ஸ்வீட்டி நாட்டி கிரேசி – விமர்சனம்!

அடல்ட் காமெடி படங்கள் தமிழ் சினிமாவில் ரொம்பவே குறைவு. அவ்வப்போது ஏதாவது சினிமாக்கள் எட்டிப் பார்க்கும். அவற்றில் பல முகம் சுழிக்கவும் வைக்கும். அதை எதிர்த்து போர்க்கொடியும் தூக்கப்படும். ஒரு சில படங்கள் “யார் என்ன சொன்னா என்ன” என்ற போக்கில் வசூலை மட்டும் வாரிக் குவித்து விடும். இந்த வாரமும் ‘ஸ்வீட்டி நாட்டி கிரேசி’ என்ற தலைப்பில் அடல்ட் காமெடி படம் ஒன்று வெளியாகி இருக்கிறது. ரசிக்க வைக்கிறதா? முகம் சுழிக்க வைக்கிறதா? பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, நாயகன் த்ரிகுண் காதலில் பிரச்சினை என தற்கொலை செய்து கொள்ள முயற்சிக்க, நண்பர்கள் அதை தடுத்து நிறுத்தி என்ன பிரச்சினை என கேட்கிறார்கள். அவர் பின் கதையை சொல்ல ஆரம்பிக்கிறார். கல்லூரி படிக்கும்போது ஒரு பெண்ணுடன் காதல் வயப்படுகிறார். அவருடன் காமத்தில் இருக்கும்போது தேம்பித் தேம்பி அழுகிறார். என்ன என கேட்க, என்னுடைய டியூஷன் டீச்சர் இனியா உடன் ஏற்கனவே முடிஞ்சுது என சொல்கிறார். கோபத்தில் பிரேக் அப் செய்து விடுகிறார் நாயகி ஸ்ரீஜிதா கோஷ். பின் கொஞ்ச காலத்துக்கு பிறகு மீண்டும் சேர, அதே மாதிரி ஜாலியாக இருக்கும் ஒரு நாளில் பெங்களூர்ல ஒரு ஆண்டியுடன் கனெக்ஷன் ஏற்பட்டது என சொல்ல கடுப்பாகிறார் நாயகி. பின் த்ரிகுண்-ஐ பதிவுத் திருமணம் செய்து கொண்டு சர்ப்ரைஸாக ஊட்டியில் உள்ள வீட்டுக்கு செல்கிறார். அங்கு சென்றால் நாயகனுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. அவர்களின் திருமணத்தை ஏற்றுக் கொண்டார்களா? நாயகனுக்கு என்ன அதிர்ச்சி காத்திருந்தது? என்பதே காமெடி கலந்த படமாக சொல்வதே மீதிக்கதை.

நாயகன் த்ரிகுண். துடிப்பான இளைஞராக கதைக்கு பொருத்தமாக இருக்கிறார். காமெடியிலும் ரசிக்க வைக்கிறார். மூன்று பெண்களுக்கு இடையில் சிக்கிக் கொண்டு முழிக்கும் இளைஞனாக இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். நாயகி ஸ்ரீஜீதா கோஷ் இளமைத் துடிப்புடன் ரசிக்க வைக்கிறார். காதல் காட்சிகளிலும் அவரது அழகால் ரசிக்க வைக்கிறார். டியூசன் டீச்சராக வரும் இனியா தன் வழக்கமான நடிப்பாலும் அழகாலும் கவர்ச்சியாலும் ரசிகர்களை கவர்கிறார். ஆண்டி கதாபாத்திரத்தில் வரும் சுந்தரா ட்ராவல்ஸ் ராதா அவரது நடிப்பால் கதாபாத்திரத்திற்கு வலு சேர்க்கிறார். மூன்று பேருமே படத்திற்கு ஒவ்வொரு விதத்தில் அழகு சேர்க்கிறார்கள்.

முதல் பாதி முழுக்க நாயகன் மற்றும் மூன்று பெண்களை சுற்றி நகர்கிறது கதை. இரண்டாம் பாதியில் கிளுகிளுப்போடு காமெடியை சேர்க்க தம்பி ராமையா, சத்யன் என இரண்டு அனுபவமிக்க நடிகர்கள் சேர்ந்து படத்தை மேலும் ரசிக்க வைக்கிறார்கள். சாம்ஸ், ரவி மரியா, மறைந்த மதன் பாப், தெலுங்கு நடிகர் அலி என மற்ற நடிகர்களின் பங்கும் சிறப்பு.

இசையமைப்பாளர் அருணகிரி அடல்ட் கமெடி படத்துக்கு ஏற்ற பின்னணி இசையை தந்து ரசிக்க வைத்துள்ளார். பாடல்கள் ஓகே ரகம். விஜய ஸ்ரீ ஒளிப்பதிவு விரசம் இல்லாமல் கிளுகிளுப்பை மட்டுமே பதிவு செய்து காட்சிகளை அழகாக்குகிறது. குறிப்பாக மலைப்பகுதி காட்சிகள் பார்வையாளர்களை கவரும் வகையில் அமைந்துள்ளன.

இயக்குனர் ராஜசேகர். இளம் தலைமுறையை குறிவைத்து பெரிய அளவில் முகம் சுழிக்க வைக்காத ஒரு அடல்ட் காமெடி படமாகவே தந்திருக்கிறார். அதுவும் காதலர் தினத்துக்கு கச்சிதமாக கொண்டு வந்திருக்கிறார்கள். இளம் ஜோடிகள் தியேட்டருக்குள் சென்றாலே ஜாலியாக பார்த்து விட்டு வரக்கூடிய ரகளையான படம் தான். படத்தில் வரும் ஒவ்வொரு காட்சியும் நம்மை சிரிக்க வைப்பதோடு கிளுகிளுப்பையும் ஏற்படுத்துகிறது. தம்பி ராமையா, சத்யன், ராதா, இனியா, அலி என அனுபவமிக்க நடிகர்களின் நடிப்பும் படத்தை ரசிக்க வைக்கிறது. இரட்டை அர்த்த வசனங்களும், காமெடியுமே கூட ரசிக்கும்படியே அமைந்திருக்கிறது. ஆனா ஒரே ஒரு எச்சரிக்கை குடும்ப ரசிகர்கள் தப்பித் தவறி தியேட்டருக்குள் சென்று விடக் கூடாது என்பது மட்டுமே நமக்குள் இருக்கும் பயம். மொத்தத்தில், “ஸ்வீட்டி நாட்டி கிரேசி” கலகலப்பான பொழுதுபோக்கு அம்சங்களுடன் வெளியாகியுள்ள அடல்ட் காமெடி படம். Adults only ரசிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *