வெயில், அங்காடி தெரு உள்ளிட்ட தரமான படங்களை இயக்கிய வசந்தபாலன் இயக்கியிருக்கும் முதல் வெப் சீரீஸ் தலைமைச் செயலகம். கிஷோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, பரத், ஸ்ரேயா ரெட்டி, ரம்யா நம்பீசன், சந்தான பாரதி, நிரூப், ஆதித்யா மேனன், கனி க்ருஸ்தி, தர்ஷா குப்தா, கவிதா பாரதி, நமோ நாராயணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த வெப் சீரீஸை ராதிகா மற்றும் சரத்குமாரின் ராடன் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. வைட் ஆங்கிள் ரவிஷங்கர் ஒளிப்பதிவு செய்ய, ஜிப்ரான் இசை அமைத்திருக்கிறார். அரசியல் கதைக்களத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த சீரிஸ் வருகிற மே 17ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
இந்த சீரிஸ் வட இந்தியாவில் 15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவத்துடன் துவங்குகிறது. பின் அங்கிருந்து சமகாலத்தில் நடக்கும் கதைக்கு தாவுகிறது. தமிழக முதல்வர் அருணாசலம் 15 ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு ஊழல் வழக்கு விசாரணையை எதிர்கொண்டு வருகிறார். இறுதிகட்டத்தை எட்டிய விசாரணை தீர்ப்பை எதிர்நோக்கி நகர்கிறது. ஒரு வேளை முதல்வர் சிறைக்கு சென்றால் அவரின் முதல்வர் நாற்காலியில் யார் அமர்வது என்ற மறைமுக யுத்தம் ஒருபுறம் நடந்து வருகிறது. இதற்கிடையில், ஜார்க்கண்டில் 15 ஆண்டுகளுக்கு முன் நடந்த கொலை வழக்கு சிபிஐ வசம் செல்கிறது. சிபிஐ அதிகாரி நவாஸ் கான் அந்த வழக்கை விசாரிக்கிறார். இதற்கிடையில் சென்னையில் சமீபத்தில் நடந்த கொலை வழக்கை விசாரிக்கிறார் டிஜிபி மணிகண்டன். இந்த மூன்று விஷயங்களும் ஒரு புள்ளியில் இணையும்போது பல திடுக்கிடும் திருப்பங்கள் வெளிவருகின்றன. இதை வைத்து சஸ்பென்ஸ், த்ரில்லர், அரசியல் அதிரடி கலந்து எட்டு எபிசோடுகளில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் வசந்த பாலன்.
முதல்வர் அருணாசலமாக நடிகர் கிஷோர், நல்ல ஒரு தேர்வு, இதற்கு முன் அவர் ஏற்றிராத பாத்திரம். ஆர்ப்பாட்டமில்லாத ஒரு அமைதியான, நம்பிக்கையான கதாபாத்திரம். தன் குடும்ப உறுப்பினர்கள் நலனையும் கவனிக்க வேண்டும், நாட்டின் நலனுக்காக கட்சியையோ அல்லது தமிழ்நாட்டையோ அடகு வைக்கக் கூடாது என்ற ஒரு தலைவனுக்கான குணாதிசயம், பத்திரிக்கையாளரும், தன் அரசியல் ஆலோசகருமான ஸ்ரேயா ரெட்டி கருத்துக்களை கேட்பது, நண்பன் சந்தானபாரதியின் நட்பை, தியாகத்தை மதிப்பது, தன் அரசியல் வாரிசாக யாரை அமர்த்துவது என்ற முடிவை எடுப்பது என ஒரு பேலன்ஸ்டான கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். வெள்ளை வேட்டி சட்டையில் கிஷோரை பார்க்க புதுசாக இருக்கிறது.
இந்த வெப் சீரீஸில் அனைவரையும் தூக்கி சாப்பிடும் கதாபாத்திரம் ஸ்ரேயா ரெட்டியுடையது. தனது ஆளுமை மிக்க நடிப்பால் அதிர வைக்கிறார். ரம்யா கிருஷ்ணனுக்கு பிறகு ஆளுமை மிக்க கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கக் கூடிய நடிகைகள் இல்லையோ என்ற ஒரு சூழலில் அந்த இடத்தை ஸ்ரேயா ரெட்டி பிடிக்கிறார். பத்திரிக்கையாளர், அரசியல் ஆலோசகர், கொள்கை பரப்பு செயலாளர் மற்றும் கிளைமாக்ஸில் வரும் சர்ப்ரைஸ் காட்சி என எல்லா இடங்களிலும் ஸ்ரேயா ரெட்டி முத்திரை பதிக்கிறார்.
அவர்களை அடுத்து ரம்யா நம்பீசன், முதல்வரின் மகளாக, ஆட்சி அதிகார மோகத்தில் சுற்றும் ஒரு கதாபாத்திரம். அப்பாவுக்கு பின் அந்த இடம் தனக்கு தான், அதற்காக என்ன வேணாலும் செய்வேன் என்கிற கதாபாத்திரம், சிறப்பாக செய்திருக்கிறார். அடுத்து நிரூப், முதல்வரின் இரண்டாவது மருமகன். அவருக்கு முதல்வர் ஆசை, அத்துடன் ஒரு பெரும் கடன் பிரச்சினையில் சிக்கிக் கொண்டு அவஸ்தைப்படும் கதாபாத்திரத்தில் பொருத்தமாக இருக்கிறார்.
பரத் கொலை வழக்கை விசாரிக்கும் துணிச்சலான போலீஸ் அதிகாரி. ஆக்ஷன், சேஸிங், எமோஷன் என ரசிக்க வைக்கிறார். தர்ஷா குப்தாவுடனான காதல் காட்சிகளும் ஓகே ரகம். அவரே பரத் உடன் பணி புரியும் சக போலீஸாகவும் வருவது புது ரகம். சந்தானபாரதி முதல்வரின் நண்பராக, கட்சியின் தலைவராக, ஒரு நம்பிக்கையான நேர்மையான அரசியல்வாதியாக ஸ்கோர் செய்கிறார்.
ஆதித்யா மேனன் சிபிஐ அதிகாரியாக வட மாநிலங்களில் சுற்றித் திரிந்து கேஸை முடிக்கும் ஒரு கதாபாத்திரம். அவரின் தோற்றமே பாதி வேலையை முடிக்கிறது. கச்சிதமான தேர்வு. கனி கொற்றவையின் தோழியாக, ஒரு முக்கியமான விஷயத்தை செய்து கொடுக்க சொல்லி மிரட்டும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் ஒரு போராளி. கச்சிதமான சாய்ஸ். கவிதா பாரதி, சாஜி, டெல்லி கணேஷ், நமோ நாராயணன் மற்றும் பலரும் கதாபாத்திரத்துக்கு பொருத்தமாக இருக்கிறார்கள்.
ஜிப்ரான் பின்னணி இசை கதையோடு ஒன்றி நல்ல ஒரு உணர்வை கொடுக்கிறது. வைட் ஆங்கிள் ரவிஷங்கரின் ஒளிப்பதிவு பலம் சேர்க்கிறது. குறிப்பாக வட மாநில காட்சிகளை சிறப்பாக படம் பிடித்திருக்கிறது.
வசந்தபாலன் இயக்கியுள்ள முதல் வெப் சீரீஸ். அதிவும் முழுக்க அரசியல் பின்ன்ணி. அதிகார வேட்கையை அடிப்படையாக கொண்டது. ஆனாலும் தான் பேசும் போராட்ட அரசியலையும் கதையுடன் இணைத்து திரைக்கதை ஆக்கி இருக்கிறார். ஆரம்ப எபிசோடுகளில் வரும் வட மாநில காட்சிகள் எதுக்கு என நினைக்க வைத்தாலும் போகப்போக சூடு பிடிக்கிறது. அதை தமிழக அரசியல் கதையுடன் இணைத்த விதம் சிறப்பு. அரசியல் கதை என்பதாலே பல காட்சிகளை பார்க்கும்போது நடப்பு மற்றும் கடந்த கால அரசியல் நிகழ்வுகள் நம் மனதில் வந்து போகின்ன. ஊழல் வழக்கில் முதல்வர், விபத்தில் சிக்கும் முதல்வர், அரசியல் புரோக்கர்கள் என பலப்பல விஷயங்களை இது அந்த விஷயம், அது இந்த விஷயம் என நம்மை நினைக்க வைக்கிறது. மொத்தத்தில் சமகால அரசியல் சூழலில் அனைவரும் பார்க்கக் கூடிய ஒரு விறுவிறுப்பான அரசியல் திரில்லர் வெப் சீரீஸ் தான் இந்த தலைமைச் செயலகம்.