கடைக்குட்டி சிங்கம், நம்ம வீட்டுப் பிள்ளை என கிராமத்து குடும்ப கதைகளில் பின்னிப் பெடலெடுக்கும் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ஒரு Rugged love story தான் “தலைவன் தலைவி”. கணவன், மனைவி இடையிலான உறவை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்தப் படம் எப்படி இருக்கு? பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, அதிகம் படிக்காத, குடும்பத்துடன் சேர்ந்து ஹோட்டல் நடத்தும் வரும் விஜய் சேதுபதிக்கு, நித்யா மேனனை திருமணம் பேசி நிச்சயம் செய்கிறார்கள். நித்யா மேனன் விஜய் சேதுபதி இருவரும் மனதளவில் கணவன், மனைவியாக வாழத்துவங்கும்போது ஒரு சில விஷயங்களை காரணம் காட்டி திருமணத்தை நிறுத்த முயற்சிக்க, எதிர்ப்பை மீறி விஜய் சேதுபதியும், நித்யா மேனனும் திருமணம் செய்து கொள்கிறார்கள். நித்யா மேனன் வீட்டிற்கு வந்தவுடன் வீட்டிலும், கடையிலும் அவருக்கு சில முக்கியத்துவம் கிடைப்பது பிடிக்காமல் சேதுவின் அம்மா தீபாவும், தங்கை ரோஷ்ணியும் கடுப்பாகி சில விஷயங்கள் செய்ய, அதன் பின் அவர்களுக்குள் அடிக்கடி மோதல் நடக்கிறது. அம்மா, மனைவி இடையே மாட்டிக் கொண்டு முழிக்கிறார் விஜய் சேதுபதி. நித்யா மேனனும் அடிக்கடி கோபித்துக் கொண்டு அம்மா வீட்டிற்கு போய், திரும்பி வருகிறார். இதற்கிடையில் இருவருக்கும் மகிழினி என்ற அழகிய பெண் குழந்தை பிறக்கிறது. ஒரு கட்டத்தில் சண்டை பெரிதாகி நித்யா மேனன் அவரது அம்மா வீட்டிற்கு போகிறார். அதன் பின் கிட்டத்தட்ட 3 மாதங்கள் கடந்து விடுகிறது. திடீரென குலசாமி கோவிலில் விஜய் சேதுபதிக்கு தெரியாமல் குழந்தைக்கு மொட்டை அடிக்க, அங்கு போய் விஜய் சேதுபதி பிரச்சினை செய்கிறார். அதன் பின் என்ன ஆனது? விஜய் சேதுபதி, நித்யா மேனன் ஒன்று சேர்ந்தார்களா? என்பதே மீதிக்கதை.
விஜய் சேதுபதி, நித்யா மேனன் என இரு பெரும் நடிப்பு ஆளுமைகள் ஒரே படத்தில், ஒரே ஃப்ரேமில் வரும்போது பிரளயமே நிகழ்கிறது. உண்மையாகவே கணவன் மனைவியாக, சண்டைக்கோழிகளாக படம் முழுக்க வாழ்ந்திருக்கிறார்கள். இருவருமே அவர்களின் ஃபேவரைட் கேரக்டரில் கலக்கி எடுத்திருக்கிறார்கள். மொத்த படத்திலும் ஆகாச வீரன், பேரரசியாக மனதில் நிற்கிறார்கள். டாம் & ஜெர்ரி என சொல்வது போல அவர்கள் சண்டை போடும் காட்சிகள் எல்லாம் அதகளம். யோகி பாபு கதை மாந்தர்களை வேடிக்கை பார்க்கும் ஒரு ஆடியன்ஸ் போல அடிக்கும் கவுண்டர்கள் ஒவ்வொன்றும் வெடிச்சிரிப்பு. அவர் வரும் காமெடி காட்சிகள் எல்லாமே நன்றாக ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது.
படம் முழுக்க பல கதாபாத்திரங்கள் பேசப்படும் வகையில் அமைந்திருக்கின்றன. தீபா சங்கர் அம்மா கதாபாத்திரத்தில் சேது, நித்யாவுக்கு இணையாக டஃப் கொடுத்து நடித்திருக்கிறார். அவரது கணவராக சரவணன். தேர்ந்தெடுத்த அளவான நடிப்பு. செம்பன் வினோத் ஜோஸ், ரோஷிணி ஹரிப்ரியன், மைனா நந்தினி, காளி வெங்கட், ஆர்.கே. சுரேஷ், வினோத் சாகர், அருள்தாஸ், ஜானகி சுரேஷ், சென்றாயன், ஜெகன், கல்கி என திரும்பும் பக்கம் எல்லாம் தெரிந்த முகங்கள். அனைவரும் தங்களது கதாபாத்திரத்தில் ஸ்கோர் செய்கிறார்கள்.
சுகுமார் ஒளிப்பதிவு ஒரு கலகலப்பான குடும்ப படத்துக்கு ஏற்ற வகையில் கலர்ஃபுல்லாக இருக்கிறது. கிராமத்திலும், குலசாமி கோவிலும் படம் பிடித்த விதமும் சிறப்பு. சந்தோஷ் நாராயணனின் இசையில் பொட்டல முட்டாயே, ஆகாச வீரன் பாடல்கள் படத்துக்கு ஆணி வேராக அமைந்திருக்கிறது. காட்சிப்படுத்திய விதமும் அழகு. பின்னணி இசை நன்றாக இருக்கிறது. சில இடங்களில் கனிமா பாடல் பிஜிஎம் எல்லாம் வந்து போன உணர்வு. பிரதீப் ராகவ் எடிட்டிங்கும் பாண்டிராஜின் திரைக்கதையை திரையில் சொல்ல மிகச்சிறப்பாக உதவியிருக்கிறது.
இயக்குநர் பாண்டிராஜ், கிராமத்து கதைக்களத்தில் புகுந்து விளையாடுவதில் வல்லவர். கணவன் மனைவி உறவில் எடுத்துக் கொண்ட கதைக்களத்தை சிறப்பான திரைக்கதையோடு கலகலப்பான படமாக வழங்கியுள்ளார். ட்ரைலரில் பார்க்கும்போது என்னடா இது, இத்தனை கதாபாத்திரங்களை மனதில் வைத்துக் கொள்வதே கஷ்டம் என்ற எண்ணம் இருந்தது. ஆனால் படத்தில் பார்க்கும்போது பாண்டிராஜ் கதாபாத்திரங்களை வடிவமைத்த விதத்தால் ஒவ்வொரு கதாபாத்திரமும் தனித்து தெரிகிறது. பாண்டிராஜின் திரைக்கதை உத்தி ரசிக்கும்படி இருந்தது. கோவிலில் ஆரம்பிக்கும் கதையை நான் லீனியரில் ஃபிளாஷ்பேக், பிரசண்ட் என மாற்றி மாறி சொன்ன விதமும் ரசிக்கும்படி இருந்தது. கணவன், மனைவி சண்டை கிழவன் கிழவி ஆனாலும் அப்படியே தான் இருக்கும். சொந்தக்காரர்கள் தான் அதை ஊதி பெரிதாக்கி விவாகரத்து வரை கொண்டு செல்வார்கள் என்பதையும் சொல்லியிருக்கிறார். கணவன் மனைவி பிரச்சினை அவர்களுக்குள்ளே முடிந்து விடும், விவாகரத்து தேவை இல்லை என்பதையும் சொல்லியிருக்கிறார். நிச்சயம் குடும்பத்துடம் போய் பார்க்கலாம்.