ஜோ படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் ரியோ ராஜ் ஹீரோவாக நடித்திருக்கும் திரைப்படம் தான் “ஸ்வீட்ஹார்ட்”. இன்றைய மாடர்ன் யுக காதல் கதையாக வந்திருக்கும் இந்த படத்தை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தயாரித்திருக்கிறார். அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ் சுகுமார் இயக்கியுள்ளார். ஜோ வெற்றி மகிழ்ச்சியில் இருக்கும் ரியோ அந்த வெற்றியை தக்க வைத்துக் கொண்டாரா? பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, கணவருடன் வாழ முடியாமல் அவரையும், தன் குழந்தைகளையும் பிரிந்து போகிறார் ரியோவின் அம்மா. அப்போது ரியோவிற்கு 5 வயது. தாய் இல்லாமல் வளரும் ரியோ, அவரின் 12வது வயதில் தந்தையையும் இழக்கிறார். தனிமையிலேயே வளர்ந்த ரியோ நாயகி கோபிகா ரமேஷை சந்திக்க, இருவரும் காதலிக்கு துவங்குகிறார்கள். ஆனாலும் ரியோவுக்கு ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து இறுதி வரை காதலோடு வாழ முடியாது என்ற எண்ணம் மனதில் ஆழத்தில் இருந்து கொண்டே இருக்கிறது. ஒரு கட்டத்தில் கோபிகா கர்ப்பமாக, அதனால் அதிர்ச்சி அடையும் ரியோ கருவை கலைக்க சொல்கிறார். கோபிகாவிற்கு அதில் உடன்பாடு இல்லை. அதன் பின் என்ன நடந்தது? ரியோ காதலை உணர்ந்தாரா? கருவை கலைக்கும் முடிவு என்ன ஆனது? என்பதே மீதிக்கதை.
நாயகன் ரியோ, மற்றுமொரு காதல் படத்தில். இந்த முறை கொஞ்சம் மாடர்ன் இளைஞராக, டாக்ஸிக் ஹீரோ குணாதிசயங்களை கொஞ்சம் ஒத்த ஒரு கதாபாத்திரம். எதையும் கண்டுகொள்ளாத, காதல் மீது நம்பிக்கை இல்லாத ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கிளைமாக்ஸ் எமோஷன் காட்சிகளில் ரியோ நம் மனதை தொடுகிறார். ஆனாலும் ஆரம்ப காட்சியில் இருந்து கிளைமாக்ஸ் முன்பு வரை அந்த கதாபாத்திரம் ஏனோ கொஞ்சம் அந்நியப்படுகிறது. நாயகி கோபிகா ரமேஷ். தமிழில் முதன்முறையாக ஒரு காதல் படத்தில், நல்ல நடிப்பை வழங்கியுள்ளார். அவரின் தோற்றம் மற்றும் ரியாக்ஷன்களிலேயே பல இடங்களில் ஸ்கோர் செய்கிறார். ஹவுஸ் அரெஸ்ட் ஆகி, வீட்டாரிடம் அவர் செய்யும் சில திருட்டு விஷயங்கள் ரசிக்க வைக்கிறது.
நாயகி அப்பாவாக வரும் ரெஞ்சி பணிக்கர், நண்பராக வரும் அருணாசலேஸ்வரன், நண்பனின் காதலியாக வரும் ஃபௌஸி, நாயகன் அக்கா, நாயகியின் அக்கா, அக்காவின் குழந்தை, தாத்தாவாக வரும் சுரேஷ் சக்கரவர்த்தி என மற்ற நடிகர்களும் நல்ல பங்களிப்பை தந்துள்ளனர். ரெடின் கிங்க்ஸ்லி ஒரு காட்சியில் வந்து போகிறார்.
யுவன் ஷங்கர் ராஜா தயாரித்த படங்கள் என்றால் அவரின் இசை கொஞ்சம் தூக்கலாகவே இருக்கும். காதல் படங்களின் இளவரசன் என சொல்லப்படும் யுவன் இந்த படத்திலும் நம்மை படத்துடன் ஒன்ற வைக்கிறார் தன் இசையால். பாடல்கள் எல்லாமே நம்மை வருடிச் செல்கிறது. பின்னணி இசை பெரும் பலம். தாய்மை பாடல், கிளைமாக்ஸ் பின்னணி இசை என நம்மை அவருடன் பயணிக்க வைத்திருக்கிறார். பாலாஜி சுப்ரமணியம் ஒளிப்பதிவு கலர்ஃபுல்லாகவும், படத்தை ரிச்சாகவும் காட்டுகிறது. தமிழரசன் படத்தொகுப்பு கதையை சொல்ல முயற்சிக்கிறது. ஆனாலும் துண்டு துண்டாக வரும் நான் லீனியர் எடிட்டிங் ஏன் என நினைக்க வைக்கிறது.
அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ் சுகுமார். காதலர்களுக்கு இடையேயான ஒரு பிரச்சினையை எடுத்துக்கொண்டு அதற்கு திரைக்கதை அமைத்து இளைஞர்களை கவரும் படத்தை கொடுக்க முயற்சி செய்திருக்கிறார். திரைக்கதையில் பல இடங்கள் தொய்வாக இருந்ததை கொஞ்சம் சரி செய்திருக்கலாம். ஆனாலும் கடைசி 30 நிமிடங்களில் அந்த உணர்வை மறக்கடிக்க வைக்கிறார். அந்த எமோஷனல் காட்சிகள் நம்மை ஒன்ற வைக்கிறது. சில இடங்களில் லவ்வர், பேச்சிலர் படங்களை நமக்கு ஞாபகப்படுத்தினாலும் கொஞ்சம் ஃப்ரெஷாகவே இருக்கிறது. இளைஞர்கள் சென்று ரசிக்கக் கூடிய ஒரு படமாக அமைந்துள்ளது இந்த “ஸ்வீட்ஹார்ட்”.