2000களில் சாக்லேட் பாயாக வலம் வந்த ஸ்ரீகாந்த் இன்றும் இளைஞராக நடிக்கும் அளவுக்கு அதே சாக்லேட் பாய் தோற்றத்திலேயே இருக்கிறார். அவரி நடிப்பில் இந்த வாரம் வெளியாகும் படம் “தி பெட்”. இந்த படத்திலும் கூட ஒரு இளைஞராகவே நடித்து நம்மை ஆச்சர்யப்படுத்தி இருக்கிறார். படம் எப்படி இருக்கு? பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, நாயகன் ஸ்ரீகாந்த் அவரது நண்பர்கள் பிளாக் பாண்டி, விஜே பப்பு மற்றும் விக்ரம் வாரக் கடைசியில் விடுமுறையை சந்தோஷமாக கழிக்க, ஊட்டிக்கு செல்ல திட்டமிடுகிறார்கள். சந்தோஷத்துக்கு மேலும் கிக்கேற்ற விலைமாதராக இருக்கும் சிருஷ்டி டாங்கேவையும் பெரும் தொகை தருவதாக சொல்லி அழைத்து செல்கிறார்கள். சிருஷ்டி டாங்கே உடன் உல்லாசமாக இருக்க அவரது நண்பர்கள் துடிக்கிறார்கள். ஆனால் சிருஷ்டி டாங்கே மீது ஏற்கனவே காதல் கொண்ட ஸ்ரீகாந்த் அவரது நண்பர்கள் சிருஷ்டியை தொடாதவாறு பார்த்துக் கொள்கிறார். இந்த நிலையில் சிருஷ்டி டாங்கேவும், நண்பர்களில் ஒருவரான விக்ரமும் காணாமல் போகிறார்கள். மாயமான இருவரையும் நண்பர்கள் ஒரு புறம் தேடி அலைய, காவல் நிலையத்தில் வழக்கு பதிவாகி ஜான் விஜய் தலைமையிலான போலீஸூம் அவர்களை ஊட்டி முழுவதும் தேடுகிறது. யார் அவர்களை கண்டுபிடித்தது? அவர்கள் கிடைத்தார்களா? அவர்கள் என்ன ஆனார்கள்? ஸ்ரீகாந்த் சிருஷ்டியை எப்போது காதலிக்க ஆரம்பித்தார்? என்பதே மீதிக்கதை.
நாயகன் ஸ்ரீகாந்த். சாக்லேட் பாயாக பெண்களின் கனவுக் கண்ணனாக வலம் வந்தவர் இப்படி ஒரு கதாபாத்திரத்தில் துணிந்து நடித்து நம்மை ஆச்சர்யப்பட வைக்கிறார். நண்பர்களுடன் லூட்டி அடிக்கும் காட்சிகள், ஆக்ஷன் காட்சி, காதலை சொல்லும் அந்த காட்சி என ஏற்று நடித்த கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்திருக்கிறார். நாயகி சிருஷ்டி டாங்கே ஒரு துணிச்சலான கதாபாத்திரத்தில் அழகாக வந்து போகிறார். கொஞ்சம் கவர்ச்சியிலும் நம்மை ரசிக்க வைத்திருக்கிறார்.
ஸ்ரீகாந்தின் நண்பர்களாக வரும் பிளாக் பாண்டி, விஜே பப்பு, விக்ரம் தங்களால் முடிந்தவரை நடித்திருக்கிறார்கள். போலீஸ் அதிகாரியாக வரும் ஜான் விஜய் வழக்கமான தன் அசால்ட்டான நடிப்பால் ஸ்கோர் செய்கிறார். திவ்யா, தேவி பிரியா மற்றும் துணை கதாபாத்திரங்களில் நடித்தவர்களும் செவ்வனே நடித்திருக்கிறார்கள்.
தாஜ்நூர் இசையில் ஒரு பாடல்கள் ஓகே ரகம். நண்பனை தேடி அலையும் காட்சியில் வரும் பாடல் இதம். பின்னணி இசையிலும் நன்றாகவே தன் பங்கை செய்திருக்கிறார். கோகுல் ஒளிப்பதிவில் ஊட்டியின் இயல்பான பதிவு நம்மை ஊட்டிக்கு பயணம் செய்த அனுபவத்தை தந்திருக்கிறார். படத்தொகுப்பாளரும் முடிந்தவரை காட்சிகளை வெட்டி, கச்சிதமாக 2 மணி நேரத்திற்குள் தந்திருக்கிறார்.
இயக்குனர் எஸ்.மணிபாரதி எடுத்திருக்கும் கதைக்களமே கொஞ்சம் வில்லங்கமாக தான் இருக்கிறது. ஆனாலும் முடிந்தவரை முகம் சுழிக்க வைக்காத வண்ணம் படத்தை தர முயற்சி செய்திருக்கிறார். ஆனாலும் பேசும் விஷயங்கள் குடும்பத்துடன் பார்க்க முடியாத ஒரு களம். அடல்ட் ரசிகர்களுக்காக எடுக்கப்பட்ட படமாகவே நிற்கிறது. இந்த கதையிலும் உணர்வுப்பூர்வமான ஒரு காதலை சொல்ல முயற்சிக்கிறார். முதல் பாதி கொஞ்சம் சுமாராக போனாலும் இரண்டாம் பாதியில் இயக்குனர் கொஞ்சம் நம்மை நிமிர்ந்து உட்கார வைக்கிறார். சின்ன சின்ன குறைகள் இருந்தாலும் நண்பர்களோடு அமர்ந்து ரசிக்கலாம்.

