தமிழ் சினிமாவில் பல நேரங்களில் சின்ன பட்ஜெட்டில் உருவாகும் பல படங்கள் நம்மை ஆச்சர்யப்படுத்தும். அந்த வகையில் சின்ன பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் ஒரு ஃபேண்டஸி திரைப்படம் தான் ராக்கெட் ட்ரைவர். அறிமுக இயக்குநர் ஸ்ரீ ராம் அனந்த ஷங்கரின் இயக்கியிருக்கும் இந்த படம் ஒரு சுவாரஸ்யமான விஷயத்தை பேசியிருக்கிறது. அது ரசிகர்களை கவர்ந்ததா? ஆச்சர்யப்படுத்தியதா? பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, சென்னையில் வசிக்கும் விஸ்வத், ஒரு ஆட்டோ ட்ரைவர். ஆனாலும் இயற்பியலில் குறிப்பாக ராக்கெட் துறையில் அலாதி ஆர்வம், சாதிக்க வேண்டும் என்ற லட்சியம் உண்டு. தன் கனவை சுமந்து ஆட்டோவை ஓட்டிக் கொண்டு இருக்கும் விஸ்வத்துக்கு யாரை கண்டாலும் எரிச்சல், அன்றாடம் பார்க்கும் மனிதர்களை கண்டாலே செம்ம கடுப்பாகிறார். முன்னாள் இந்திய குடியரசு தலைவரும், அணு விஞ்ஞானியுமான அப்துல்கலாம் அவரின் ரொல் மாடல். அவர் உருவத்தை தான் தன் ஆட்டோவில் ஸ்டிக்கராக ஒட்டியிருக்கிறார். ஒரு நாள் இளம் வயது அப்துல் கலாமை ஒரு பயணியாக வந்து ஆட்டோவில் ஏறுகிறார். ராமேஸ்வரத்திலிருந்து மெட்ராஸ் யுனிவர்சிட்டி பேராசிரியர் ஒருவரை சந்திக்க சென்னை வந்ததாக சொல்கிறார். முதலில் நம்ப மறுக்கும் விஸ்வத் பின்னர் அவரின் தோற்றம், பேச்சு, நடவடிக்கையை பார்த்து நம்ப தொடங்குகிறார். பஸ் ஏற்றி ராமேஸ்வரத்துக்கே அனுப்பி விட்டால் சரியாகி விடும் என நினைக்கிறார். பின் அவரும் அவருடனே பஸ்ஸில் பயணிக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. ஆனாலும் இப்போ அப்துல் கலாம் டைம் டிராவல் செய்து வந்திருக்கிறார் என்றால் ஏதோ காரணம் இருக்குமல்லவா? என அதற்கான காரணத்தை தேடத் துவங்குகிறார்கள். காரணத்தை கண்டுபிடித்தார்களா? அவரின் டைம் டிராவல் பயணம் நிறைவடைந்ததா? என்ன விஷயத்தை நிறைவேற்ற அவர் வந்தார்? என்பதை நல்ல ஒரு ஃபீல் குட் ட்ராமாவாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் ஸ்ரீ ராம் அனந்த ஷங்கர்.
முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விஸ்வத் எரிந்து விழும், இயலாமையில் வாழும் இளைஞராக நன்றாகவே நடித்திருக்கிறார். நாயகனை விட 6 வயது மூத்தவராக நடித்திருக்கும் நடிகை சுனைனா கதாபாத்திரம் அவ்வப்போது வந்து தேவையான அட்வைஸை போட்டு விட்டு செல்கிறார். இளம் வயது ஏபிஜே அப்துல் கலாமாக நடித்திருக்கும் நாக விஷால் கச்சிதமான தேர்வு. தோற்றத்தில் அப்படியே இருக்கும் அவர் நடிப்பிலும் ஸ்கோர் செய்கிறார். அப்துல் கலாமின் நண்பர் சாஸ்திரியாக நடித்திருக்கும் மூத்த நடிகர் காத்தாடி ராமமூர்த்தியின் நடிப்பு படத்துக்கு கூடுதல் பலம்.
டைம் டிராவல், பேண்டஸி படத்துக்கு உரிய ஒளிப்பதிவை வழங்கியிருக்கிரார் ஒளிப்பதிவாளர் ரெஜிமல் சூர்யா தாமஸ். 1948 காலகட்டத்தை காட்டிய விதமும் அருமை. இசையமைப்பாளர் கௌஷிக் கிரிஷ் இசையும் படத்துக்கு பலம் சேர்க்கிறது.
ஒரு ஃபேண்டஸி கதையை, மிக எளிமையாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் ஸ்ரீராம். சின்ன பட்ஜெட்டில் இப்படிப்பட்ட கான்செப்டையும் சொல்ல முடியும் என்ற அவரின் நோக்கமே பாராட்டுக்குரியது. சிறிய முதலீட்டில் எடுத்துக் கொண்ட கதையை மிக நேர்த்தியாக தந்திருக்கிறார். படத்தின் முதல் பாதியில் நாயகன் விஸ்வத் வாழ்க்கை சம்பந்தப்பட்ட ஆரம்ப காட்சிகள் சுவாரஸ்யமாக நகர்ந்தாலும், கலாம் வரும் ஆரம்ப காட்சிகள் கொஞ்சம் சலிப்பை தருவது உண்மை. இரண்டாம் பாதியில் அவர்களின் பயணம் கொஞ்சம் சுவாரசியத்தை கூட்டுகிறது, காத்தாடி ராமமூர்த்து வரும் காட்சிகளும், 1948 கால காட்சிகளும் நம்மை கொஞ்சம் ரசிக்க வைக்கிறது, நல்ல படம் பார்த்த திருப்தியையும் அளிக்கிறது.