ZHEN STUDIOS சார்பில் புகழ் மற்றும் ஈடன் தயாரிக்க, ’தேஜாவு’ படத்தின் மூலம் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில் கிஷன் தாஸ் & ஸ்ம்ருதி வெங்கட், ராஜ் அய்யப்பா, பால சரவணன் நடித்துள்ள திரைப்படம் ‘தருணம்’. சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகியிருக்கும் இந்த படம் பொங்கல் பண்டிகையை ஒட்டி வெளியாகியுள்ளது. முந்தைய தேஜாவு படத்தில் முதல் காட்சியில் இருந்து கிளைமாக்ஸ் வரை நம்மை சஸ்பென்ஸில் வைத்திருந்த இயக்குனர் அரவிந்த், இந்த படத்திலும் அதே போல நம்மை இறுதி வரை சீட் நுனியில் வைத்திருந்தாரா? பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, மத்திய ரிசர்வ் படை போலீஸ் அதிகாரியாக இருக்கும் கிஷன் தாஸ் ஒரு ஆபரேஷனில் தவறுதலாக தன் உயிர் நண்பனையே சுட்டு விட நண்பன் இறந்து விடுகிறார். அதன் சஸ்பென்ஷனில் இருக்கும் கிஷன் தாஸ் மீது விசாரணையும் நடக்கிறது. அவரும் நண்பனை இழந்த சோகத்தில் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் வலுவிழந்து இருக்கிறார். அந்த நேரத்தில் சென்னைக்கு வர, அங்கு நாயகி ஸ்ம்ருதி வெங்கட்டை சந்திக்கிறார். இருவரும் நெருங்கி பழகி, பின் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் முடிவாகிறது. ஸ்ம்ருதியின் பக்கத்து ஃபிளாட்டில் இருக்கும் ராஜ் அய்யப்பா ஸ்ம்ருதியுடன் பழகி அடுத்த கட்டத்துக்கு போகும் முயற்சியில் இருக்க, கிஷன் தாஸ் ஸ்ம்ருதி வாழ்வில் வந்ததால் அது கெட்டு விட்டது என நினைக்கும் ராஜ் அய்யப்பா அவரை பழிவாங்க நினைக்கிறார். இதற்கிடையில் ஸ்ம்ருதி ஒரு பெரும் சிக்கலில் மாட்டிக் கொள்கிறார். கிஷன் தாஸ் அவரை மீட்கும் முயற்சியில் இறங்குகிறார். கிஷன் தாஸ், ஸ்ம்ருதி வெங்கட் அந்த பிரச்சினையில் இருந்து மீண்டார்களா? ஜோடி சேர்ந்தார்களா? ராஜ் அய்யப்பா நோக்கம் நிறைவேறியதா? என்பதே அதிரடி சஸ்பென்ஸ் கலந்த திரில்லர் படம்.
கிஷன் தாஸ், முதல் நீ முடிவும் நீ படத்துக்கு பிறகு இந்த படத்தில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் அந்த கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார். தெளிவான எந்தவித பதட்டமும் இன்றி எந்த சூழலையும் அணுகும் விதம், அதை அவர் கையாண்ட விதம் சிறப்பு. கொஞ்சம் ஸ்டைலிஷாகவும், கிளாஸான நடிப்பை தந்துள்ளார். அடுத்தடுத்த படங்களிலும் இதே போல நல்ல கதையம்சம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்தால் நல்ல எதிர்காலம் உண்டு. நாயகியாக ஸ்ம்ருதி வெங்கட். முந்தைய படங்களில் இருந்து வேறு ஒரு பரிமாணத்தில் கொஞ்சம் மாடர்ன் பெண்ணாக நல்ல நடிப்பை வழங்கியுள்ளார். காதல் காட்சிகளாகட்டும், பிரச்சினையில் சிக்கிய பின் பதட்டத்தில் இருக்கும் காட்சிகள் ஆகட்டும் நல்ல தேர்ந்த நடிப்பு.
ராஜ் அய்யப்பா, வலிமை படத்தில் அஜித்தின் தம்பியாக அறிமுகமானவர். இந்த படத்தின் தன் நடிப்பு திறமையை காட்ட நல்ல வாய்ப்பு. அதை உணர்ந்து மிகச்சிறப்பாக இருவேறு பரிமாணங்களில் ஸ்கோர் செய்கிறார். பால சரவணன் திரில்லர் மோடில் இருக்கும் படத்தில் தன் காமெடியால் நம்மை ரசிக்க வைக்கிறார். இரண்டாம் பாதியில் ஒரு சீக்வன்ஸில் நம்மை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறார். கீதா கைலாசம் முக்கியமான கதாபாத்திரத்தில் நம் மனதில் நிற்கிறார். மற்ற கதாபாத்திரங்களில் நடித்தவர்களும் தங்கள் பங்கை சிறப்பாகவே செய்திருக்கிறார்கள்.
ராஜா பட்டாசார்ஜி ஒளிப்பதிவு படத்துக்கு மிகப்பெரிய பலம். இரவு காட்சிகளில் அசத்தியிருக்கிறார். பாடல் காட்சிகளில் கலர்ஃபுல் காக்டெயில். அஷ்வின் பின்னணி இசை படத்தை தூக்கி நிறுத்தியிருக்கிறது, குறிப்பாக இடைவேளை காட்சியில் அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றுள்ளது அவரது பின்னணி இசை. டர்புகா சிவாவின் இசையில் பாடல்கள் கேட்பதற்கு இதம். அதை இயக்குனர் காட்சிப்படுத்திய விதமும் ரசிக்க வைக்கிறது.
இயக்குனர் அர்விந்த் ஸ்ரீனிவாசன் திரில்லர் படங்கள் தன் கோட்டை என்பதை இரண்டாம் முறையாக நிரூபித்திருக்கிறார். முதல் காட்சியில் நாயகன், நாயகி காட்சிகளை பேரல்லலாக காட்டிய விதமும் அருமை. முதல் பாதியில் கதையை செட் செய்த விதமும், இரண்டாம் பாதியில் அதற்கான முடிவும், அடுத்தடுத்த திருப்பங்களும் நம்மை சீட் நினியிலேயே இருக்க வைக்கிறது. இரண்டாம் பாதியில் நாயகன் செய்யும் ஒவ்வொரு விஷயமும், அவர் என்ன செய்கிறார் என்ற ஆர்வத்தை தூண்டிக் கொண்டே இருப்பதும், அதை மிகச்சரியாக இறுதியில் இணைத்த விதமும் சிறப்பு. இரண்டாம் பாதி முழுக்கவே த்ரில்லர் பட ரசிகர்களுக்கு பெரும் தீனி. சமூகத்தில் நடக்கும் மிக முக்கியமான பிரச்சினையும் கதையினூடே பேசியிருப்பது பாராட்டுக்குரியது.