்தாலும் இரண்டாம் பாதியில் அவற்றை விளக்கிய விதம் அருமை. அதே போல ஃபிளாஷ்பேக் காட்சி ஒரு சிலருக்கு கொஞ்சம் ஏற்றுக் கொள்ள முடியாததாகவும் இருக்கலாம். மொத்தத்தில் திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் ராட்சசன் போல ஒரு பெஞ்ச்மார்க் படமாக கூட அமைந்திருக்கும். ஆனாலும் திரில்லர் பட ரசிகர்கள் நிச்சயம் தியேட்டரில் சென்று பார்த்து ரசிக்கும் ஒரு நல்ல திரில்லர் படம் தான் இந்த “தி ஸ்மைல் மேன்”.